Mநீலகிரி: மலையேறப் போவது யார்?

public

நீலகிரி மக்களவைத் தொகுதி, திமுக வேட்பாளரான ஆ.ராசா போட்டியிடுவதன் மூலம் மீண்டும் ஸ்டார் தொகுதியாகியிருக்கிறது.

மலை, சமவெளி என இரு வேறு பரப்புகளை உள்ளடக்கிய இந்தத் தொகுதியில் மொத்தம் ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன. கோவை மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம், திருப்பூர் மாவட்ட அவினாசி, ஈரோடு மாவட்ட பவானிசாகர் ஆகிய மூன்று சமவெளித் தொகுதிகளும், மேலே உதகமண்டலம், குன்னூர், கூடலூர் ஆகிய மூன்று தொகுதிகள் மலைப் பகுதிகள் என கீழே ஆரம்பித்து மேலே செல்கிறது இந்த மக்களவைத் தொகுதி.

திமுக சார்பில் ஆ.ராசாவும், அதிமுக சார்பில் தியாகராஜனும் களம் காண்கிறார்கள். தமிழகத்தில் திமுகவும், அதிமுகவும் நேரடியாக மோதும் சில தொகுதிகளில் நீலகிரியும் முக்கியமானது.

**ராசா பிரச்சாரம் எப்படியிருக்கிறது?**

காலை 8 மணிக்குள் பிரச்சாரத்துக்குப் புறப்பட்டுவிடும் ஆ.ராசா மதியம் உணவு, ஓய்வு எல்லாவற்றுக்கும் சேர்த்து 1 மணிநேர இடைவெளி எடுத்துக்கொள்கிறார். மீண்டும் பிற்பகல் புறப்பட்டு இரவு 10 மணி வரை பிரச்சாரம்தான். மலைப் பகுதிகளில் வெயிலின் தாக்கம் சற்றுக் குறைந்திருந்தாலும், சமவெளிப் பகுதிகளில் அதற்கும் சேர்த்துக் கொளுத்துகிறது வெயில். ஆனால், அதைப் பற்றிக் கவலைப்படாமல் சுறுசுறுப்பு காட்டுகிறார் ராசா.

ராசாவின் பிரச்சாரத்தில் முக்கியப் பங்கு வகிப்பது அவரது முந்தைய சாதனைகள்தான். 2009 முதல் 2014 வரை நீலகிரி தொகுதி எம்.பி.யாக இருந்தவர் ஆ.ராசா. அப்போது மத்திய அமைச்சராகவும் இருந்த நிலையில் இத்தொகுதிக்குச் செய்த பல நல்ல விஷயங்களைச் சுட்டிக்காட்டிவருகிறார்.

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு எக்ஸ்ரே மெஷின் கொடுத்தது, நீலகிரி தொகுதி சாலை மேம்பாட்டுக்காக ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்தது, கூடலூர் பாரதியார் பல்கலைக்கழகக் கல்லூரி கட்டடங்களுக்கு ரூ.3 கோடி ஒதுக்கியது, விவசாயத் தொழிலாளர்களுக்கு இணையாகத் தோட்டத் தொழிலாளர்களுக்கும் அரசின் அனைத்து சமூகநலத் திட்டங்களையும் பெற்றுக் கொடுத்தது, தாளவாடி ஒன்றியத்தில் ஏழு சிறு அணைக்கட்டுகள் கட்டியது, அஞ்சலக அம்பு திட்டத்தின் கீழ் நீலகிரி தொகுதிக்கு உட்பட்ட 35 அஞ்சலகங்களை நவீனமாக்கியது, கூடலூரில் ரூ.60 லட்சம் செலவில் பிற்படுத்தப்பட்டோர் மாணவர் விடுதி கட்டியது என்று ஏதோ சிட்டிங் எம்.பி.யைப் போல தனது சாதனைகளைச் சொல்லி வாக்குக் கேட்டுவருகிறார் ராசா.

ஒவ்வொரு பகுதியிலும் தான் ஏற்கனவே 2009-2014 காலத்தில் செய்த பணிகளைச் சுட்டிக்காட்டி, 2014-2019 காலத்தில் என்ன நடந்தது என்பதைக் கேள்வியாகக் கேட்டு இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து வாக்களியுங்கள் என்று கேட்பது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெறுகிறது.

இவற்றின் உச்சமாக திமுக தலைவர் ஸ்டாலின் நீலகிரி தொகுதிப் பிரசாரத்தின்போது, “ராசா மீதிருந்த 2 ஜி கறை துடைத்து எறியப்பட்டது. தானே வாதாடி அவ்வழக்கை உடைத்து வெற்றி பெற்றவர்” என்று குறிப்பிட்டது தொகுதியில் இருக்கும் படித்தவர்கள் முதல் படிக்காதவர்கள் வரை சென்று சேர்ந்திருக்கிறது.

**கூட்டணிக் கட்சிகள் அரவணைப்பு**

மலைப் பகுதிகளில் காங்கிரஸ் இன்னும் வலுவாகத்தான் இருக்கிறது. இத்தொகுதி ராசாவுக்கு ஒதுக்கப்படுவதற்கு முன்பு பொதுத் தொகுதியாக இருந்தபோது காங்கிரஸ் வசமே இருந்தது. இந்த நிலையில் திமுகவினர் தங்களை முறையாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்ற வருத்தம் காங்கிரசாரிடம் இருந்தது. கடந்த சனிக்கிழமை நடந்த ஆலோசனைக் கூட்டத்தில், “நாங்க உழைக்கத் தயாரா இருக்கோம். எங்களை ஏன் அரவணைச்சு போக மாட்டேங்குறீங்க?” என்று காங்கிரஸ் நிர்வாகிகளே கேட்கும் அளவுக்கு நிலைமை போனது. அதன் பின் பேசித் தீர்க்கப்பட்டு இப்போது காங்கிரசாரும் திமுகவோடு களமிறங்கிவிட்டார்கள். இதனால் மலை மேல் ராசாவின் பலம் இன்னும் கூடுகிறது.

**அதிமுக: வேலுமணி கையில் வியூகம்!**

அதிமுக வேட்பாளர் தியாகராஜன், ‘நான்தான் மண்ணின் மைந்தன். மற்ற அனைவரும் வெளியூர்காரர்களே’ என்றே தனது பிரச்சாரத்தில் முழங்கிவருகிறார். பொங்கலுக்கு எடப்பாடி அரசு கொடுத்த 1,000 ரூபாயையும், வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்குத் தமிழக அரசு அறிவித்த 2,000 ரூபாயுமே அவரது பரப்புரையில் முக்கியமாக இருக்கின்றன.

வேட்பாளரும், இப்போது மாவட்டச் செயலாளராக நியமிக்கப்பட்ட புத்திசந்திரனும் அமைச்சர் வேலுமணியின் ஆதரவாளர்கள்தான். எனவே நீலகிரியை ஆ.ராசாவிடம் கொடுத்துவிடக் கூடாது என்பதில் அமைச்சர் வேலுமணி உறுதியாக இருக்கிறார்.

மலை மீது திமுக – காங்கிரஸ் வலுவாக இருப்பதை அறிந்துவைத்திருக்கும் வேலுமணி, அதை உடைக்க தீவிரமான முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். மலை மேல் இருக்கும் நிர்வாகிகள் அல்லாமல், கீழே இருந்து தனக்கு நம்பிக்கையான 10 பேர் கொண்ட ஒரு குழுவை மலை மீது அனுப்பியிருக்கிறார் வேலுமணி. அந்தக் குழுவின் மூலம் மலை மீது திமுகவுக்கு இருக்கும் ஆதரவுப் போக்கை அதிமுகவுக்குச் சாதகமாக மாற்றுவதற்கான அத்தனை வியூகங்களையும் செயல்படுத்தி வருகிறார் வேலுமணி.

படுகர் இன பிரமுகர்கள், தோட்டத் தொழிற்சங்கத்தினர் மற்றும் ஊர்ப் பெரியவர்கள் என அத்தனை பேரையும் சந்திக்கும் வேலுமணி டீம் வீடு வீடாகவும் போய் அதிமுகவுக்காக வேலை செய்து வருகிறது. அவ்வப்போது மலை மீது வரும் வேலுமணி இதுபற்றி ஆலோசனையும் கொடுத்துச் செல்கிறார்.

அதிமுக வேட்பாளர் அருந்ததியர் சமூகம் என்பதால் அந்தச் சமூகத்தினர் பரவலாக வசிக்கும் அவினாசி பகுதிகளிலும் அதிமுகவின் வேகம் அதிகமாக இருக்கிறது. சபாநாயகர் தனபாலின் சட்டமன்றத் தொகுதியாகவும் இருப்பதால் அருந்ததி சமூக மக்களின் வாக்குகளைப் பெறத் தீவிர வேட்டையாடிவருகிறது அதிமுக.

**மக்கள் மனநிலை**

நீலகிரி மலையில் ஆரம்பித்து இந்தப் பக்கம் அவினாசி, அந்தப் பக்கம் சத்தியமங்கலம் என்று பரந்து விரிந்திருக்கும் இந்த மக்களவைத் தொகுதியில் ஆ.ராசா மீது மக்கள் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். கட்சி, சாதி என்ற பேதமெல்லாம் தாண்டி இந்த நம்பிக்கை இருப்பதை மக்களிடம் பேசும்போது காண முடிகிறது.

2 ஜி வழக்கில் வென்ற ராசா, அதன் பின் அதுபற்றி நீலகிரி தொகுதி மக்களிடமும் விளக்கினார். இதனால் 2 ஜியை மக்கள் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. முதல்வர் எடப்பாடி பழனிசாமியே ஏப்ரல் 8ஆம் தேதி செய்த பிரச்சாரத்தில், ‘திமுக வேட்பாளர் ஊழல்வாதி’ என்றெல்லாம் பேசிய பேச்சுக்கு அதிமுகவினரிடம்கூடப் பெரிய ரியாக்‌ஷன் இல்லை. அதனால் ஒருபக்கம் இப்படி பேசினாலும் அமைச்சர் வேலுமணியின் களப் பணி வியூகத்தைத் தீவிரமாக்கியிருக்கிறது அதிமுக.

பிரச்சார பாணி, அணுகுமுறைகளில் திமுக முன்னே சென்றுகொண்டிருந்தாலும், சமவெளிகளில் ஆரம்பித்து மலைப்பகுதிகள் வரை அதிமுகவின் களப்பணி திமுகவை விட வேகமாக இருக்கிறது என்பதே தற்போதைய நிலைமை.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *