சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமான சிபிஐ(எம்) கட்சியின் மூத்த தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் உடலுக்கு நேற்றிரவு (அக்டோபர் 1) முதல்வர் ஸ்டாலின் மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார்.
கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் மாநில செயலாளருமான கொடியேரி பாலகிருஷ்ணன், தனக்கு ஏற்பட்ட புற்றுநோய் பாதிப்பு காரணமாக கடந்த ஆகஸ்ட் மாதம் பொறுப்பில் இருந்து விலகினார்.
தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த அவர், உடல்நிலை மோசமானதையடுத்து உயர் சிகிச்சைக்காக கடந்த 28ஆம் தேதி சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில் நேற்றிரவு 8 மணியளவில் கொடியேறி பாலகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து அப்போலோ மருத்துவமனை நிர்வாகம் செய்திகுறிப்பு வெளியிட்டிருந்தது.
அதில், கொடியேரி பாலகிருஷ்ணன் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்ததாகவும், படிப்படியாக அவரின் உடல் உறுப்புகள் செயலிழந்ததை தொடர்ந்து உயிரிழந்ததாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
முதல்வர் அஞ்சலி!
இதனைத் தொடர்ந்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மருத்துவமனைக்கு நேரில் சென்று கொடியேரி பாலகிருஷ்ணன் உடலுக்கு மலர்மாலை வைத்து நேற்றிரவு அஞ்சலி செலுத்தினார்.
அவருடன் தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் எம்.வி.கோவிந்தன், தமிழக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், அக்கட்சியைச் சேர்ந்த ஆனி ராஜா, மலையாள திரைப்பட இயக்குநர் பிரியதர்ஷன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர்.
கொள்கை உறுதிமிக்க தலைவர்!
மேலும் அவரது மறைவுக்கு தனது ட்விட்டர் பக்கத்திலும் முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்து இருந்தார்.
அதில், “சென்னை அப்போலோ மருத்துவமனையில் உடல்நலக்குறைவால் காலமான சிபிஐஎம் தலைமைக் குழு உறுப்பினரும், கேரள மாநில முன்னாள் அமைச்சருமான கொடியேரி பாலகிருஷ்ணனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினேன்.
கொள்கை உறுதிமிக்க தலைவராக விளங்கிய தோழர் கொடியேரி பாலகிருஷ்ணன், 1975ஆம் ஆண்டு நெருக்கடிநிலையின் போது மிசா சட்டத்தின் கீழ் சிறைத்தண்டனை அனுபவித்தவர்.
அவரை பிரிந்து வாடும் சிபிஐஎம் கட்சிக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.
இறுதிச் சடங்கு எப்போது?
இந்நிலையில் கொடியேரி பாலகிருஷ்ணனின் உடல் குளிரூட்டப்பட்ட பெட்டியில் வைக்கப்பட்டு விமானம் மூலம் கேரளா கொண்டு செல்லப்பட்டது.
அவரது உடல் இன்று மூன்று மணி அளவில் தலைச்சேரியில் உள்ள டவுன்ஹாலில் பொது மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்படுகிறது.
பின்னர் அரசு மரியாதையுடன் பையம்பலத்தில் உள்ள மயானத்தில் எரியூட்டப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவராக கருதப்படும் பாலகிருஷ்ணன் மறைவை அடுத்து கேரளா மட்டுமின்றி நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த கொடியேரி பாலகிருஷ்ணன்?
கேரளாவின் கண்ணூர் நகரைச் சேர்ந்த கொடியேரி பாலகிருஷ்ணன் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக 2015 முதல் 2022 ம் ஆண்டு வரை பதவி வகித்தவர்.
மேலும் 2006 – 2011 வரை அச்சுதானந்தன் தலைமையிலான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கத்தில் உள்துறை மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சராக பதவி வகித்தார். இவர் சிபிஐஎம்-இன் பொலிட்பீரா உறுப்பினராகவும் இருந்தார்.
கிறிஸ்டோபர் ஜெமா
மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார்
தற்காலிக ஆசிரியர்கள் 2,760 பேருக்கு பணி நீட்டிப்பு!