wநாடோடியின் நாட்குறிப்புகள் 24 – சாரு நிவேதிதா

public

ெலன் சிஸ்யு எழுதிய ‘இந்தியா’ நாடகத்தைப் பற்றி இன்னும் கொஞ்சம் பேசலாம். அந்நாடகத்தில் காந்தியை அவர் தாய் அன்பின் குறியீடாகவே உருவாக்கியிருக்கிறார். அது பற்றி ஒரு கட்டுரையில் இப்படிக் குறிப்பிடுகிறார்:

“That human beings might define themselves as those who love others is something we ordinary Westerners hardly ever imagine, for such a thought does violence to the violence we’re used to.”

அன்பு என்ற கருத்தாக்கத்தையே கீழைநாடுகள்தான் மேலை நாடுகளுக்குக் கொடுத்தது என்பது சிஸ்யூவின் கருத்து. நாடகத்தில் காந்தி பற்றி மௌண்ட்பேட்டன்:

”Gandhi is the last proof of the existence of the gods and of their

impotency to impose their prophets on our political times.”

சாலமன் கதையில் வரும் அன்னையைப் பற்றி நாம் சிறுவயதில் படித்திருக்கிறோம். அரசன் சாலமனிடம் இரண்டு பெண்கள் நீதி கேட்கிறார்கள். ஒரு பெண் சொல்கிறாள்: அரசே, நானும் இந்தப் பெண்ணும் ஒரே வீட்டில் வசிக்கிறோம். எனக்குக் குழந்தை பிறந்த மூன்று தினங்களுக்குப் பிறகு இவளுக்கும் ஒரு குழந்தை பிறந்தது. ஒருநாள் தூங்கும் போது இவள் அந்தக் குழந்தையின் மீது புரண்டு படுத்ததால் குழந்தை இறந்து விட்டது. இப்போது அவள் என் குழந்தையைத் தன் குழந்தை என்கிறாள்.

”இவள் பொய் சொல்கிறாள். என் குழந்தையைத் திருடிக் கொண்டு விட்டாள்” என்கிறாள் இன்னொரு பெண்.

சாலமன் ஒரு வாளைக் கொண்டு வரச் சொல்லி, குழந்தையை இரண்டு துண்டாக வெட்டி ஆளுக்கு ஒரு துண்டைக் கொடுங்கள் என்கிறான்.

இரண்டாவது பெண், எனக்கு இல்லாத குழந்தை அவளுக்கும் இருக்கக் கூடாது; வெட்டிக் கொடுங்கள் என்கிறாள். முதல் பெண், வேண்டாம், வேண்டாம், வெட்டாதீர்கள். என் குழந்தை சாகக் கூடாது. அது அவளிடமே உயிரோடு இருக்கட்டும் என்கிறாள். சாலமன் வழங்கிய தீர்ப்பு என்ன என்று நமக்குத் தெரியும்.

’இந்தியா’ நாடகத்தில் இந்துக்களும் முஸ்லீம்களும் ஒருவரை ஒருவர் கொன்று குவிக்கிறார்கள். மேடையில் ரத்த ஆறு ஓடுகிறது. ஒரு பக்கம் நேரு இந்தியாவைப் பிரிக்க அனுமதிக்க மாட்டேன் என்கிறார். மறு பக்கம் ஜின்னா பாகிஸ்தானை உருவாக்கியே தீருவேன் என்கிறார். அப்போது சாலமன் கதையின் தாயைப் போல் மேடையில் தோன்றும் காந்தி, இந்திய மண்ணில் ரத்த ஆறு ஓடுவதை விட என் தேசம் இரண்டாகப் பிரியட்டும் என்கிறார்.

சிஸ்யு சொல்கிறார்: ”கடைசியில் இந்தியா இந்தியர்களுக்குக் கிடைத்து விட்டது. ஆனால் எப்படிக் கிடைத்தது? இரண்டு துண்டாக, காயம் பட்டு, வெறுப்பினால் சூழப்பட்டு அல்லவா கிடைத்தது? இந்தியாவின் உயிரைக் காப்பாற்றும் பொருட்டு, அதன் ஒரு அங்கத்தை வெட்டச் சம்மதித்தார் காந்தி.”

நாடகத்தில் காந்தி ஜின்னாவிடம் சொல்கிறார்:

”பயமில்லாத, வெறுப்பில்லாத அன்பென்பது இல்லை. ஆண், பெண், இந்து, முஸ்லீம்… நாம் எல்லோருமே மிகவும் வித்யாசமானவர்கள், விசித்திரமானவர்கள். உங்களையும் என்னையும் எடுத்துக் கொண்டால், இங்கே என்னைப் பார்த்துக் கொண்டிருப்பது என்னைப் போன்றது அல்ல! இதை விட வித்தியாசம் என்ன வேண்டும்? பளபளக்கும் தலைமுடியோடு, சூட், டை கட்டிக் கொண்டு அழகான பல் வரிசையோடு அழகாக நிற்கும் நீங்கள்! இதில் எதுவுமே இல்லாத நான்! தொப்பி, அழகான பல் வரிசை, கோட் சூட் இல்லாத, நடந்து நடந்து வெடித்த கால்களைக் கொண்ட நான்! இவ்வுலகில் எது நம்மை ஈர்க்கிறது என்பது பெரும் மர்மம்; பெண், வேறொரு மதம், அடுத்த மனிதன்? ஒரு மரத்தில் இருக்கும் இரண்டு இலைகள் ஒன்றைப் போல் மற்றொன்று இருப்பதில்லை, ஆனால் இரண்டும் காற்றால் அசைவிக்கப்படுகிறது. இது மனித மரத்திற்கும் பொருந்தும். இது வளரவும், முதிரவும் நாம் நேரம் கொடுக்க வேண்டும்.”

ஜின்னாவின் அன்பில்லாத மனதால் காந்தியின் அன்பைப் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை அவர்களுக்கு இடையிலான தொடர்ந்த விவாதங்களின் மூலம் நிறுவும் சிஸ்யு, அடுத்த காட்சியில் ஜின்னாவின் மகள் தீனாவை ஜின்னா புறக்கணிப்பதை விவரிக்கிறார். தீனா ஒரு பார்ஸி இளைஞனைக் காதலிக்கிறாள். ஜின்னாவின் இறந்து போய் விட்ட அவரது உயிருக்குயிரான மனைவியே ஒரு பார்ஸிதான் என்றாலும் அவரால் தீனாவின் பார்ஸி காதலனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஆனால் தீனாவுக்குத் தன் தந்தையை அன்பற்ற பாகிஸ்தானில் தனியாக விடச் சம்மதம் இல்லை. தன் அத்தை (ஜின்னாவின் சகோதரி) ஃபாத்திமாவிடம் தீனா சொல்கிறாள்:

“Mais, ma tante, je ne peux pas le laisser sans fille. Moi sans père, le Pakistan sans parsi, sans hindou, sans amour.”

சிஸ்யூவின் ஃப்ரெஞ்ச் எவ்வளவு கவித்துவமானது என்பதைக் காண்பிப்பதற்காக இதை ஃப்ரெஞ்சிலேயே கொடுத்திருக்கிறேன். sans என்பதற்கு ‘இல்லாத’ என்று பொருள் கொண்டு மேலே உள்ள வசனத்தைப் படித்துப் பார்க்கவும்.

“ஆனால், ஆண்ட்டி, அவரை என்னால் மகள் இல்லாதவராகவும், என்னை ஒரு தகப்பன் இல்லாதவளாகவும் விட முடியவில்லை. பார்ஸிகள் இல்லாத, இந்துக்கள் இல்லாத, அன்பு இல்லாத தேசமாக பாகிஸ்தானை விட முடியாது.”

ஆனாலும் காந்தியால் இந்தியப் பிரிவினையைத் தடுக்க முடியவில்லை. அப்போது சிஸ்யூவின் ஆத்மா La mère, la mère என்று கதறுகிறது. அன்னையே, எனது அன்னையே என்று பொருள். காந்தியை அன்னையாகக் காண்கிறார் சிஸ்யு என்பதை நாம் மறந்து விடக் கூடாது. அது மட்டும் அல்ல; தொடர்ந்து காந்தி பற்றிக் கதறிக் கொண்டே போகிறார் சிஸ்யு. ”antique deite sans dents, vieilee mère sans mamelles…”

”பற்கள் இல்லாத புராதனச் சிலை, முலைகள் இல்லாத கிழத் தாய்…”

இந்த நாடகத்தைப் படித்த போது காந்தியை இப்படிப் புரிந்து கொண்ட ஒரு இந்தியக் கலைஞன் இருக்கிறானா என்று எனக்குத் தோன்றியது. காந்தி தன் வாழ்நாள் முழுதும் தன்னுடைய ஒரு பாகம் பெண் என்று வலியுறுத்திக் கொண்டே இருந்தார். சரோஜினி நாயுடுவுக்கு (சரோஜினி நாயுடுவும் சிஸ்யுவின் நாடகத்தில் ஒரு பாத்திரம்) காந்தி எழுதிய கடிதத்தில் இதை நாம் காணலாம். (நான் இங்கே சொல்வது நிஜ காந்தியை.) அதனால்தான் அவர் பெண்களை எப்போதும் தன் அருகிலேயே வைத்திருந்தார். இந்தியா சுதந்திரம் அடைவதே பெண்களின் கைகளில்தான் இருக்கிறது என்று பலமுறை சொன்னவர் காந்தி.

இந்த நாடகத்தில் காந்தியை கடவுள் ஸ்தானத்தில் வைக்கிறார் சிஸ்யு. ”காந்தியை யாரோடும் ஒப்பிட முடியாது. சூரியனை எப்படிப் புரிந்து கொள்ள முடியாதோ அதேபோல் காந்தியையும் புரிந்து கொள்ள முடியாது. ஆனால் புரிந்து கொள்ள முடியாவிட்டாலும் பரவாயில்லை. அவர் நம்மைப் புரிந்து கொள்வார். அவரது வெளிச்சத்தால் நம்மைக் குளிப்பாட்டுவார். அவரது சிரிப்பென்ற ஓடையின் மூலம் நம்மைக் கரையேற்றுவார்.”

ஹெலன் சிஸ்யுவின் இந்தியா நாடகத்திலிருந்து மூன்று நிமிடக் காணொளி இது. முதலில் வரும் ஃப்ரெஞ்ச் அறிவிப்பு அரை நிமிடத்துக்கும் குறைவாக, 26 நொடிகள் மட்டுமே போகும். அதன் பிறகு நாடகத்தின் ஒருசில காட்சிகள். அதில் ஒரு முக்கிய விஷயம், நடிகர்கள் மேடையில் ஏறும் போது மேடையைத் தொட்டுக் கும்பிட்டு விட்டுச் செல்வது. எந்த அளவுக்கு சிஸ்யு இந்தியாவைப் பயின்றிருக்கிறார் என்பதற்கு [ஒரு சான்று அது.](http://www.ina.fr/video/CAB87033998)

***

எந்த ஒரு இந்தியரின் சரித்திரத்தையும் சாதிகளின் சரித்திரத்தை விட்டு விட்டு எழுத இயலாது. மல்லா என்பது உத்தரப் பிரதேசத்தில் உள்ள படகோட்டிகளின் சாதி. அம்மாநிலத்தின் தென்மேற்கில் மத்தியப் பிரதேசத்தை ஒட்டியுள்ள ஜாலோன் மாவட்டத்தில் உள்ள ஒரு சிறிய கிராமத்தில் மல்லா சாதியில் பிறந்தவர் ஃபூலான். பதினோரு வயதில் தொலைதூரத்தில் உள்ள ஒரு குடும்பத்தில் தன்னை விட அதிக வயது வித்தியாசம் உள்ள புத்திலால் என்பவனுக்குத் திருமணம் செய்யப்பட்டாள். பிறகு கணவன் வீட்டில் உள்ள அத்தனை பேராலும் வன்கலவி செய்யப்பட்ட ஃபூலான், அங்கிருந்து தப்பி தன் பெற்றோர் வீட்டுக்கு வந்தாள். ஆனால், அவர்கள் அவளைத் திரும்பவும் கணவன் வீட்டுக்கே அனுப்பி வைத்தனர். திரும்பவும் அங்கிருந்து தப்பி பெற்றோர் வீட்டுக்கே ஓடி வருகிறாள் ஃபூலான். இப்படியே பலமுறை நடந்ததால் ஃபூலான் ஒரு தீய பெண்ணாகக் கருதப்பட்டாள். ஸீரோ டிகிரி நாவலில் வரும் நீனா என்ற கதாபாத்திரத்தை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? உத்தரப் பிரதேசத்தில் தன் கணவன் வீட்டில் வசிக்கும் நீனா ஒருநாள் அந்த வீட்டில் உள்ள அத்தனை பேரையும் குரூரமாகக் கொன்று விட்டு ஷிரீன் என்ற தாசி வீட்டில் அடைக்கலம் புகுகிறாள். அந்த நீனாவுக்கு ஆதாரம் ஃபூலான்.

1979. ஃபூலானுக்கு வயது 16. கடைசித் தடவையாக புத்திலால் வீட்டிலிருந்து ஓடி வந்த ஃபூலானுக்குக் கொள்ளைக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவனோடு தொடர்பு ஏற்படுகிறது. பின்னர் அந்தக் கும்பலிலேயே சேர்கிறாள். அப்போதைய உத்தரப் பிரதேசம் கற்பனையே செய்ய முடியாத அளவுக்கு வறுமையில் இருந்தது. மனிதர்கள் பசித்த மிருகங்களைப் போல் அலைந்து கொண்டிருந்தார்கள். இப்போதும் அந்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை. வாரத்துக்கு ஒருமுறையாவது பெண்கள் வன்கலவி செய்யப்படும் செய்தி அங்கிருந்து வந்து கொண்டிருக்கிறது. சமீபத்தில், ஒரு காவல்நிலையத்துக்கு எதிரிலேயே ஒரு பெண் ஒரு கும்பலால் வன்கலவி செய்யப்பட்டாள்.

முன்பு மத்தியப் பிரதேசத்தின் பகுதியாக இருந்த சத்தீஸ்கர் மாநிலத்தில் இப்போது நக்ஸல்பாரிகள் ஒரு இணை அரசாங்கத்தையே நடத்திக் கொண்டிருக்கின்றனர். சமீபத்தில் கூட அங்கே 25 ராணுவத்தினர் நக்ஸல்பாரிகளால் கொல்லப்பட்டதை நினைவு கூரலாம். இதற்குக் காரணம், அந்தப் பகுதிகளில் நிலவும் கொடிய வறுமைதான். இந்த வறுமை இயல்பாக ஏற்பட்டதல்ல; காலம் காலமாக நடந்து வரும் சுரண்டலும், அரசாங்கத்தின் பாராமுகமுமே. ஃபூலான் சேர்ந்திருந்த கொள்ளைக் கூட்டத்தின் தலைவன் பாபு குஜ்ஜார் சாதியைச் சேர்ந்தவன். மல்லா சாதியை விட உயர்நிலையில் இருப்பது குஜ்ஜார். பாபு ஃபூலானை பலாத்காரம் செய்ய முயற்சிக்கிறான். அதற்குத் தடையாக இருந்தான் விக்ரம். விக்ரம் மல்லா சாதியைச் சேர்ந்தவன். ஃபூலானுக்காக பாபுவைக் கொல்கிறான் விக்ரம்.

கணவன் வசித்த கிராமத்துக்குத் தன் குழுவோடு சென்று அவனைப் பன்றியை இழுத்து வருவது போல் இழுத்து வந்து எல்லோர் எதிரிலும் கத்தியால் குத்துகிறாள் ஃபூலான். புத்திலால் பிழைத்து விட்டான் என்றாலும் கழுத்திலிருந்து அடி வயிறு வரை ஃபூலான் போட்ட கத்தியின் அடையாளம் அவனிடமிருந்து மறையவே இல்லை. இதற்கிடையில் அந்தக் குழுவில் இருந்த ஸ்ரீராம் மற்றும் லாலா ராம் என்ற இரண்டு ராஜபுத்திர சாதியினர் ஃபூலானுக்கு எதிராகக் கிளம்பினர்.

ஒருநாள் இரவு. விக்ரம் ஃபூலானைத் தன் அருகில் அழைக்கிறான். வனத்தில் வாழும் கொள்ளையரிடையே ஒரு கடுமையான விதி உண்டு. தலைமைப் பதவியில் இருப்பவர்கள் இரவில் ஒன்றாக ஒரே இடத்தில் படுக்கக் கூடாது. அதை விக்ரமும் ஃபூலானும் ஒருநாளும் கடைப்பிடிக்கத் தவறியதில்லை. அன்றைய இரவு அந்த விதியிலிருந்து தவறினார்கள். அதுவே விக்ரமின் முடிவுக்குக் காரணமாக அமைந்தது. ஏற்கனவே அவன் துப்பாக்கிக் காயத்தால் பாதிக்கப்பட்டிருந்தான். கொஞ்சம் அசந்தால் எதிரிகள் சுட்டுக் கொன்று விடுவார்கள். ஆனாலும் அன்றைய இரவு விக்ரம் அழைத்ததும் நீண்ட நாள் அவன் அருகில் செல்லாத ஃபூலான் புது மணப்பெண்ணின் வெட்கத்துடன் சென்றாள். அன்றைய இரவு இருவரும் அடித்துப் போட்டது போல் உறங்கினார்கள். அதுதான் அவர்கள் இருவரும் சேர்ந்திருந்த கடைசி இரவாக அமைந்தது.

விக்ரம் சுட்டுக் கொல்லப்படுகிறான். ஃபூலானை சிறைப் பிடித்து பெஹ்மாய் என்ற ராஜபுத்திர கிராமத்துக்கு இழுத்து வருகிறார்கள் ஸ்ரீராமும், லாலா ராமும். (கான்பூர் தெஹாத் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் பெஹ்மாய்.) ஆடையைக் கழற்றி அவளை நிர்வாணமாக்கித் தெருக்கள் முழுவதும் வலம் வரச் செய்து அங்கிருந்த அத்தனை ஆண்களையும் (அவ்வளவு பேரும் ராஜபுத்திர சாதியினர்) அவளை வன்கலவி செய்ய வைத்தனர். அடித்துத் துன்புறுத்தினார்கள். மூன்று வாரங்கள் இப்படியே கழிந்தது. இந்தச் சித்ரவதையை விட மரணம் எத்தனையோ மேல் என்று தோன்றியது ஃபூலானுக்கு. என்னைக் கொன்று விடுங்கள் என்று கதறினாள். ”என்ன, கொல்வதா? உன்னை வைத்து எவ்வளவோ செய்ய வேண்டியிருக்கிறது” என்று சொல்லி வக்கிரமாகச் சிரித்தான் ஸ்ரீராம்.

எத்தனை பேர் என்று எண்ண முடியவில்லை. பிரக்ஞை இழக்கும் வரை மாற்றி மாற்றி வன்கலவி செய்தார்கள். ஒரு கட்டத்தில் தன் உடல் மேல் படர்பவன் ஒரு நிழலைப் போல் தெரிந்தான். அதற்குப் பிறகு பிரக்ஞை இழந்து விட்டாள். எத்தனை நேரம் அப்படிக் கிடந்தாள் என்று தெரியவில்லை. பிரக்ஞை வந்த போது குடிசைக்கு வெளியே சத்தம் கேட்டது. ”அவள் செத்து விட்டாள்; என்னால் பிணத்தைப் புணர முடியாது” என்கிறான் ஒருத்தன். இன்னமும் உடலில் ஆடை எதுவும் இல்லை என்பதை அவளால் உணர முடிந்தது. மூன்று வாரங்கள் இப்படியே கழிந்தன.

கடைசியில் பெஹ்மாயிலிருந்த தாழ்த்தப்பட்ட சாதியைச் சேர்ந்த ஒருவனின் உதவியால் அங்கிருந்து தப்புகிறாள் ஃபூலான். மல்லா சாதியைச் சேர்ந்தவர்களையும் முஸ்லீம்களையும் சேர்த்து ஒரு குழுவை உருவாக்கிக் கொண்டு மீண்டும் பெஹ்மாய் கிராமத்துக்குச் சென்று 21 ராஜபுத்திர சாதி ஆண்களை வரிசையாக நிற்க வைத்து சுட்டுக் கொல்கிறாள் ஃபூலான். அன்றைய தினம் ஃபெப்ருவரி, 14, 1981. பெஹ்மாய் படுகொலை என்று அழைக்கப்படும் அந்தச் சம்பவம்தான் ஃபூலான் தேவியை அரசியலுக்குக் கொண்டு வந்தது. அதற்குப் பிறகு நடந்த கதை நமக்குத் தெரியும்.

சரி, ஃபூலான் தேவிக்கும் ஹெலன் சிஸ்யூவுக்கும் என்ன சம்பந்தம்? இதற்கு முன்னதாக நாம் பார்த்தது ஒரு தாயின் கதை. காந்தி என்ற தேசத்தாயின் கதை. அப்படி ஒரு மகத்தான தாயின் அன்பை எழுதிய சிஸ்யு அந்த நாடகத்தை எழுதுவதற்கு முன்னதாக, ஃபூலான் தேவியின் கதையை நாடகமாக (The Conquest of the School at Madhubai) எழுதினார். சிஸ்யு ஏன் ஃபூலான் தேவியைத் தேர்ந்தெடுத்தார்? அவரே சொல்கிறார்:

“தியேட்டர் என்பதையே நான் பெண் வடிவமாகத்தான் பார்க்கிறேன். நாடக மேடையில் இருப்பவர்கள் மனிதர்கள் அல்ல, அவர்கள் கதாபாத்திரங்கள். அப்படியானால் உலகம் என்பது ஒரு நாடக மேடைதானே, அதில் இருக்கும் மனிதர்களும் கதாபாத்திரங்கள்தானே என்ற ஒரு கேள்வி எனக்குள் எழுந்தது. அப்படிப்பட்ட கதாபாத்திரங்களை நான் உலக வாழ்வில் தேடித் தேடிப் பார்த்தேன். இந்தப் பூமியில் ஈடிபஸைப் போல் ஒரு மனிதன் இருக்கக் கூடுமா? உலகில் நீதியையும் நியாயத்தையும் நிலைநாட்டுவதற்காக வாளைச் சுழற்றும் கதாநாயர்களும் வீராங்கனைகளும் இந்த உலகில் இருக்கிறார்களா? அல்லது, எல்லாமே கதையும் புராணமும்தானா? இப்படித் தேடிக் கொண்டிருந்த போது கடைசியில் எனக்கு ஒரு பெண் கிடைத்தாள். நம்ப முடியாத ஒரு இந்தியக் கதாபாத்திரம். அவள் பெயர் ஃபூலான் தேவி.”

**ஃப்ரெஞ்ச் மொழியின் நுணுக்கங்களை எனக்குத் தொடர்ந்து கற்பித்து வரும் காயத்ரிக்கு நன்றி என்று சொன்னால் அது வெறும் சம்பிரதாயமாகி விடும். அவருக்கு நான் கடன்பட்டிருக்கிறேன். இந்தத் தொடரில் வரும் சிஸ்யு மொழிபெயர்ப்புகளைச் செய்ததும் காயத்ரியே.**

கட்டுரையாளர் குறிப்பு: [சாரு நிவேதிதா](https://www.facebook.com/charu.nivedita.9)

புகைப்படம்:[பிரபு காளிதாஸ்](https://www.facebook.com/prabhu.kalidas)

தமிழைவிட மலையாள இலக்கிய உலகில் பிரசித்தமான சாரு நிவேதிதா, கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆங்கில இலக்கிய உலகில் பிரபலமாக இருக்கிறார். தமிழ்க் கலாச்சாரத்தை ஆங்கில உலகுக்கு அறிமுகம் செய்யவேண்டியது இப்போதைய அவசரமான தேவை என்று கருதும் சாரு, ஏஷியன் ஏஜ் ஆங்கில தினசரியில் மூன்று ஆண்டுகள் எழுதிய பின்னர் இப்போது, லண்டனிலிருந்து வெளிவரும்Art Review Asia என்ற பத்திரிகையில் Notes From Madras என்ற தொடரை எழுதி வருகிறார். தமிழில் ஸீரோ டிகிரி, ராஸ லீலா, எக்ஸைல் போன்ற நாவல்களும் பல கட்டுரை தொகுதிகளும் எழுதியிருக்கிறார்.

[நாடோடியின் நாட்குறிப்புகள் 23 – சாரு நிவேதிதா](https://www.minnambalam.com/k/2017/04/24/1492972211)

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *