iசுஜித் உடல் அடக்கம்: தலைவர்கள் இரங்கல்!

public

ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் மீண்டு வருவான் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவன் உயிரிழந்தது தமிழக மக்களைச் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கடந்த 25 ஆம் தேதி ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த திருச்சி நடுகாட்டுப்பட்டியைச் சேர்ந்த சிறுவன் சுஜித்தின் உடல் அழுகிய நிலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் பேரிடர் மீட்பு குழுவினரால் எடுக்கப்பட்டது. மணப்பாறை அரசு மருத்துவமனையில் நடைபெற்ற பிரேத பரிசோதனைக்குப் பிறகு பொது மக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டது. சுஜித்தின் உடல் வைக்கப்பட்டிருந்த சவப்பெட்டியை அவரது தாய் அணைத்துப் பிடித்திருந்தது பார்ப்பவர்களைக் கண்கலங்கச் செய்தது.

சுஜித்தின் சவப்பெட்டியின் அருகில் அவரது தந்தை பிரிட்டோ தனது முதல் குழந்தை புனித் ரோஷனை ஏந்தியவாறு செய்வதறியாது நிற்கிறார். தம்பி இறந்துவிட்டதை உணர்ந்து, திரும்பி வரமாட்டாயா என்று சிறுவனின் உடலை ஏக்கத்துடன் பார்த்தார் சுஜித்தின் அண்ணன். இது அனைவரது கண்களிலும் கண்ணீர் வர வைத்தது.

சுஜித்தின் உடலுக்கு மாவட்ட ஆட்சியர் சிவராசு, எம்.பி.ஜோதிமணி, அமைச்சர்கள் உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். அவரது உறவினர்களும் பொதுமக்களும் அஞ்சலி செலுத்தினர். உறவினர்கள் கூறுகையில், ‘மாமா, அத்தை என்று அன்போடு ஒடி வருவான், அவன் இன்று இல்லாதது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது’ என்று வேதனையுடன் தெரிவித்தனர்.

சிறுவனின் உடலுக்கு மெழுகுவர்த்தி ஏந்தியும், பிரார்த்தனை செய்தும் அஞ்சலி செலுத்தப்பட்டது. மக்கள் அஞ்சலிக்கு பின்னர் பாத்திமாபுதூர் கல்லறையில் குழந்தை சுஜித் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

**தலைவர்கள் இரங்கல்**

சுஜித்தின் மரணத்துக்குத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ”குழந்தை சுஜித் உயிரிழந்த செய்தி கேட்டு வருந்துகிறேன். சுஜித்தின் இழப்பால் வாடும் பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்” என்று பதிவிட்டுள்ளார்.

கடந்த 5 நாட்களாக மீட்பு பணிகளை அருகிலிருந்து கண்காணித்து வந்த சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ”நான் மட்டுமல்ல இந்த உலகமே தன் பிள்ளையாய் நினைத்த சுஜித்தின் அழுகுரல் என்னுள் இன்னும் ஒலிக்கிறது, மனம் வலிக்கிறது!.

எப்படியும் வந்து விடுவாய் என்றுதான் ஊனின்றி, உறக்கமின்றி இரவு பகலாய் இமை மூடாமல் உழைத்தோம். இப்படி எம்மை புலம்பி அழவிடுவாய் என்று எண்ணவில்லை. கருவறை இருட்டு போல் உள்ளே இருப்பாய் என நினைத்தோம். கல்லறை இருட்டாய் மாறும் என்று எண்ணவில்லை.

மருத்துவமனையில் வைத்து உச்சபட்ச மருத்துவம் வழங்க நினைத்துக் காத்திருந்தேன். இப்போது மார்ச்சுவரியில் பார்க்கும் நிலையில் இதயம் கனத்துக்கிடக்கிறது. 85 அடி ஆழத்தில் நான் கேட்ட உன் மூச்சு சத்தம்தான் என்னை மீட்பு பணியில் ஒரு தந்தை ஸ்தானத்தில் பாச பிணைப்பில் இணைத்து இயங்க வைத்தது. மனதைத் தேற்றிக் கொள்கிறேன். ஏனென்றால் இனி நீ கடவுளின் குழந்தை சோகத்தின் நிழலில், வேதனையின் வலியில்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

**சுஜித் கற்று தந்த பாடம்**

ஆழ்துளை குழிகளில் நிகழும் உயிரிழப்பில் இதுவே கடைசியாக இருக்கட்டும். தன் உயிரைக் கொடுத்து சுஜித் கற்றுத் தந்திருக்கிற பாடத்தை அனைத்து தரப்பினரும் இனியாவது கடைப்பிடிக்க வேண்டும் என்று அமமுக துணை பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் வலியுறுத்தியுள்ளார்.

** ஆழ்துளை கிணறுகளை மூட வேண்டும்**

சுஜித்தை மீட்கப் பாடுபட்ட அனைவரின் முயற்சியும் பாராட்டத்தக்கது, இருப்பினும் குழந்தை சுஜித் உயிருடன் மீட்க முடியாதது, வேதனை அளிக்கிறது. இத்துயரச்சம்பவத்தை பாடமாகக் கொண்டு,மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி உடனடியாக, திறந்த நிலையிலுள்ள அனைத்து ஆழ்துளைக் கிணறுகளையும் மூட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டுள்ளார்.

சுஜித் மரணம்..வேதனையளிக்கிறது…இருந்து..உலகிற்கு…பாடம் கற்பிக்காமல், இறந்து பாடம் கற்பித்துள்ளான் கண்ணீர் அஞ்சலி என்று தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

** இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சு சாவுகள்**

உலகத்தின் நீளமான சவக்குழி இதுதானோ என்னவோ?நடக்கக் கூடாதது நடந்தேறிவிட்டது. மரணத்தில் பாடம் படிப்பது மடமைச் சமூகம். மரணத்திலும் கல்லாதது அடிமைச் சமூகம்.

மரணக்குழிக்குள் மண் விழுவதற்குள் அனைத்து குழிகளையும் மூடுக. மெழுகுவர்த்தி அணைவதற்குள் கண்ணீரைத் துடைத்துவிடு. வானம் பார்க்கும் தொழில்நுட்பமே, குனிந்து பாதாளம் பார். இந்த மரணத்தோடு முடியட்டும் பிஞ்சுச்சாவுகள் என்று கவிஞர் வைரமுத்து தன்னுடைய கவிதை மூலம் இரங்கல் தெரிவித்துள்ளார்.

**உயர் நீதிமன்றத்தில் வழக்கு**

சுஜித் இறப்பைத் தொடர்ந்து முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உதவியாளர் பொன்ராஜ் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், ஆழ்துளைக் கிணறுகள் தோண்டும்போது கடைப்பிடிக்க வேண்டிய நடைமுறைகளைப் பின்பற்ற உத்தரவிட வேண்டும், உயிரிழந்த சுஜித் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க உத்தரவிடவேண்டும், உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல் வழங்கிய அடிப்படையில் தமிழக அரசு சட்டத்தை அமல்படுத்த உத்தரவிட வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *