“Don't consider ADMK weak” - Edappadi Palaniswami

“அதிமுகவை பலவீனமாக எடைபோட வேண்டாம்” : எடப்பாடி பழனிச்சாமி

அரசியல் தமிழகம்

அதிமுகவை பலவீனமாக எடைபோட வேண்டாம் என்றும், அதிமுக ஒரு பலமான கட்சி என்றும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னையில் இன்று (மார்ச் 21) தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் இறுதிக்கட்ட வேட்பாளர்கள் பட்டியலை,

இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வைத்து அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான இறுதிக்கட்ட பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதிமுகவிற்கு நெருக்கடி என்ற பேச்சுக்கே இடமில்லை. புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை தோற்றுவித்தபோது எத்தனை சாவல்களைச் சந்தித்தார் என்பது உங்கள் அனைவருக்கும் தெரியும்.

அவரது மறைவிற்குப் பிறகு, புரட்சித் தலைவி அம்மா இந்த இயக்கத்தைக் கையில் எடுத்தபோது எத்தனை பிரச்சனைகளைச் சந்தித்தார்.

அதனை எப்படி சமாளித்து, எதிர்க்கட்சி தலைவர்களை அவர் வெற்றி கொண்டார் என்பதையும் நாம் அனைவரும் அறிவோம்.

அதேபோல், தற்போதும் அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் இந்த தேர்தலில் அந்த வெற்றியினை பெறுவோம்.

மாநில அரசு லஞ்ச ஒழிப்புத்துறையையும், மத்திய அரசு அமலாக்கத்துறை மற்றும் வருமான ஒழிப்புத்துறையும் வைத்துகொண்டு வேலை பார்க்கின்றனர்.

எங்கள் மீது சுமத்தப்படும் அனைத்து குற்றச்சாட்டுகளையும் நாங்கள் சட்டரீதியாக எதிர்கொள்வோம்.

பெண்கள் விருப்பப்பட்டு எந்த தொகுதிகளை கேட்கிறார்களோ அந்த தொகுதி ஒதுக்கப்படும்.

தற்போது இந்த வேட்பாளர் பட்டியலின்படி, திருநெல்வேலி தொகுதியில் பெண் வேட்பாளரைத் தான் நிறுத்தி இருக்கிறோம்.

நாடாளுமன்றத் தொகுதி என்பது 6 சட்டமன்றத் தொகுதிகளைக் கொண்டது. அனைவரிடமும் கலந்தாலோசித்துத் தான் இந்த வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் கட்சி அதிமுக. அதிமுக மதச்சார்பற்ற கட்சியாகும்.

அதிமுகவைப் பொறுத்தவரைத் தலைமைக்கு விசுவாசமாக இருக்கும், கட்சிக்காக உழைக்கும், தேர்ந்தெடுத்த மக்களுக்கு நன்மை செய்யும் நபர்களைத்தான் வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளோம்.

அதிமுகவின் தலைமைக்கழக நிர்வாகிகள் மற்றும் ஆட்சி மன்றக் குழுவினர் கலந்தாலோசித்துத்தான் வேட்பாளர் பட்டியலை உருவாக்கியுள்ளனர்.

அதிமுக கூட்டணி என்பது வலுவாக உள்ளது. ஒரு கட்சி என்பது தேர்தல் நேரத்தில் கூட்டணி அமைப்பது இயல்பானது.

அதேநேரத்தில் கூட்டணி இல்லாமலும் போட்டியிடும் வலிமை அக்கட்சிக்கு இருக்கவேண்டும். அத்தகைய வலிமையான கட்சி அதிமுக.

கூட்டணி இருந்தாலும் சரி, இல்லையென்றாலும் சரி அதிமுக வெற்றி பெறும். அதிமுகவிற்கான தேர்தல் அறிக்கை தயார் செய்யப்பட்டு வருகிறது. விரைவில் வெளியிடப்படும்.

அதிமுகவின் சார்பில் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர் என 40 தொகுதிகளிலும் போட்டியிடும் வேட்பாளர்களையும் திருச்சியில் மார்ச் 24ல் நடைபெறவுள்ள தேர்தல் பிரச்சார பொதுக்குழு மேடையிலே அறிமுகம் செய்து வைப்போம்.

திமுக தேர்தல் அறிக்கையில் கூறியுள்ள பெட்ரோல், டீசல் விலை குறைப்பு என்பது நடக்காத காரியம்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின்போது திமுக தேர்தல் அறிக்கையில், பெட்ரோலுக்கு ரூ.5 குறைக்கப்படும் எனக் கூறியிருந்தனர். ஆனால் குறைக்கவில்லை.

அதேபோல், டீசல் விலை ரூ.4 குறைக்கப்படும் எனக் கூறியிருந்தனர். அந்த அறிவிப்பு காற்றோடு போனது.

மாநில அரசு போடுகின்ற வரியைக் குறைத்தாலே ஒரு லிட்டருக்கு ரூ.10 வரை குறைக்க முடியும். அதனை முதலில் குறைக்கச் சொல்லுங்கள்.

அதனால், திமுக வெற்றிபெறப் போவதும் இல்லை. மத்தியில் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வரப்போவதும் இல்லை.

திமுகவின் தேர்தல் அறிக்கை வெற்று அறிவிப்பாகத்தான் பார்க்கப்படுகிறது.

திமுக கூட்டணி இன்றுவரை நிலையாக இல்லை. காங்கிரஸ் கட்சி சார்பில் இப்போது வரை தேர்தல் வேட்பாளர்கள் அறிவிக்கப்படவில்லை.

ஆனால், அதிமுக அப்படி இல்லை. ஒரே நாளில் கூட்டணியை முடிவு செய்துள்ளது. அதிமுக வலிமையான கட்சி.

அதிமுகவை பலவீனமாக நீங்கள் எடைபோட வேண்டாம். அதிமுக பலமான கட்சி. தமிழக மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டால் கண்டிப்பாக எதிர்ப்போம்.

கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் 38 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. இருந்தும் மக்களுக்காக அவர்கள் எதையும் செய்யவில்லை.

அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் கொண்டுவரப்பட்ட பல திட்டங்களை அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசு நிறுத்தித்தான் வைத்துள்ளது.

இந்த தேர்தலில், அதிமுக கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்கள் 40 தொகுதிகளிலும் நிச்சயமாக வெற்றி பெறுவார்கள்.

அதிமுகவைப் பொறுத்தவரை, தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் பயனளிக்கும் திட்டங்களை நாங்கள் வரவேற்போம்.

மக்களுக்கு அநீதி இழைக்கப்படும்போது அதனை எதிர்த்து குரல் கொடுப்போம்.” என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

Ajith Kumar: ரொம்ப நல்லா இருக்கு… வைரலாகும் பிரியாணி வீடியோ!

அதிமுக 2ஆம் கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார் எடப்பாடி

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

1 thought on ““அதிமுகவை பலவீனமாக எடைபோட வேண்டாம்” : எடப்பாடி பழனிச்சாமி

  1. இப்படி வேண்டும் என்றால் சொல்லாம்…. “எடப்பாடியை….. பலவீனமாக நினைக்க வேண்டம்”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *