வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் டிசம்பர் 9 ஆம் தேதி கரையைக் கடக்கும் என்றும் புயல் கரையைக் கடக்கும் போது காற்றின் வேகம் வலுவிழந்திருக்கும் என்று வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், “மாண்டஸ் புயல் 9 ஆம் தேதி காலை வட தமிழகம் அருகில் கரையைக் கடக்கும். இதனால் மேற்கு பகுதியில் அடர்ந்த மேகங்கள் இருக்கும்.
நாளை (டிசம்பர் 8) மாலையிலிருந்தே கடலோர மாவட்டங்களில் மழை தொடங்குவதற்கு வாய்ப்பு இருக்கிறது. இந்த மழையானது டிசம்பர் 10ஆம் தேதி வரை பெய்ய வாய்ப்புள்ளது.
மாமல்லபுரம் – பழவேற்காடு இடையில் கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புயல் கரையை நெருங்கும் போது காற்றின் வேகம் வலுவிழந்திருக்கும். மிகக் கனமழைக்கு வாய்ப்பிருக்கிறது.
சென்னையைப் பொருத்தவரை நாளை மழை தொடங்கி 10 தேதி காலை அல்லது மதியம் வரை மழை நீடிக்கும். இந்த மூன்று நாட்களுமே அதிகாலை நேரங்களில் கனமழை பெய்ய வாய்ப்பிருக்கிறது.
புயல் கரையைக் கடந்த பிறகு வடதமிழகத்தில் உள்ள வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை கடந்து அரபிக் கடலை நோக்கிச் செல்கின்றது.
அரபிக் கடலை நோக்கிச் செல்லும் போது நீலகிரி, ஈரோடு மற்றும் மேற்கு தொடர்சி மலை அருகே இருக்கக் கூடிய மாவட்டங்களில் கனமழை பெய்யும்.
புயல் மேற்கு – வடமேற்கு திசையில் இருந்து உள்ளே நகர்வதால் தென் மாவட்டங்களில் மழை இருக்காது. டிசம்பர் 12, 13 ஆம் தேதிகளில் தென் மாவட்டங்களில் மழையை எதிர்பார்க்கலாம்” என்று கூறியுள்ளார்.
மோனிஷா
படக்குழுவினருக்கு கார்த்தி வழங்கிய காஸ்ட்லி பரிசு!
ஜவாஹிருல்லா திடீர் இலங்கை பயணம்!