புத்தாண்டு: மக்கள் அலையாகக் காட்சியளித்த மெரினா!

public

2019ஆம் ஆண்டு விடைபெற்று, 2020 புத்தாண்டு கோலாகலமாகப் பிறந்துள்ளது. புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு நகரங்களில் 12 மணி அளவில் இளைஞர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை மெரினா கடற்கரையில் குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் ஒன்று திரண்ட பல்லாயிரக்கணக்கானோர், சரியாக 12 மணியளவில் ஹேப்பி நியூ இயர் என ஒரே மாதிரியாக கோஷம் எழுப்பி புத்தாண்டை வரவேற்றனர். மேலும் நடன நிகழ்ச்சிகள், விளையாட்டுகள் என மெரினா கடற்கரை களைகட்டியது.

மக்கள் அலையாகக் காட்சியளித்த மெரினாவில் போலீசார் பலத்த பாதுகாப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பாதுகாப்புப் பணியில் இருந்த சென்னை ஆணையர் விஸ்வநாதன், சிறுவர்களுடன் கேக் வெட்டி புத்தாண்டைக் கொண்டாடினார்.

கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ஹோட்டல்களில் ஆட்டம்பாட்டம் களைகட்டியது. இளைஞர்கள் இளம்பெண்கள் ஏராளமானோர் திரண்டிருந்து புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். கிழக்கு கடற்கரைச் சாலையில் இருசக்கர வாகனங்களும், கார்களும் அணிவகுத்துச் சென்றதையும் காண முடிந்தது.

பெசன்ட் நகர் கடற்கரையிலும் ஒன்று திரண்ட மக்கள் விண்ணை முட்டும் அளவில், ஹேப்பி நியூ இயர் என கோஷங்களை எழுப்பி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். புத்தாண்டை முன்னிட்டு சென்னையில் பல்வேறு கடைகளும் வண்ண விளக்குகளால் அலங்கரிப்பட்டுள்ளன. குறிப்பாக தி.நகர் வண்ண விளக்குகளால் நள்ளிரவில் ஜொலித்து காணப்பட்டது.

புத்தாண்டை வரவேற்கும் வகையில் சென்னையில் உள்ள 100 முக்கிய கோயில்கள் மற்றும் தேவாலயங்களில் நள்ளிரவில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. சாந்தோம் தேவாலயம் உட்பட அனைத்து தேவாலயங்களிலும் இரவு 11 மணி முதல் காலை 4 மணி வரை சிறப்பு பிரார்த்தனைகள் நடத்தப்பட்டன. அதுபோன்று திருச்செந்தூரில் நள்ளிரவு ஒரு மணிக்கு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நடை திறக்கப்பட்டுச் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

இதேபோன்று ஈரோடு, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி மக்கள் புத்தாண்டைக் கொண்டாடினர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *