கோவையில் பிரதமர் மோடியின் `ரோடு ஷோ’வுக்கு அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து பாஜக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது. pm Modi road show police denied permission
பிரதமர் மோடி 5ஆவது முறையாக இன்று (மார்ச் 15) தமிழ்நாடு வந்துள்ளார். கன்னியாகுமரி மாவட்டம் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கலை அறிவியல் கல்லூரி வளாகத்தில் பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினார்.
இதையடுத்து கேரளா செல்லும் பிரதமர் மோடி மீண்டும் தமிழ்நாடு வருகிறார்.
வரும் 18ஆம் தேதி கோவை வரும் அவர், திறந்த காரில் நின்றவாறு மக்களைச் சந்திக்கிறார்.
‘இதற்காக பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள `ரோடு ஷோ’ கவுண்டம்பாளையத்தில் தொடங்கி மேட்டுப்பாளையம் சாலை, ஆர்.எஸ்.புரம் வழியாக தலைமை அஞ்சல் நிலைய சந்திப்பு அருகே முடிவடைகிறது.
மொத்தம் 3.5 கிலோமீட்டர் தொலைவுக்கு, காரில் நின்றவாறு பொதுமக்களிடம் பிரதமர் மோடி வாக்கு சேகரிக்கவுள்ளார்’ என கோவை பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கோவை, திருப்பூர், நீலகிரி, ஈரோடு, பொள்ளாச்சி தொகுதிகளில் போட்டியிடும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்கும் வகையில் இந்த `ரோடு ஷோ’ ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்காக பாஜக சார்பில் கோவை போலீசாரிடம் அனுமதி கேட்கப்பட்டது. ஆனால் பிரதமரின் `ரோடு ஷோ’ வுக்கு அனுமதி வழங்க காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
பாதுகாப்பு காரணங்களுக்காக அனுமதி மறுப்பதாக கோவை காவல் ஆணையர் சார்பாக பாஜவுக்குக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
“தற்போது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடந்துவருகிறது. அதோடு, பிரதமருக்கு உள்நாட்டு, வெளிநாட்டு மத மற்றும் பிற தீவிரவாத அமைப்புகளால் பாதுகாப்பு அச்சுறுத்தல் உள்ளது.
பொதுக்கூட்ட நிகழ்ச்சிக்கு வரும் ஒவ்வொருவரையும் நுழைவு வாயிலில் நிறுத்தி சோதனை செய்யப்படும். ஆனால் சாலையில் பேரணி செல்லும்போது ஒவ்வொரு தனிநபரையும் சோதனை செய்வது கடினம்” என்று காவல்துறை தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
போலீசார் அனுமதி மறுத்ததை அடுத்து, பாஜக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
பிரதமரின் பேரணிக்கு அனுமதி மற்றும் உரிய பாதுகாப்பு வழங்க போலீசாருக்கு உத்தரவிட கோரி அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுவை நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் இன்றே விசாரித்து மாலை 4.30 மணிக்கு உத்தரவு பிறப்பிக்கவுள்ளார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
4 புதிய மாநகராட்சிகள் : முதல்வர் அறிவிப்பு!
Rain: ஜில்லுன்னு ஒரு அப்டேட்… தமிழ்நாட்டில் மழைக்கு வாய்ப்பு!
pm Modi road show police denied permission