MI vs RCB WPL 2024 Highlights
RCB-W vs MI-W: ஹர்மன்ப்ரீத் தலைமையிலான நீலப் படையை வீழ்த்தி, பெங்களூர் அணி முதல் முறையாக மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது.
டெல்லியில் உள்ள அருண் ஜெட்லீ மைதானத்தில், 2024 மகளிர் பிரீமியர் லீக் தொடருக்கான எலிமினேட்டர் ஆட்டம் நேற்று (மார்ச் 15) இரவு நடைபெற்றது.
இப்போட்டியில், நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் மகளிர் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதிக்கொண்டன.
அதிர்ச்சி துவக்கம்!
டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, பேட்டிங்கை தேர்வு செய்தார். ஆனால் டாஸ் போன்று, பேட்டிங்கின் துவக்கம் அவருக்கு சாதகமாக செல்லவில்லை. 2வது ஓவரில் சோபி டிவைன், 3வது ஓவரில் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, 4வது ஓவரில் திசா கசட் என டாப் ஆர்டர் பேட்டர்கள் அடுத்தடுத்து விக்கெட்களை இழந்தனர்.
இதன் காரணமாக, ஆர்.சி.பி-யின் ரன் ரேட் பாதாளத்தை நோக்கி சென்றது. இதன் விளைவாக முதல் 10 ஓவர்களில் பெங்களூர் அணி 51 ரன்களை மட்டுமே சேர்த்தது. நம்பிக்கை நாயகியாக கருதப்பட்ட ரிச்சா கோஷ் 10வது ஓவரில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.
ஆட்டத்தை மாற்றிய எல்லிஸ் பெர்ரி
ஆனால், நம்பிக்கையை இழந்து மிக மோசமான நிலைக்கு சென்ற பெங்களூர் அணிக்கு, எல்லிஸ் பெர்ரி என்ற நம்பிக்கை ஒளி ஒளிரப்போகிறது என அப்போது யாரும் எதிர்பார்க்கவில்லை.
நிதானமாக விளையாடி மெல்ல மெல்ல ரன்களை சேர்த்தார் பெர்ரி. இதன் காரணமாக, 15 ஓவர்கள் முடிவில், ஆர்.சி.பி 5 விக்கெட்கள் இழப்பிற்கு 84 ரன்கள் சேர்ந்திருந்தது. அப்போது 36 ரன்களுடன் விளையாடிக் கொண்டிருந்த பெர்ரி, அதன் பிறகு தனது அதிரடியை வெளிப்படுத்த துவங்கினார் எல்லிஸ் பெர்ரி.
அதன் விளைவாக கடைசி 5 ஓவர்களில் 51 ரன்களை குவித்தது பெங்களூரு அணி. எல்லிஸ் பெர்ரி 66 (50) ரன்களையும், அவருக்கு உதவியாக ஜியார்ஜியா வார்ஹெம் 18 ரங்களையும் விளாசினர். இதனால் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 135 ரன்கள் சேர்த்தது.
முன்னிலை வகித்த மும்பை அணி!
136 ரன்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கியது மும்பை அணி. அந்த அணிக்காக அதிரடியாக பேட்டிங்கை துவங்கினார் ஹேலி மேத்யூஸ். ஆனால், அவரை 4வது ஓவரில் 15 ரன்களுக்கு அவரை வெளியேற்றி, ஷ்ரேயங்கா பாட்டீல் பெங்களூரு அணிக்கு முதல் திருப்பத்தை தந்தார்.
இதன்பின், யாஸ்டிகா பாட்டியா மற்றும் நாட் சிவர்-பிரன்ட் பொறுமையாக விளையாடி அணியின் எண்ணிக்கையை உயர்த்தினார். யாஸ்டிகா 19 ரன்களுக்கும், நாட் சிவர்-பிரன்ட் 23 ரன்களுக்கும் ஆட்டமிழக்க, 4வது விக்கெட்டிற்கு ஜோடி சேர்ந்த கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் அமெலியா கெர் ஆட்டத்தை மெதுவாக ஆர்.சி.பி-யின் கைகளில் இருந்து எடுத்து சென்றனர்.
கவுரை கவிழ்த்த ஷ்ரேயங்கா MI vs RCB WPL 2024 Highlights
16 ஓவர்களில் மும்பை அணி 104 ரன்களை சேர்த்தது. 4 ஓவர்களில் 32 ரன்கள் மட்டுமே தேவை. களத்தில் ஹர்மன்ப்ரீத் கவுர் மற்றும் அமெலியா கெர் என 2 அதிரடி ஆட்டக்காரர்கள் இருந்தபோது, தனது 4 சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு வலையை வீச துவங்கினார் பெங்களூரு அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா.
18வது ஓவரின் துவக்கத்தில் இருந்தே, ஹர்மன்ப்ரீத் கவுரை திணற செய்த ஷ்ரேயங்கா பாட்டீல், அந்த ஓவரின் கடைசி பந்தில் அவரை ஃபெவிலியனுக்கு அனுப்பி, மீண்டும் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தினார்.
நடப்பு சாம்பியனை சாய்த்த ஆர்சிபி
2 ஓவர்களில் 16 ரன்கள் தேவை என்ற நிலை. 19வது ஓவரை வீசிய சோஃபி மோலினியூக்ஸ், வெறும் 4 ரன்களை மட்டுமே வழங்கினார்.
கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை. ஆனால், ஆஷா ஷோபனா வீசிய அந்த ஓவரில் மும்பை அணியின் வீராங்கனைகளால் 6 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
அதனுடன், யாரும் எதிர்பார்க்காத முடிவாக 5 ரன்கள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றி பெற்றுவிட்டது.
நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியை, லீக் சுற்றில் வீழ்த்தி பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, மீண்டும் அந்த அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
Not a game for the faint hearted 😮💨#PlayBold #SheIsBold #ನಮ್ಮRCB #WPL2024 #MIvRCB
— Royal Challengers Bangalore (@RCBTweets) March 15, 2024
கோப்பையை வெல்லப்போவது யார்?
முன்பு கூறியது போல, பெங்களூரு அணிக்கு நம்பிக்கை ஒளி வீசிய எல்லிஸ் பெர்ரி, இந்த போட்டிக்கான ‘ஆட்ட நாயகி’ விருதை வென்றார்.
தற்போது, இந்த அணி மார்ச் 17 அன்று நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
அப்போட்டியிலும் வெற்றி பெற்று, மிக நீண்ட கால கனவான அந்த முதல் கோப்பையை ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மகளிர் அணி வெல்லுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா : வாழைப்பழ மில்க் ஷேக்
OnePlus-ன் புது வரவு…. விலை விவரம்! இதோ….
நாம் தமிழர் கட்சி சின்னம் கோரிய வழக்கு: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு!
கோவையில் பிரதமரின் `ரோடு ஷோ’வுக்கு அனுமதி மறுப்பு : பாஜக வழக்கு!