அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களின் தலைவிகளுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
திமுகவின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின், குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி தொடங்கிவைத்தார்.
1 கோடியே 6 லட்சம் பெண்கள் இத்திட்டத்தில் பயன்பெறும் நிலையில், தகுதி இருந்தும் மகளிர் உரிமைத் தொகை பெற முடியாமல் இருப்பவர்கள் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்தது.
அப்படி மேல்முறையீடு செய்யச் செல்லும் இடங்களில் பெண்கள் அலைக்கழிக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “இந்த திட்டத்துக்காக ஒட்டுமொத்தமாக 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறபட்ட நிலையில், அவற்றில் 1.06 கோடி விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்கப்பட்டன. மீதமுள்ள 57 லட்சம் விண்ணப்பங்களை தமிழக அரசு தள்ளுபடி செய்து விட்ட நிலையில், அதற்கான காரணம் என்ன? என்பது குறித்து அரசுத் தரப்பில் வெளிப்படையான விளக்கம் அளிக்கப்படவில்லை.
ஏற்கப்படாத விண்ணப்பங்களுக்கு சொந்தக்காரர்களான 57 லட்சம் பேரும் கோட்டாட்சியர்களிடம் மேல்முறையீடு செய்யலாம் என்று தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
அதற்காக அமைக்கப்பட்டுள்ள சிறப்பு முகாம்களிலும், தமிழக அரசின் பொது சேவை மையங்கள் வழியாகவும் கடந்த 18-ஆம் நாள் முதல் மேல்முறையீடு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.
அங்கு அவர்கள் மரியாதைக்குறைவாக நடத்தப்படுவதுடன், தொழில்நுட்பக் குறைபாடு உள்ளிட்ட காரணங்களைக் காட்டி அலைக்கழிக்கப் படுகின்றனர். இது தமிழ்நாட்டு ஏழைக் குடும்பத்து பெண்களிடம் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல ஊர்களில் அதிக வருமானம், அதிக சொத்துகள் உள்ள குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டிருப்பதாகவும், ஆனால், வறுமையில் வாடும் தங்களின் மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்பட்டிருப்பதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
ஒரே மாதிரியான சூழலில் வாழும் பெண்களில் ஒருவருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்கப்பட்டு, இன்னொருவருக்கு அது மறுக்கப்பட்டால், அது பாதிக்கப்பட்ட மக்களிடம் பெரும் வெறுப்பையும், கோபத்தையும் ஏற்படுத்தும் என்பது கடந்த கால அனுபவங்களில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம். இதை அரசு மனதில் கொள்ள வேண்டும்.
மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தில் நிகழும் தவறுகள் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை தமிழக அரசும் உணர்ந்திருக்கிறது. அதனால் தான் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு எந்த இலக்கும் நிர்ணயிக்கப்படவில்லை என்றும், மகளிர் உரிமைத் தொகைக்காக இதுவரை விண்ணப்பம் செய்யாதவர்கள் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
மகளிர் உரிமைத் தொகை என்பதே அனைவருக்கும் அடிப்படை வருவாய் (Universal Basic Income) என்ற தத்துவத்தின் அடிப்படையிலானது ஆகும். பல நாடுகளில் இந்த உரிமைத் தொகை திட்டம் அனைவருக்கும் தான் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
திமுகவின் தேர்தல் அறிக்கையிலும் கூட இந்த திட்டம் அனைவருக்கும் செயல்படுத்தப்படும் என்று தான் கூறப்பட்டிருந்ததே தவிர, கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டு செயல்படுத்தப்படும் என்று எந்த இடத்திலும் குறிப்பிடப்படவில்லை.
அதற்கு மாறாக, மொத்த குடும்பங்களின் எண்ணிக்கையில் பாதிக்கும் குறைவாகவும், விண்ணப்பித்தவர்களில் மூன்றில் இரு பங்கிற்கும் குறைவானவர்களுக்கும் மட்டும் உரிமைத் தொகை வழங்குவது எந்த வகையிலும் சரியல்ல.
அதுமட்டுமின்றி, இந்தியாவில் பொதுவினியோகத் திட்டத்தை வருமான வரம்பு இல்லாமல் அனைவருக்கும் செயல்படுத்திய முதல் மாநிலம் தமிழ்நாடு தான். அதற்காக உச்சநீதிமன்றத்தின் பாராட்டுகளையும் தமிழகம் பெற்றது.
அதே அணுகுமுறை தான் மகளிர் உரிமைத் தொகை வழங்குவதிலும் தொடர வேண்டும். அதன்படி, தமிழ்நாட்டில் அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பங்களின் தலைவிகளுக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை வழங்க வேண்டும். குறைந்தபட்சம், ஏற்கனவே விண்ணப்பித்தவர்களுக்கும், இனி விண்ணப்பிக்க இருப்பவர்களுக்கும் எந்த வகையான கட்டுப்பாடும் இல்லாமல் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
பிரியா
அக்டோபரில் வெளியாகிறது சாம்சங் கேலக்சி S23 FE!