கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்திய வழக்கில் பேராசிரியர் நிர்மலா தேவிக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகளிர் நீதிமன்றம் இன்று (ஏப்ரல் 30) தீர்ப்பளித்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்த நிர்மலா தேவி, அங்குள்ள தனியார் கல்லூரியில் கணித உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
தன்னிடம் படிக்கும் மாணவிகளை நிர்மலா தேவி தவறாக வழிநடத்தியதாக கடந்த 2018-ஆம் ஆண்டு மே மாதம் ஆடியோ ஒன்று வைரலானது.
அதனைத்தொடர்ந்து நிர்மலா தேவி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கல்லூரியில் படித்த 5 மாணவிகள் மற்றும் கல்லூரி செயலாளர் ராமசாமி ஆகியோர் புகார் அளித்தனர்.
அதனடிப்படையில் 2018, ஏப்ரல் 16-ம் தேதி வழக்குப் பதிவு செய்த அருப்புக்கோட்டை நகர் போலீஸார் நிர்மலாதேவியை கைது செய்தனர். தொடர்ந்து இவ்வழக்கு சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு மாற்றப்பட்டது.
சிபிசிஐடி விசாரணையில், பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோருக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.
அவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் நிர்மலா தேவி உட்பட 3 பேர் மீதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம், விபச்சார தடுப்புச் சட்டம், தகவல் தொழில்நுட்பப் பரிமாற்ற முறைகேடு தடுப்புச் சட்டம் உட்பட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பு கடந்த 26-ம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் நீதிமன்றத்தில் பேராசிரியர் நிர்மலா தேவி ஆஜராகாததால் இவ்வழக்கின் தீர்ப்பு ஏப்ரல் 29-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.
இந்தநிலையில், நேற்று பேராசிரியை நிர்மலா தேவி ஆஜரான நிலையில், அவர் ’குற்றவாளி’ என ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்ற நீதிபதி பகவதியம்மாள் தீர்ப்பளித்தார்.
அதே வேளையில் குற்றஞ்சாட்டப்பட்ட பேராசிரியர் முருகன், ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி இருவர் மீதும் குற்றவாளிகள் என நிரூபிக்க போதிய ஆதாரம் இல்லை என்று கூறி விடுவிக்கப்பட்டனர். நிர்மலா தேவிக்கான தண்டனை விவரம் இன்று (ஏப்ரல் 30) அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார்.
அதன்படி, பேராசிரியர் நிர்மலா தேவி இன்று நீதிபதி பகவதியம்மாள் முன்பு ஆஜரானார். அப்போது நிர்மலா தேவி நீதிமன்றத்தில் கதறி அழுதார்.
இதனையடுத்து நிர்மலா தரப்பு வழக்கறிஞர் சுரேஷ் நெப்போலியன், “நிர்மலா தேவியால் எந்த ஒரு மாணவிக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. அதனால் 10 ஆண்டுகளுக்கும் குறைவான குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும்” என்று வாதிட்டார்.
ஆனால், சிபிசிஐடி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் சந்திரசேகர், “நிர்மலா தேவிக்கு குறைந்தபட்ச தண்டனை வழங்கக்கூடாது” என்று எதிர்ப்பு தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி பகவதியம்மாள், பேராசிரியர் நிர்மலா தேவிக்கு பத்து ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2.42 லட்சம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். அபராதத்தொகையை கட்டத்தவறினால் 6 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி தீர்ப்பளித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சிபிசிஐடி தரப்பு வழக்கறிஞர் சந்திரசேகர், “இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 370 உட்பிரிவு 1-ன் கீழ் 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 370 பிரிவு 3-ன் கீழ் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. Immoral traffic act Section 5(1)(a) பிரிவின் கீழ் 5 வருடம் கடுங்காவல் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. அதே சட்டத்தில் பிரிவு 9-ன் கீழ் 10 வருட காலம் கடுங்காவல் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
Information Tecnology Act-ன் படி மூன்று வருட சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஏக காலத்தில் தண்டனையை அனுபவிக்கும்படி சொல்லப்பட்டிருக்கிறது. அவர் ஏற்கனவே இந்த வழக்கில் சிறையில் இருந்த காலத்தை கழித்துக்கொள்ளலாம் என்று சொல்லியும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…