டெல்லி சிஏஏ போராட்டத்தில் ஏற்பட்ட வன்முறையில் தலைமைக் காவலர் ரத்தன்லால் உயிரிழந்தார்.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இரண்டு மாதங்களுக்கும் மேலாக போராட்டங்கள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. தலைநகரான டெல்லியில் ஷாகின்பாக் உள்ளிட்ட பல இடங்களில் போராட்டங்கள் நடைபெறுகிறது.
இந்த நிலையில் டெல்லி மஞ்ச்ப்பூர் யமுனா விஹார் பகுதியில் நடந்துவரும் சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் இன்று (பிப்ரவரி 24) பிற்பகல் வன்முறை ஏற்பட்டது. பாபர்பூர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் இரு தரப்பினர் ஒருவரை ஒருவர் கற்களை வீசித் தாக்கிக்கொண்டதால் சாலை முழுவதும் கற்கள் நிரம்பியிருந்தன. மேலும், அங்கிருந்த வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு தொற்றிக்கொண்டது. துப்பாக்கிச் சூடு நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் காவல் துறையினர் அங்கிருந்தவர்களை விரட்டியடித்தனர். கல் வீச்சில் காயமடைந்தவர்கள் ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.
போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதில் காயமடைந்த சோலக்பூர் காவல் நிலைய தலைமைக் காவலர் ரத்தன்லால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து வடகிழக்கு டெல்லி மாவட்டத்தின் 10 இடங்களில் காவல் துறை 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது. சில மணி நேரத்தில் ட்ரம்ப் டெல்லிக்குச் செல்லவுள்ள நிலையில், இந்த வன்முறையால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக டெல்லி வடகிழக்கு உதவி ஆணையர் வேத் பிரகாஷ் சூர்யா கூறுகையில், “இரு தரப்பினரிடமும் நாங்கள் பேச்சுவார்த்தை நடத்தினோம். இப்போது நிலைமை அமைதியாக இருக்கிறது. நாங்கள் தொடர்ந்து மக்களிடம் பேசுகிறோம்…இப்போது நிலைமை கட்டுக்குள் உள்ளது” என்று தெரிவித்தார்.
வன்முறை காரணமாக ஜாபர்பாத், மஞ்ச்ப்பூர்-பாபர்பூர் மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவு வாயில்கள் இழுத்து மூடப்பட்டன. இந்த ரயில் நிலையங்களில் மெட்ரோ ரயில்கள் நிறுத்தப்படாது என்றும் டெல்லி மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், “வன்முறை ஏற்பட்டுள்ள பகுதிகளில் அமைதியை உறுதி செய்து சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டுமென துணை நிலை ஆளுநர் மற்றும் உள் துறை அமைச்சரைக் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
துணை நிலை ஆளுநர் கூறுகையில், “டெல்லியில் சட்டம்-ஒழுங்கை நிலைநிறுத்த வேண்டுமென டெல்லி கமிஷனர் மற்றும் காவல் துறையினருக்கு அறிவுறுத்தியுள்ளேன். நிலைமை உன்னிப்பாக கண்காணிக்கப்பட்டுவருகிறது. பொதுமக்கள் அனைவரும் தகுந்த ஒத்துழைப்பைத் தர வேண்டும்” என்று தெரிவித்தார்.
**த.எழிலரசன்**�,