சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியுடனான லீக் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
லக்னோவில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் மைதானத்தில் நேற்று இரவு (ஏப்ரல் 7) நடைபெற்ற ஐபிஎல் 10வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் மோதின.
இந்த சீசனில் இதுவரை டாஸ் வென்ற அணிகள் முதலில் பந்துவீச்சை மட்டுமே தேர்வு செய்த நிலையில், ஐதராபாத் அணி முதல் அணியாக பேட்டிங்கை தேர்வு செய்தது.
எனினும் எதிர்ப்பார்ப்பிற்கு மாறாக ஆரம்பம் முதலே அந்த அணியின் விக்கெட்டுகள் சீட்டுக்கட்டுகள் போல் சரிந்தன.
20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ரன்கள் மட்டுமே எடுத்தது ஐதராபாத் அணி. அதிகபட்சமாக திரிபாதி 35 ரன்களும், அன்மோல்ப்ரீத் சிங் 31 ரன்களும் அடித்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஐதராபாத் அணி கேப்டன் மார்க்ரம் டக் அவுட் ஆகி வெளியேறினார்.
பந்துவீச்சில் அசத்திய லக்னோ அணியின் க்ருணால் பாண்டியா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய லக்னோ அணி, 16 ஓவர்களில், 127 ரன்கள் எடுத்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதிகபட்சமாக கேப்டன் கே.எல்.ராகுல் 35 ரன்களும், க்ருணால் பாண்டியா 34 ரன்களும் எடுத்தனர்.
3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன், 34 ரன்கள் எடுத்த க்ருணால் பாண்டியா ஆட்டநாயகன் விருதினை பெற்றார். இந்த போட்டியில் வென்றதன் மூலம் புள்ளிப்பட்டியலில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி.
அதேவேளையில் முதன்முறையாக டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த ஐதராபாத் அணியானது, 2வது போட்டியிலும் தோற்று புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா