ஜடேஜா, அவரது மனைவி ரிவாபா ஆகியோருடன் எனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என்று அவரது தந்தை வேதனையுடன் கூறியுள்ளது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான ஜடேஜாவிற்கு கடந்த 2017ஆம் ஆண்டு ரிவாபாவுடன் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு நித்யானா என்ற ஒரு மகள் உள்ளார்.
ஏழைக்குடும்பத்தில் பிறந்த ஜடேஜா 2009 ஆண்டு U19 உலகக்கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்று கிரிக்கெட் உலகில் நுழைந்தார். அதன்பின் படிப்படியாக சர்வதேச போட்டிகளில் சாதனை படைத்து இன்று இந்திய அணியின் அசைக்க முடியாத வீரராக இருந்து வருகிறார். அவரது மனைவி ரிவாபா குஜராத் மாநிலம் ஜாம் நகர் வடக்கு தொகுதி பாஜக எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
இந்த நிலையில் ரிவாபாவை திருமணம் செய்ததில் இருந்து தனது மகனுடன் பேசக்கூட முடியவில்லை, பேத்தியை பார்க்கக்கூட முடியவில்லை என்று ஜடேஜாவின் தந்தை அனிருத்சிங் பரபரப்பு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
ரிவாபா என்ன மாயம் செய்துள்ளார்?
இதுதொடர்பாக தனியார் ஊடகத்திற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், “நான் உங்களுக்கு ஓர் உண்மையை சொல்ல வேண்டும். ஜடேஜா அவருடைய மனைவி ரிவாபா ஆகியோருடன் எனக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை.
ஜடேஜாவிற்கு திருமணம் ஆன 3 மாதத்தில் தன் பெயரில் அனைத்து சொத்துகளையும் மாற்றி எங்களது குடும்பத்தில் விரிசலை உருவாக்கினார். நான் தற்போது ஜடேஜா வசிக்கும் அதே ஜாம்நகரில் தனியாக வசிக்கிறேன். ஜடேஜா அவரது மனைவி, மகளுடன் தனி பங்களாவில் வசிக்கிறார். ஆனால் அவரை பார்க்க முடியவில்லை. அப்படி ரிவாபா என்ன மாயம் செய்துள்ளார் என்று தெரியவில்லை.
ஜடேஜாவை கிரிக்கெட் வீரராக்கியதற்கு வருத்தப்படுகிறேன்!
ஜடேஜாவை கிரிக்கெட் வீரராக்க நாங்கள் மிகவும் கடினமாக உழைத்தோம். பணம் சம்பாதிப்பதற்காக 20 லிட்டர் பால் கேன்களை தோளில் சுமந்து செல்வேன். வாட்ச்மேனாகவும் பணிபுரிந்தேன். வறுமையில் தான் அவனை வளர்த்தேன். ஜடேஜாவை அவரது சகோதரி நைனா ஒரு தாய் போல் பார்த்துக் கொண்டாள். ஆனால் அவளிடமும் அவன் இப்போது பேசுவதில்லை.
ஜடேஜாவை கிரிக்கெட் வீரராக்கியதற்கு இப்போது வருத்தப்படுகிறேன். அவருக்கு ரிவாபாவுடன் திருமணம் செய்து வைக்காமல் இருந்திருந்தால், எங்களது குடும்பம் நன்றாக இருந்திருக்கும். என் இதயம் பற்றி எரிகிறது.
அவர் கூறுகிற படி நான் தவறு செய்திருக்கலாம்.. அவரது சகோதரி நைனா தவறு செய்திருக்கலாம்… ஆனால் எங்கள் குடும்பத்தில் உள்ள 50 உறுப்பினர்களும் எப்படி தவறு செய்தவர்களாக இருக்க முடியும்?
பேத்தியின் முகத்தை கூட பார்க்க முடியவில்லை!
நான் எதையும் மறைக்க விரும்பவில்லை. கடந்த ஐந்து வருடங்களாக எங்கள் பேத்தியின் முகத்தை கூட நான் பார்க்கவில்லை. இதற்கு ஜடேஜாவின் மாமியார் தான் காரணம். அவர் தான் எல்லாவற்றையும் நிர்வகிக்கிறார். அவர்களுக்கு இப்போது பணம் கிடைப்பதால் அவர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.” என்று அனிருத் சிங் வேதனை தெரிவித்துள்ளார்.
இந்த குற்றச்சாட்டுகள் சமூகவலைதளங்களில் வைரலான நிலையில், பலரும் ஜடேஜாவிற்கு எதிராக கருத்து தெரிவித்து வந்தனர்.
இதனையடுத்து தனது தந்தையின் குற்றச்சாட்டுகளை ஜடேஜா தற்போது மறுப்பு தெரிவித்துள்ளார்.
Let's ignore what's said in scripted interviews 🙏 pic.twitter.com/y3LtW7ZbiC
— Ravindrasinh jadeja (@imjadeja) February 9, 2024
மனைவியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயற்சி!
இதுதொடர்பாக அவரது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “எனது தந்தை முட்டாள்தனமாக அளித்துள்ள பேட்டியில் சொல்லப்பட்ட விஷயங்கள் அனைத்தும் அர்த்தமற்றவை மற்றும் உண்மைக்குப் புறம்பானவை. இது ஒருதலைப்பட்சமான கதை, குற்றச்சாட்டுகளை நான் முற்றிலும் மறுக்கிறேன்.
எனது மனைவியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகள் உண்மையிலேயே கண்டிக்கத்தக்கது. என்னிடம் கேட்டால் நானும் நிறைய சொல்வேன். ஆனால் அதை பகிரங்கமாக செய்ய மாட்டேன்” என்று ஜடேஜா கூறியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
கொளுத்தும் வெயில் : 3வது நாளாக சதமடித்த ஈரோடு!
பாராளுமன்றத் தேர்தலுக்கு முன் பள்ளி மேலாண்மைக் குழு தேர்தல்: அச்சாணியை கவனிக்குமா அரசு?
நரசிம்ம ராவ், சரண் சிங், எம்.எஸ்.சுவாமிநாதன் : ஒரே நாளில் 3 பாரத ரத்னா!