சீனாவின் ஹாங்சோ நகரில் நடைபெறும் 19வது ஆசிய விளையாட்டு போட்டிகளின் 12வது நாளான இன்று (அக்டோபர் 5) ஹாட்ரிக் தங்கம் உட்பட 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என 5 பதக்கங்களை கைப்பற்றிய இந்தியா, மொத்தம் 86 பதக்கங்களுடன் 4வது இடத்தில் நீடிக்கிறது.
இந்த விளையாட்டு திருவிழாவில், இந்தியா இதுவரை 21 தங்கம், 32 வெள்ளி மற்றும் 33 வெண்கல பதக்கங்களை வென்றுள்ளது.
இன்று காலை, ஜோதி வெண்ணம், அதிதி சுவாமி & பர்னீத் கவுர் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, மகளிர் வில்வித்தை விளையாட்டின் காம்பௌண்ட் குழு பிரிவில் ‘தங்கம்’ வென்று, இந்தியாவின் இன்றைய பதக்கக் கணக்கை துவக்கி வைத்தனர். இவர்களில், ஜோதி வெண்ணம் முன்னதாக காம்பௌண்ட் கலப்பு இரட்டையர் பிரிவிலும் தங்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து, ஸ்குவாஷ் விளையாட்டின் கலப்பு இரட்டையர் பிரிவில், மலேஷியாவின் ஐஃபா அஷ்மான் – முகமது சியாஃபிக் இணையை 11-10, 11-10 என நேர் செட் கணக்கில் வீழ்த்திய இந்தியாவின் தீபிகா பல்லிகல் – ஹரீந்தர்பால் சிங் இணை, இன்று இந்தியாவுக்காக 2வது தங்கப் பதக்கத்தை கைப்பற்றி கொடுத்தது.
பின், ஆடவருக்கான வில்வித்தை விளையாட்டுகளின், காம்பௌண்ட் குழு பிரிவின் இறுதிப்போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில், இந்தியாவின் ஓஜஸ் டியோடேல், அபிஷேக் வர்மா மற்றும் பிரத்மேஷ் ஜவகர் ஆகியோர் அடங்கிய அணி, தென் கொரிய அணியை எதிர்கொண்டது. இந்த போட்டியில் 235-230 என தென் கொரிய அணியை வீழ்த்தி, தங்கப் பதக்கங்களில் இந்தியா ஹாட்ரிக் அடித்தது.
அடுத்து நடைபெற்ற ஸ்குவாஷ் விளையாட்டின் ஆடவர் தனிநபர் பிரிவின் இறுதிப்போட்டியில், மலேஷியாவின் இயான் யோவ்விடம் 9-11, 11-9, 11-5, 11-7 என செட் கணக்கில் தோல்வியடைந்த இந்தியாவின் நட்சத்திர ஸ்குவாஷ் வீரர் சவுரவ் கோஷல், வெள்ளிப் பதக்கத்தை வென்றார்.
இதன்மூலம், 2006 துவங்கி அடுத்த 5 ஆசிய விளையாட்டு தொடர்களிலும், ஸ்குவாஷ் ஆடவர் தனிநபர் பிரிவில் பதக்கம் வென்று சவுரவ் கோஷல் சாதனை படைத்துள்ளார்.
மகளிருக்கான மல்யுத்த போட்டிகளில், 53 கிலோ எடைப்பிரிவில், இந்தியாவின் 19 வயதேயான ஆன்டிம் பங்கல் வெண்கல பதக்கத்தை வென்றார்.
முரளி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
வாடிய பயிர்கள்… விவசாயிகளுக்கு இழப்பீடு அறிவிப்பு!
லியோ ட்ரெய்லர் : “A History of Violence” ரீமேக்.. என்ன லோகேஷ் இது?