டிஜிட்டல் திண்ணை: வாஜ்பாய்க்கு திருநாவுக்கரசர்; மோடிக்கு வாசன்?

public

மொபைல் டேட்டா ஆனில் இருந்தது வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது.

 “பிரதமர் மோடி சீன அதிபருடன் மாமல்லபுரத்தில் முறைசாரா உச்சி மாநாட்டுக்கு வந்தார். சீன அதிபரோடு இந்திய பிரதமர் நடத்திய பேச்சுவார்த்தைகள் ஒருபக்கம் உலக அரசியலில் விவாதப் பொருளாகியிருக்கும் நிலையில்,  மோடி விட்டுச் சென்ற சில சமிக்ஞைகள் தமிழ்நாடு அரசியலிலும் தடதடப்புகளை- சலசலப்புகளை ஏற்படுத்தி உள்ளன.

அக்டோபர் 11 ஆம் தேதி பகல் பிரதமர் மோடி சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் வந்து இறங்கினார். ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர் என பலர் அவரை வரவேற்ற நிலையில் அமைச்சரவையை அடுத்து பாஜக மற்றும் கூட்டணிக் கட்சியினரும் பிரதமருக்கு வரவேற்பு அளித்தனர்.

தேமுதிக பொருளாளர் பிரேமலதா மோடியை வரவேற்ற போது எந்த உணர்வையும் காட்டாமல் அமைதியாக இருந்த மோடி அடுத்தது,  தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி கே வாசன் தன்னருகில் வந்ததும் அந்த இறுகிய முகத்தை களைந்து விட்டு திடீரென சிரித்து, ‘ வாசன்ஜி.. எப்படி இருக்கீங்க  ? என்ன டெல்லி வந்து என்னை சந்திக்கிறதா சொன்னீங்களே… ஆனா வரவே இல்லையே? ’   என்று ஆங்கிலத்தில் கேட்டார். வாசன் இந்த வார்த்தைகளை எதிர்பாராமல் ஒரு கணம் திகைத்து விட்டார். ’வர்றேன் ஜி வர்றேன் ஜி…’ என தனக்கே உரிய சிரிப்போடு பதில் அளித்தார் வாசன்.

விமான நிலையத்தில் மோடி வெளியிட்ட இந்த வார்த்தைகள் தமிழ்நாட்டு அரசியலில் மீண்டும் ஒரு விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது. சில மாதங்களுக்கு முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி பாஜகவோடு இணையப் போகிறது என்றும் அதனால் அக்கட்சியில் இருக்கும் தொண்டர்கள் காங்கிரஸ் கட்சிக்கு வந்து விட வேண்டும் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி ஒரு அறிக்கை வெளியிட்டார். இதற்கு வாசன் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து பதிலளித்தார். ஆனாலும் தமிழக பாஜகவுக்கு தேசிய முகம் கொண்ட, அதே நேரம் தமிழ் நாட்டில் நல்ல பெயர் கொண்ட ஒரு தலைவர் வேண்டும் என்று அமித் ஷா தேடி வருவதாகவும் அது ஜி.கே. வாசனாகவே இருக்கலாம் என்றும் தொடர்ந்து அரசியல் அரங்கில் தகவல்கள் வந்து கொண்டிருந்தன.

ஜி கே மூப்பனாரின் மிக நெருங்கிய நண்பரான பிரணாப் முகர்ஜி வாசனை தன் மகனைப் போல கருதக்கூடியவர்.  பிரணாப் முகர்ஜிக்கும் மோடிக்கும் இப்போது மிக நல்ல உறவு இருந்து வருகிறது. அவர்கள் இருவருக்குமான உரையாடலில் தமிழ்நாட்டு அரசியல் பற்றிய பேச்சு வந்தபோது ஜி.கே.வாசனைப் பற்றி மோடியிடம் மிகவும் உயர்தரமாகக் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார் பிரணாப் முகர்ஜி. இந்த நிலையில்தான் சென்னை விமான நிலையத்தில்  வாசனைப் பார்த்து, அவ்வளவு வாஞ்சையான அன்பான வார்த்தைகளை பரிமாறியிருக்கிறார் மோடி.

டெல்லிக்கு வாருங்கள் வீட்டுக்கு வாருங்கள் என்று வாசனுக்கு பிரதமர் மோடி கூறியது தனிப்பட்ட முறையிலான அழைப்பு அல்ல அது பாஜகவுக்கு எப்போது வருகிறீர்கள் என்பதை குறிப்பால் உணர்த்தும் கேள்விகள் என்கிறார்கள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியிலேயே இருக்கும் நிர்வாகிகள் சிலர்.

அவர்களிடம் மேலும் பேசியபோது  சில தகவல்களை பகிர்ந்து கொண்டார்கள். ‘எம்ஜிஆர் காலத்திலிருந்து அதிமுகவில் தனிப்பட்ட செல்வாக்குடன் திகழ்ந்த திருநாவுக்கரசர் 96 க்குப் பிறகு ஜெயலலிதாவோடு முரண்பட்டு தனிக் கட்சி கண்டார். தனிக்கட்சியோடு திமுக பாஜக கூட்டணியில் இணைந்தார். ஒரு கட்டத்தில் திருநாவுக்கரசர் மத்திய அமைச்சர் ஆக வேண்டும் என்கிற முயற்சி எடுத்த  சூழலில் பிரதமர் வாஜ்பாயை அப்போது திருநாவுக்கரசர் சந்தித்தபோது, ’உங்களை மாதிரி செல்வாக்கான ஆளுங்க பிஜேபிக்கு வந்தால் தமிழ்நாட்டில் எங்கக் கட்சியும் வளரும் இல்லையா?’ இன்று திருநாவுக்கரசரிடம் கூறியிருக்கிறார் வாஜ்பாய்.

அரசியல் ரீதியாக நெருக்கடி அளித்தும்,  பல்வேறு வழக்குகளைக் காரணமாக வைத்தும் கட்சி மாற வைக்கும் அரசியலில் பிரதமர் வாஜ்பாயின் இந்த அணுகுமுறை திருநாவுக்கரசருக்கு பிடித்துப்போய் தான் அப்போது மத்திய அமைச்சரவையில் சேர்ந்து அதன்பிறகு பாஜகவில்  இணைந்தார். தேசிய செயலாளராகவும் ஆனார். அன்று திருநாவுக்கரசரை வாஜ்பாய் அழைத்தது போல இன்று  வாசனை மோடி அழைக்கிறார். திருநாவுக்கரசர் திராவிட அரசியலில் திளைத்தவர். ஆனால் வாசன் தேசிய அரசியலில் பிறந்து வளர்ந்தவர் என்பதால் திருநாவுக்கரசர் போல வாசன் பாஜகவுக்கு வந்தால், விட்டுச் செல்ல வாய்ப்பிருக்காது என்றும் நம்புகிறார் மோடி’ என்கிறார்கள் டெல்லியில் நடக்கும்  மூவ்களை அறிந்த தமாகா புள்ளிகள் சிலர்.

 

மேலும் அவர்கள், ‘தமாகாவின் தனித் தன்மையை தொடர வேண்டும் என்று வாசன் விரும்புகிறார். ஆனால் அதேநேரம் வெற்றிகரமான அரசியல் வாழ்வை தனக்கும் தன்னை சார்ந்தவர்களுக்கும் ஏற்படுத்த வேண்டும் என்பதும் வாசனின் விருப்பமாக உள்ளது.  உள்ளாட்சித் தேர்தலுக்காக இப்போது தமாகா தயாராகிவிட்டது. உண்மையை சொல்லப்போனால் தமாகா ஆரம்பித்த போது இருந்த பலத்தில் சற்று குறைந்துதான் இப்போது இருக்கிறது.ஆனால் இப்போது இருப்பவர்களில் அனைவரும் வாசனுக்காகவே கட்சியில் இருப்பவர்கள். ஜி கே வாசன் என்ன முடிவெடுத்தாலும் அவருடன் இருக்க தயார் என்ற நிலைப்பாடு கொண்டவர்கள்தான் இப்போது தமாகாவில் 99% இருக்கிறார்கள்.  எனவே மோடியின் அழைப்பு குறித்து வாசன் ஒரு முடிவெடுத்தால், அது தமாகாவின் பலத்தில் பெரிய சேதாரத்தை ஏற்படுத்தாது. இவ்வளவு வெளிப்படையாக மோடி அழைத்த பின்னரும் அவரை சந்திக்காமல் இருப்பது சரியாக இருக்காது என்பதால் விரைவில் மோடியை வாசன் சந்திப்பார். அதன் பின் வாசனின் முடிவுகளில் சில மாற்றங்கள் ஏற்படலாம் என்று கூறுகிறார்கள்’ என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

இதை ஷேர் செய்துகொண்ட ஃபேஸ்புக் இன்னொரு தகவலை டைப்பியது. “கடந்த வாரம்தான் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என்று அறிவித்தார். அதேநேரம் மோடியின் சென்னை பயணத்துக்கு வரவேற்று பத்திரிகைகளில் விளம்பரம் கொடுத்தார். சென்னை வருவதற்கு முதல் நாள் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை டெல்லியில் அழைத்து சந்தித்தார் மோடி. இப்போது வாசனையும் அழைத்திருக்கிறார் மோடி. ஆக அதிமுகவோடு கூட்டணி என்று சொல்லப்படும் நிலையிலேயே பாமக, புதிய தமிழகம், தமாகா ஆகியோரோடு தனிப்பட்ட தொடர்புகளை பேணி வளர்த்து வருகிறது பாஜக. இதுவும் மோடியின் கணக்குதான்” என்ற செய்திக்கு போஸ்ட் கொடுத்துவிட்டு  சைன் அவுட் ஆனது ஃபேஸ்புக்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *