டி20 உலகக்கோப்பையில் இன்று (நவம்பர் 9) நடைபெறும் இரண்டாவது அரையிறுதி போட்டியில் பலம் வாய்ந்த இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.
ஆஸ்திரேலியாவில் நடந்து வரும் டி20 உலகக்கோப்பை உச்சகட்டத்தை எட்டியுள்ளது. நேற்று நடந்த முதல் அரையிறுதி போட்டியில் பலம் வாய்ந்த நியூசிலாந்து அணியை எளிதாக வென்றது பாகிஸ்தான்.
இதன்மூலம் 13 ஆண்டுகளுக்கு பிறகு மூன்றாவது முறையாக டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் களமிறங்க உள்ளது. இதனையடுத்து பாகிஸ்தானை எதிர்கொள்ள போகும் அணி எது என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதன்படி ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் கவனமும் இன்று அடிலெய்டில் மோதவுள்ள இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான அரையிறுதி ஆட்டத்தின் பக்கம் திரும்பியுள்ளது.
சூப்பர் 12 சுற்றில் இந்தியா – இங்கிலாந்து!
கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போல் இன்றி, நடப்பு உலகக்கோப்பையில் புத்துணர்ச்சி பெற்ற அணியாக இந்தியா இதுவரை வெற்றிநடை போட்டுள்ளது.
சூப்பர் 12 சுற்றில், தென்னாப்பிரிக்கா அணியை தவிர, பாகிஸ்தான், நெதர்லாந்து, பங்களாதேஷ், ஜிம்பாப்வே என குரூப் 2ல் இருந்த அனைத்து அணிகளையும் வென்றது இந்தியா.
இதன்மூலம் இந்த உலகக்கோப்பையில் அதிக புள்ளிகளுடன்(8) அரையிறுதிக்கு முன்னேறிய அணி என்ற பெருமையை பெற்றது.
அதே போன்று உலகக்கோப்பையில் இங்கிலாந்து அணியின் ஆட்டமும் சிறப்பாகவே இருந்துள்ளது.
இதுவரை விளையாடியை 5 போட்டிகளில், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, இலங்கை ஆகிய 3 அணிகளை வென்றது.
அயர்லாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங்கில் சொதப்பியது இங்கிலாந்து. மேலும், குறுக்கே வந்த மழையால் டக் வொர்த் லீவிஸ் விதிப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் அதிர்ச்சி தோல்வியை தழுவியது.
மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டம் முற்றிலும் மழையால் கைவிடப்பட்டது.
இதனால் குரூப் 1ல் இடம்பிடித்த இங்கிலாந்து 7 புள்ளிகளுடன் அரையிறுதிக்கு முன்னேறியது.
கோலியின் சாதனை ஆட்டம் தொடருமா?
நடப்பு உலகக்கோப்பையில் இந்தியாவின் நல்ல விஷயமாக பார்முக்கு திரும்பிய விராட்கோலியின் அட்டகாசமான பேட்டிங் பார்க்கப்படுகிறது.
இதுவரை விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய கோலி, இந்த தொடரில் அதிக ரன்களை அடித்தவர் என்ற பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.
மேலும் பல சாதனைகள் புரிந்த அடிலெய்டு மைதானத்தில் இன்றும் அவர் சிறப்பாக ஆட வேண்டும் என்பதே இந்திய ரசிகர்களின் எதிர்பார்ப்பு.
அதே போன்று அதிரடி வீரர் சூர்யகுமார் யாதவின் ஆட்டமும் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியமான ஒன்றாக கருதப்படுகிறது.
பந்துவீச்சில் சிறப்பான பங்களிப்பை அளித்துவரும் புவனேஷ்வர், ஷமி, அர்ஸ்தீப் ஆகியோர் தங்களது பணியை இன்றும் தொடர வேண்டியது கட்டாயம்.
அதே வேளையில் இந்தியாவின் தொடக்க வீரர்களான கேப்டன் ரோகித் சர்மா மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோரது பார்ட்னர்சிப் தொடர்ந்து பரிதாபமாக உள்ளது. இந்த போட்டியில் இருவரும் பொறுப்புடன் விளையாடி அதிக ரன்கள் குவிக்க வேண்டும்.
மேலும் மிடில் ஆர்டரில் தினேஷ் கார்த்திக், பண்ட் ஆகியோருக்கு இடையே இன்னும் இழுபறி நீடித்து வருவது ஒரு குறையாக பார்க்கப்படுகிறது. எனினும் இந்த போட்டியில் தினேஷ் கார்த்திக் களமிறங்கவே அதிக வாய்ப்புள்ளது.
அதேபோல் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமான அடிலெய்டில் சுழற்பந்து வீச்சாளர்கள் அஸ்வினுக்கு, சஹாலுக்கு இடையே தொடர்ந்து போட்டியில் யார் களமிறங்க போகிறார்கள் என்பதில் குழப்பம் நிலவுகிறது.
பவர் ஹிட்டர்களால் நிறைந்த இங்கிலாந்து!
இங்கிலாந்து அணியின் முக்கிய பலமே அவர்களின் பேட்டிங்தான். அந்த அணியின் கடைசி வீரர் வரை அனைவரும் பவர்-ஹிட்டர்களாகவே உள்ளனர்.
அடிலெய்டு ஓவல் மைதானத்தில் குறுகிய சதுர பவுண்டரிகள் இருபுறமும் இருக்கும் என்பதால் பவர் ஹிட்டர்களை கொண்ட அந்த அணிக்கு இது மிகப்பெரிய சாதகமாகும்.
அதே போன்று வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும் ஓவல் மைதானம் வேகப்பந்து வீச்சாளர்களை அதிகம் கொண்ட இங்கிலாந்து அணிக்கு பலமாகவே அமையும்.
எனினும் அந்த அணியில் பல்வேறு பலவீனங்களும் காணப்படுகிறது. குறிப்பாக அவர்களது அனுபவம் வாய்ந்த வீரர்களான டேவிட் மலான் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் மார்க் வுட் ஆகியோர் காயத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அந்த அணியின் மிகப்பெரும் பிரச்சனையாக மாறியுள்ளது.
இந்த உலகக்கோப்பையில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட்டாலும், இங்கிலாந்து அணி பந்துவீச்சில் சற்று தடுமாற்றம் நிலவுகிறது.
இளம் வீரரான சாம்கரன் நம்பிக்கை அளித்தாலும், கிறிஸ் வோக்ஸ் மற்றும் அடில் ரஷித் உள்ளிட்ட சுழற்பந்து வீச்சாளர்கள் அதிக ரன்கள் கொடுப்பதுடன், விக்கெட் கைப்பற்றுவதிலும் பின் தங்கியே உள்ளனர்.
வெற்றி வாய்ப்பு யாருக்கு?
நியூசிலாந்து அணியை வீழ்த்தி பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள நிலையில், இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இறுதிப் போட்டியில் விளையாட வேண்டும் என்பதே கிரிக்கெட் ரசிகர்களின் விருப்பமாக உள்ளது.
எனினும் இன்றைய அரையிறுதி போட்டியில் சமபலம் கொண்ட இரு அணிகளுக்குமே வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது.
அதே வேளையில் தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் கோலி, சூர்யகுமார் யாதவுடன், ரோகித், ராகுல், பாண்டியா ஆகியோரும் சிறப்பாக செயல்படும் பட்சத்தில் இந்திய அணி இறுதி போட்டிக்கு செல்வதை இங்கிலாந்து அணியால் தடுக்க முடியாது என்பது நிச்சயம்.
ஆனால் அதற்கு இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் எளிதில் விட்டுகொடுத்து விளையாட மாட்டார்கள் என்பதால் இன்றைய ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சமிருக்காது.
கிறிஸ்டோபர் ஜெமா
புத்த மதத்திற்கு மாறிய நடிகர்!
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மீது முட்டை வீச்சு!