eதுப்பாக்கிச் சூடு: சிபிஐக்கு உத்தரவு!

public

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டும் என்ற மனுவுக்குப் பதிலளிக்கும் படி சிபிஐக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனிடையே சிபிஐ விசாரணை கோரி உச்ச நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சூர்யபிரகாசம் மனு தாக்கல் செய்திருந்தார். அதில், துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும், இணையதள சேவையை மீண்டும் வழங்கக் கோரியும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்க வேண்டும் எனவும் கோரப்பட்டிருந்தது.

தலைமை நீதிபதி அனுமதியின்படி, இந்த வழக்கை நீதிபதி ரவீந்திரன், நீதிபதி வேல்முருகன் அடங்கிய அமர்வு இன்று (மே 25) விசாரித்தது.

அப்போது, தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் நர்மதா சம்பத், மாவட்டத்தில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாகவும், இணையதள சேவைகள் இரண்டு நாட்களுக்குப் பின் வழங்கப்படும் எனவும் வாதிட்டார்.

இதற்கு நீதிபதிகள், இயல்பு நிலைத் திரும்பிவிட்டால் இணைய சேவையை ஏன் வழங்கக் கூடாது என்று கேள்வி எழுப்பினர்.

இதனைத் தொடர்ந்து, சிபிஐ விசாரணை கோரும் மனுவிற்குப் பதிலளிக்குமாறு, தமிழக அரசு மற்றும் சிபிஐக்கு உத்தரவிட்டு, விசாரணையை வருகிற 30ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

அதே சமயம், துப்பாக்கிச் சூட்டில் பலியான சண்முகம் என்பவரின் உடலை ஒப்படைக்கக் கோரி அவரது தந்தை பாலையா தரப்பில் நீதிபதிகளிடம் முறையிடப்பட்டது. இதை ஏற்க மறுத்த நீதிபதிகள், பிரேத பரிசோதனை முறையாக நடந்துள்ளதா என ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்தபின் உடலை ஒப்படைக்க உத்தரவிடப்படும் என தெரிவித்தனர்.

**உச்ச நீதிமன்றத்தில் மனு**

வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி என்பவர், உச்ச நீதிமன்றத்தில் தூத்துக்குடி கலவரம் தொடர்பாக மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர், எஸ்பி மற்றும் முக்கிய காவல் துறை அதிகாரிகளுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, நீதிமன்றக் கண்காணிப்புடன் கூடிய சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும்” என்று கோரியிருந்தார்.

துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ரூ.10 லட்சம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் இது போதுமானதாக இருக்காது. எனவே உயிரிழந்தவர்களுக்கு ரூ.50 லட்சமும் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.25 லட்சமும் வழங்க உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்தச் சம்பவத்தில் உயரதிகாரிகளின் ஈடுபாடு உள்ளதால் மாநில போலீசாரால் நியாயமான விசாரணையை மேற்கொள்ள முடியாது என்றும் வழக்கறிஞர் ஜி.எஸ்.மணி குற்றம்சாட்டியிருந்தார்.

இந்த மனு வரும் 28ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வரவுள்ளது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *