uபழிவாங்கும் மத்திய அரசு: தலைவர்கள் கண்டனம்!

public

காவிரி விவகாரத்தில் கர்நாடகத் தேர்தலைக் காரணம் காட்டி மத்திய அரசு மூன்று மாதங்கள் அவகாசம் கேட்டுள்ள நிலையில், அதற்கு எதிராக பல்வேறு தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்.

உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு முடிந்த நிலையிலும் இதுவரை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கப்படவில்லை. இதனை எதிர்த்து தமிழக அரசு மத்திய அரசின் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடர்ந்துள்ளது. வரும் 3ஆம் தேதி உண்ணாவிரதப் போராட்டமும் அதிமுக சார்பில் நடத்தப்படுகிறது.

இந்த விவகாரத்தில் காலக்கெடு முடியும் வரை எதுவும் செய்யாத மத்திய அரசு தற்போது கர்நாடகத் தேர்தலைக் காரணம் காட்டி மூன்று மாதம் அவகாசம் கேட்டு மனுதாக்கல் செய்துள்ளது. மேலும் ஸ்கீம் என்ற வார்த்தைக்கு விளக்கமும் கேட்டுள்ளது.

இதுகுறித்து தமிழகத் தலைவர்கள் கூறிய கருத்துக்கள் பின்வருமாறு…

**ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர்**

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கு உச்சநீதிமன்றத்தில் 3மாத கால அவகாசம் கேட்டு மத்திய பா.ஜ.க அரசு காலை 11 மணிக்கு மனு தாக்கல் செய்தபிறகு, மாநில அரசின் சார்பில் 11.15 மணிக்கு நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையிலும் கூடவா மண்டியிட்டுப் பின்தொடர வேண்டும்?.

மூன்று மாதத்திற்குள் கர்நாடக மாநிலத் தேர்தல் நடந்து முடிந்துவிடும். ஆக தேர்தலை காரணம் காட்டி அரசியல் ரீதியாகத் தமிழகத்தை பழிவாங்கக் கூடிய வகையில் மத்திய அரசு அணுகிக் கொண்டிருக்கிறது. இதில் மத்திய அரசும், மாநில அரசும் இணைந்துகொண்டு ஒரு கபட நாடகத்தை நடத்தி தமிழகத்தை வஞ்சித்துக் கொண்டிருக்கிறார்கள்.

**கே.பாலகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்**

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைப்பதற்கு 24 மணி நேர அவகாசமே போதுமானது. ஆனால், 6 வார காலம் இப்பணியினை முடக்கி விட்டு இப்போது மேலும் அவகாசம் கோருவது இப்பிரச்சனையை கிடப்பில் போட்டு, தமிழகத்தை வஞ்சிக்கும் உள்நோக்கம் கொண்டது. தமிழக அரசு உடனடியாக உச்சநீதிமன்றத்தில் இவ்வாறு அவகாசம் அளிக்கக் கூடாது என வற்புறுத்தும் வகையில் மனுவினை தாக்கல் செய்ய வேண்டுமென வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தின் உயிர்நாடியான காவிரி பிரச்சனையில் நமது உரிமையை நிலைநாட்ட அரசியல் வேறுபாடுகளின்றி அனைத்துக் கட்சிகளும், அனைத்துப் பகுதி பொதுமக்களும் ஒன்றிணைந்து போராடுவது மட்டுமே தீர்வாக அமையும் மத்திய மோடி அரசின் நயவஞ்சகத்தை முறியடிக்க மேற்கண்ட அடிப்படையில் அனைவரும் ஒன்றுதிரண்டு போராட முன்வர வேண்டும்.

**வாசன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர்**

காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வழங்கியத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்றும் இதனை எதிர்த்து மேல்முறையீடு செய்யக்கூடாது என்று உத்தரவிட்ட பிறகும், கால அவகாசம் கேட்டு மத்திய அரசு மனுதாக்கல் செய்திருப்பது நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காததையே காட்டுகிறது.

கர்நாடகத் தேர்தலைக் கருத்தில் கொண்டு கருகும் பயிர்களையும் விவசாயிகளையும் புறக்கணிப்பது தவறானது. அரசியல் பார்க்காமல் மக்களின் வாழ்வாதாரப் பிரச்னையை மத்திய அரசு அணுக வேண்டும். மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத எந்த அரசும் மக்களின் நம்பிக்கையை இழந்துவிடும். மத்திய மாநில அரசுகள் விரைவில் இதனை உணரும்.

**ராமதாஸ், பாமக நிறுவனர்**

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்காக உச்சநீதிமன்றம் விதித்த கெடு தான் முடிந்திருக்கிறதே தவிர, காவிரி மேலாண்மை வாரியத்தின் தேவை இன்னும் முடிவடையவில்லை. எனவே, மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி அரசியல் இயக்கங்களை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும். இந்தப் பொறுப்பை தமிழக அரசே ஏற்றுக் கொண்டால் போராட்டத்தின் வேகம் இன்னும் தீவிரமாக இருக்கும். தமிழகத்தை ஆளும் அடிமை அரசு அதற்கெல்லாம் தயாராக இல்லை என்பது தான் உண்மை.

தமிழ்நாட்டு மக்களின் உயிர்நாடிப் பிரச்சினையான காவிரிப் பிரச்சினைக்காக உண்மையாகப் போராடாமல் உண்ணாவிரத நாடகங்களின் மூலம் காவிரிப் பிரச்சினையில் இழைத்த துரோகங்களை பினாமி அரசு மறைக்க முடியாது. இதற்கான தண்டனையை மக்கள் விரைவில் அளிப்பர்.

மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை வரவேற்பு தெரிவித்துள்ளார்.

**தமிழிசை, தமிழக பாஜக தலைவர்**

தமிழகத்திற்கான காவிரி உரிமைகளைப் பெற்றுத் தர வேண்டும் என்பதில் தமிழக பாஜகவிற்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் இந்தப் பிரச்னைக்கு தீர்வு காணப்போவது பாஜக மட்டுமே. உச்ச நீதிமன்றம் என்ன கூறியதோ அதனை செயல்படுத்த வேண்டுமென தமிழக பாஜக சார்பில் அமைக்கப்பட்ட குழு மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்தியுள்ளது. தற்போது மத்திய அரசை அனைவரும் குறைக் கூறிக் கொண்டிருக்கும் நேரத்தில், மத்திய அரசு மூன்று மாதம் அவகாசம் வேண்டுமென உச்ச நீதிமன்றத்தை அணுகியுள்ளது. அதற்கு மத்திய அரசு கூறியுள்ள காரணங்களுக்கும் ஏற்றுக்கொள்ளக் கூடிய காரணங்கள்தான்.

கர்நாடகாவில் தேர்தல் நடைமுறை ஆரம்பமாகிவிட்டதால் அங்கு எவ்வித குழப்பமும் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதற்காகவும், இரு மாநிலங்களுக்குமான ஒற்றுமையும், ஒருங்கிணைப்பும் பாதுகாக்கப்படும் என்ற காரணத்திற்காகவும் கால அவகாசம் கேட்டிருக்கிறார்கள்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *