வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு தமிழகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் இன்று (டிசம்பர் 23) அதிகாலை சொர்க்கவாசல் திறக்கப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் மார்கழி வளர்பிறையின் ஏகாதசி, வைகுண்ட ஏகாதசியாக கொண்டாடப்படுகிறது. ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் கடந்த டிசம்பர் 12-ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி திருவிழா தொடங்கியது. பகல்பத்து வைபவத்தின் கடைசி நாளான நேற்று (டிசம்பர் 22) உற்சவர் நம்பெருமாள் மோகினி அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் எழுந்தருளினார்.
இன்று ரத்தின அங்கி, கிளி மாலை, பாண்டியன் கொடை, ஆகிய சிறப்பு அலங்காரத்தில் மூலஸ்தானத்தில் இருந்து உற்சவர் நம்பெருமாள் அதிகாலை 3.30 மணிக்கு புறப்பட்டார். தொடர்ந்து சந்தன மண்டபம், ராஜமகேந்திரன் திருச்சுற்று, நாழிக்கோட்டான் வாசல் வழியாக தங்க கொடிமரம் பிரதட்சணமாக இரண்டாம் பிரகாரமான குலசேகரன் திருச்சுற்று வழியாக பரமபதவாசல் வந்தார்.
வேத விற்பனர்கள் வேதம் ஓத அதிகாலை 4.45 மணிக்கு சொர்க்கவாசல் திறக்கப்பட்டு நம்பெருமாள் வெளியே வந்தார். சொர்க்கவாசல் விழாவை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோவிலில் குவிந்தனர். ரங்கா…ரங்கா…என முழக்கமிட்டு பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
இதேபோல திருப்பதி ஏழுமலையான் கோவில், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில், மதுரை மேலூர் சுந்தரராஜ பெருமாள் கோவில், கோவை அரங்கநாதர் கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் அழகர்கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களில் சொர்க்கவாசல் இன்று திறக்கப்பட்டது. வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெருமாள் கோவில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…