12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க தமிழக மருத்துவத்துறை சார்பில் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
2023-24ஆம் கல்வியாண்டிற்கான 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதில் 94.56 சதவீத மாணவர்கள் தேர்ச்சி பெற்று இருந்தனர். இந்த பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத 51,919 மாணவர்களுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கப்படும் என தமிழக மருத்துவத்துறை சார்பாக இன்று (மே 6) அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுத்தொடர்பாக, தமிழக மருத்துவத்துறை வெளியிட்ட அறிக்கையில், “
104 என்ற அலைபேசி எண் மூலம் மருத்துவ உதவி மற்றும் தகவல் மையம் வாயிலாக பொதுமக்களுக்கு உடல் நலம் குறித்த அறிவுரைகள், மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.
இதேபோன்று 14416 அழைப்பு மையம் (நட்புடன் உங்களோடு மனநல சேவை) மன அழுத்தத்தில் இருந்து விடுபெற்று மன நல ஆலோசனை பெறுவதற்காக உருவாக்கப்பட்டது.
தமிழக அரசின் முன்னோடித் திட்டத்தின் மூலம் ‘104’ – தொலைபேசி மருத்துவ உதவி தகவல் மையம் மூலம் 2020-21 கல்வியாண்டில் நீட் தேர்விற்கு பதிவு செய்த 1,10,971 மாணவர்களுக்கும், 2021-22 கல்வியாண்டில் நீட் தேர்விற்கு பதிவு செய்த 1,45,988 மாணவர்களுக்கும் மனநல ஆலோசனை வழங்கப்பட்டது.
மேலும், 2022ஆம் ஆண்டு தமிழகத்தில் நட்புடன் உங்களோடு மனநல சேவை மையம் தொடங்கப்பட்டது.
இதன்மூலம் 2022-23 கல்வியாண்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கும் சேவையை தமிழ்நாடு அரசு செயல்படுத்தியது.
இதன்படி 2022-23 பொதுத்தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களான 46,932 பேருக்கு மன நல ஆலோசனை வழங்கப்பட்டது. இவர்களில் 146 மாணவர்கள் அதிக மன அழுத்தம் உள்ளவர்களாக அடையாளம் காணப்பட்டு அவர்களுக்கு தொடர்ந்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, 2022-23 கல்வியாண்டில் நீட் தேர்வு எழுதி குறைந்த குறியீட்டு மதிப்பெண்கள் பெற்ற 65,823 மாணவர்களுக்கு தொலைபேசி மருத்துவ உதவி மையம் மற்றும் நட்புடன் உங்களோடு மனநல சேவை மையங்கள் மூலம் மனநல ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
அதனடிப்படையில், 2023-24 கல்வியாண்டில் 7,60.606 மாணவர்கள் பிளஸ் 2 வகுப்பு பொதுத்தேர்வு எழுதியிருந்தனர். அதில் 51,919 மாணவர்கள் தேர்ச்சி பெறாதவர்கள். இவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்கப்பட உள்ளது.
இச்சேவையானது சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை, 104 – தொலைபேசி மருத்துவ உதவி தகவல் மையம் மற்றும் 14416 – நட்புடன் உங்களோடு மனநல சேவை மையம் ஆகியவை இணைந்து வழங்குகிறது.
இதில், சுகாதாரத்துறை மூலம் 30 இருக்கைகள் கொண்ட 100 மனநல ஆலோசகர்களைக் கொண்டு ஆலோசனை வழங்கப்படும்.
104- தொலைபேசி மருத்துவ உதவி தகவல் மையம் மூலம் 10 இருக்கைகளுடன் டி.எம்.எஸ். வளாகத்தில் 30 மனநல ஆலோசகர்களைக் கொண்டு ஆலோசனை வழங்கப்படும்
14416 – நட்புடன் உங்களோடு மனநல இரண்டாம் சேவை மையமானது கீழ்ப்பாக்கத்தில் உள்ள அரசு மன நல மருத்துவமனையில் 10 இருக்கைகளுடன் 30 மனநல ஆலோசகர்கள், 3 மருத்துவ உளவியல் ஆலோசகர்கள் மற்றும் 1 மனநல மருத்துவரை கொண்டு செயல்படும்.
இதன்மூலம், அதிக மன அழுத்தம் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கு தொடர் ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும், மன அழுத்தத்திலிருந்து விடுபெறுவதற்காக மாவட்ட மனநல திட்டத்தின் கீழ் மனநல உளவியலாளர்கள், மனநல மருத்துவர், சமூக ஆர்வலர்கள் கொண்ட குழுக்கள் மூலம் ஆலோசனை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கும் மன அழுத்ததில் இருந்து விடுபட ஆலோசனை வழங்கப்படும். மனநல ஆலோசனை பெறுவதற்கு ‘104’, ‘14416’ என்ற எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம்” என தமிழக மருத்துவத்துறையால் வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஜெயக்குமார் தனசிங் கொலை…போஸ்ட்மார்டம் ரிப்போர்ட்… வெளிவராத விசாரணைத் தகவல்கள்!
மணல் குவாரி வழக்கு: அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!