மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்: மதுரையில் குவிந்த பக்தர்கள்!

தமிழகம்

உலகப்பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் வெகுவிமர்சையாக இன்று (ஏப்ரல் 21) நடைபெற்றது.

இந்தாண்டு மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவிலின் சித்திரை திருவிழா ஏப்ரல் 12-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஒவ்வொரு நாளும் அம்மனும் சுவாமியும் வெவ்வேறு வாகனங்களில் எழுந்தருளி நான்கு மாசி வீதிகளிலும் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றனர்.

விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான 8-ஆம் நாளில் மீனாட்சி அம்மன் பட்டாபிஷேகம் நேற்று முன்தினமும், 9ஆம் நாள் நிகழ்வாக நேற்றிரவு திக் விஜயமும் நடைபெற்றது

இந்நிலையில், சித்திரை திருவிழாவின் 10-ஆம் நாள் நிகழ்வான விழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணத்தை முன்னிட்டு, சுவாமியும் அம்மனும் இன்று அதிகாலை அழகிரிசாமி நாயுடு, சூறாவளி சுப்பையயா், கல்யாண சுந்தர முதலியார் மண்டகப்படிகளில் எழுந்தருளிய பின்னர் நான்கு சித்திரை வீதிகளில் சுற்றி வலம் வந்தனர்

பின்னர் முத்துராமய்யர் மண்டபத்தில் சுவாமியும், அம்மனும் கன்னி ஊஞ்சலாடிய பின்பு திருக்கல்யாண மேடையில் பவளக்கனிவாய் பெருமாளும், சுப்பிரமணியசுவாமி தெய்வானையுடனும் வந்திருந்து மணமேடையில் எழுந்தருளினர்.

இதனை தொடர்ந்து கோவில் வடக்கு ஆடி, மேல ஆடி சந்திப்பில் நறுமணம் மிக்க வெட்டிவேர்கள் மற்றும் பல வகை வண்ணப்பூக்களாலும், பச்சரியாலும் அலங்கரிப்பட்ட திருக்கல்யாண மேடையில் மணக்கோலத்தில் மீனாட்சியம்மனும், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடனும் தனித்தனியாக எழுந்தருளினர்.

தொடர்ந்து விநாயகர் வழிபாடு உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் செய்யப்பட்ட பின்னர் பாலிகை இடும் நிகழ்ச்சி நடைபெற்றது

இதனையடுத்து சுவாமி மற்றும் அம்மனின் சார்பில் பிரதிநிதிகளான சிவாச்சாரியார்களுக்கு ரக்சாபந்தன் எனப்படும் காப்புகட்டிய பின்னர் மீனாட்சியம்மனுக்கும், சுந்தரேசுவரருக்கும் காப்புகட்டும் வைபவமும் அதனை தொடர்ந்து பல்வேறு பூஜைகளும் நடைபெற்றது.

தொடர்ச்சியாக மீனாட்சியம்மன் சார்பிலும், சுந்தரேசுவரர் சார்பிலும் பிரதிநிதிகளாக இருந்து சிவாச்சாரியார்கள் மாலை மாற்றும் வைபவம் நடைபெற்றதையடுத்து சுவாமிக்கும் அம்மனுக்கும் கோவில் சார்பில் பட்டு சாத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றது

இதனை தொடர்ந்து வேதமந்திரங்கள் முழங்க, ஹோமம் வளர்க்கப்பட்டு மங்கல வாத்தியங்கள் வாசிக்க வெகுவிமர்சையாக பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மத்தியில் மீனாட்சியம்மனுக்கு வைரத்தால் ஆன திருமங்கல நாண் அணிவிக்கப்பட்டு திருக்கல்யாணம் வெகுவிமர்சையாக கோலாகலமாக நடைபெற்றது.

அப்போது கோவிலில் கூடியுள்ள பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் விண்ணதிர பக்தி கோஷம் முழங்கினர். மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் நடைபெற்றவுடன் பெண்கள் தங்களது மாங்கல்யத்தை புதுப்பித்துகொண்டனர்.

திருக்கல்யாணத்தின்போது மீனாட்சியம்மனை பவளகனிவாய் பெருமாள் தாரைவார்க்கும் நிகழ்வும் நடைபெற்றது. மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாண நிகழ்வை தொடர்ந்து சுவாமிக்கும், அம்மனுக்கும் பல்வேறு தீபாராதனைகள் காட்டப்பட்டது. பின்னர் ஓதுவார்களால் பன்னிரு திருமுறைகள் ஓதப்பட்டது.

திருகல்யாணத்தையடுத்து கோவிலை சுற்றி பல்வேறு பகுதிகளிலும் பக்தர்களுக்கு தாலிக்கயிறும் , குங்குமம் வழங்கப்பட்டது.

திருக்கல்யாண நிகழ்ச்சிக்காக 5 டன் வண்ண மலர்கள் குறிப்பாக மதுரை மல்லிகை மற்றும் திண்டுக்கல், நிலக்கோட்டை, ஸ்ரீரங்கம், பெங்களூர், தாய்லாந்து உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வாசனை மிகுந்த வண்ண மலர்கள் கொண்டும், மேலும் 500 கிலோ பழங்கள் மற்றும் ஸ்ரீவில்லிபுத்தூர் கிளி, நவ தானியங்களால் செய்யப்பட்ட பெயர்ப்பலகைகளால் திருக்கல்யாண மேடை முழுவதும் அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது.

திருக்கல்யாண விழாவை முன்னிட்டு மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் 3ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். இந்த திருக்கல்யாண நிகழ்வில் கோவில் அறங்காவல்குழு தலைவர் ருக்மணி பழனிவேல்ராஜன் மற்றும் இந்து அறநிலையத்துறை அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர்.

இதையடுத்து மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை முன்னிட்டு 1 லட்சம் பக்தர்களுக்கு மதுரை சேதுபதி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் திருக்கல்யாண விருந்தும் நடைபெற்றது. இந்த திருக்கல்யாண விருந்தின்போது சாப்பிட்ட கையோடு பக்தர்கள் திருக்கோயில் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மொய்ப்பந்தலில், திருக்கல்யாண மொய் எழுதி, பிரசாதம் பெற்றுக்கொள்வார்கள்.

மீனாட்சியம்மன் திருக்கல்யாண வைபத்தால் மதுரை மாநகரமே விழாக்கோலம் பூண்டது. மதுரையில் உள்ள அனைவரும் தங்களது வீட்டு திருமணம் போன்று மீனாட்சியம்மன் திருக்கல்யாணத்தை பார்த்து சாமி தரிசனம் செய்து விருந்து உண்டு , மொய் எழுதும் பழக்கம் ஆண்டாண்டு காலமாக நடைபெற்றுவருகிறது. இந்த ஆண்டு ஆன்லைன் மூலமாக மொய் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

ராமலிங்கம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

லவ் செக்ஸ் அவுர் தோகா 2: விமர்சனம்!

ஹெல்த் இன்சூரன்ஸ்… முதியவர்களுக்கு குட் நியூஸ்!

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *