அண்ணா பல்கலைக்கழகத்தில் இந்த ஆண்டு செமஸ்டர் தேர்வு கட்டணம் உயர்த்தப்படாது என்று தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி இன்று (நவம்பர் 17) தெரிவித்துள்ளார்.
விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “அண்ணாமலை பல்கலைக்கழகம் அரசுடைமையாக்கப்படுவதற்கு முன்பாக தனியார் பல்கலைக்கழகமாக இருந்தது. அப்போது யுஜிசி, ஏஐசிடிஇ வகுத்துள்ள தகுதிகளுக்கு மாறாக 56 துணை பேராசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களை தகுதி நீக்கம் செய்ய 2019-ஆம் ஆண்டு சிண்டிகேட் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு நிலுவையில் இருந்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்றார்கள். நீதிமன்றமும் தகுதியில்லாதவர்களை பேராசிரியர்களாக நியமித்தது தவறு என்று சுட்டிக்காட்டியுள்ளது. அதனடிப்படையில் தான் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் சிண்டிகேட் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 56 துணை பேராசிரியர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.
தனியார் பல்கலைக்கழகமாக இருந்தபோது அதிகளவு பேராசியர்களை நியமித்திருந்தார்கள். அரசுடையாக்கப்பட்ட பின்பு நிதிநிலைமையும் மிக மோசமாக இருந்தது. 10 ஆண்டுகளுக்கு மேலாக தகுதியை மீறி பணியாற்றியுள்ளனர். இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
அண்ணா பல்கலைக்கழகத்தில் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் பொன்முடி, “அனைத்து பல்கலைக்கழகங்களிலும் தேர்வு கட்டணம் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதனால் அண்ணா பல்கலைக்கழகத்தில் ரூ.150 தேர்வு கட்டணத்தை ரூ.225-ஆக உயர்த்திவிட்டார்கள்.
இந்த செமஸ்டருக்கு தேர்வு கட்டணம் உயர்த்தப்படாது. துணை வேந்தர்களுடன் ஆலோசனை செய்து அனைத்து பல்கலைக்கழகத்திற்கும் ஒரே தேர்வு கட்டணத்தை நிர்ணயிக்க அடுத்த ஆண்டிலிருந்து ஏற்பாடு செய்யப்படும்” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மத்திய ஆட்சியாளர்களால் அரசியலமைப்பு சட்டத்திற்கு ஆபத்து: ஸ்டாலின்
’நூலகம்’: விஜய் மக்கள் இயக்கத்தின் அடுத்த மூவ்!