விராட் கோலிக்காக இந்த முறை உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று அனைவரும் விரும்புகின்றனர் என இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் விரேந்திர சேவாக் இன்று(ஜூன் 27) கூறியுள்ளார்.
ஐசிசி 50 ஓவர் உலகக் கோப்பை இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெற உள்ளது.
இதற்கான அட்டவணையை பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா, ஐசிசி சி.இ.ஓ. ஜெஃப் அல்லார்டிஸ், இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக், இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஆகியோர் இன்று (ஜூன் 27) வெளியிட்டனர்.
அதன்படி அக்டோபர் 5 ஆம் தேதி அகமதாபாத்தில் உள்ள உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோடி மைதானத்தில் முதல் போட்டி தொடங்கி, அதே மைதானத்தில் நவம்பர் 19 ஆம் தேதி அன்று இறுதி போட்டி நடைபெற உள்ளது.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் சேவாக்,
”2011 ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியில் சச்சின் டெண்டுல்கர் விளையாடினார். அந்த உலகக்கோப்பையை நாம் எல்லோரும் சச்சின் டெண்டுல்கருக்காக எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று நினைத்தோம்.
தற்போது அந்த இடத்தில் தான் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் விராட் கோலி இருக்கிறார். அவருக்காகத்தான் இப்போது அனைவரும் உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என்று நினைக்கிறார்கள்.
கோலியும் சச்சினை போலவே இருக்கிறார். அவரைப்போலவே பேட்டிங் செய்கிறார். கிரிக்கெட்டையும் சச்சினை போலத்தான் பார்க்கிறார்.
அது மட்டுமின்றி விராட் கோலி இந்திய கிரிக்கெட்டுக்காக செய்துள்ள சாதனைகளை நாம் சாதாரணமாக கடந்து செல்ல முடியாது.
இந்திய கிரிக்கெட்டுக்காக அவருடைய பங்களிப்பு அபாரமானது. ஐசிசி போன்ற பெரிய தொடர்களில் விராட் கோலி களமிறங்கும் போது தன்னால் முடிந்த அத்தனையையும் அணிக்காக செய்பவர்.
இந்த உலகக்கோப்பைத் தொடருக்காக நிச்சயம் அவர் ஆர்வமாக இருப்பார். இம்முறை மக்கள் விராட் கோலிக்கு அதிகளவில் ஆதரவளிப்பார்கள்.
விராட் கோலியும் இந்த உலகக் கோப்பையை எதிர்பார்க்கிறார் என்று நினைக்கிறேன்.
அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் 1 லட்சம் பேர் கோலியை பார்ப்பார்கள். ஆடுகளங்கள் எப்படி செயல்படும் என்பதை அவர் அறிவார்.
நடப்பு சாம்பியனான இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவுடன், அரையிறுதிக்கு தகுதி பெறும் நான்கு அணிகளில் இந்தியாவும் பாகிஸ்தானும் இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
எல்லோரும் இந்திய அணியும் பாகிஸ்தானும் மோத வேண்டும் என்று நினைக்கிறார்கள். நானும் கூட அப்படித்தான் நினைக்கிறேன்.
அப்படி ஒருவேளை இந்த இரண்டு அணியும் மோதினால் அந்த நாள் எப்படி இருக்கும் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் சிறப்பாக விளையாடும் அணி வெற்றி பெறும்” என்று சேவாக் கூறினார்.
மு.வா.ஜெகதீஸ் குமார்
காங்கிரஸ் தலைவர் பதவி… யாரை நியமித்தாலும் மகிழ்ச்சி: கே.எஸ்.அழகிரி
முந்தியபோது சாலை விபத்து: காலை இழந்த இளம் நடிகர்!
டாஸ்மாக் கடைகள் மூடல் : ஊழியர்களுக்கு வேலை அறிவிப்பு!