முதல்வர், துணை முதல்வர்: உண்ணாவிரதம் வந்த பின்னணி!

public

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று (ஏப்ரல் 3) அதிமுக சார்பில் உண்ணாவிரதம் நடைபெற்றுவருகிறது. சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நடைபெறும் உண்ணாவிரதப் போராட்டத்தில் திடீரென முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் பங்கெடுத்துள்ளனர்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் ஏப்ரல் 2ஆம் தேதி உண்ணாவிரதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. பின்னர் உண்ணாவிரத தேதி ஏப்ரல் 3க்கு மாற்றப்பட்டது. உண்ணாவிரதத்தில் பங்கேற்கும் நிர்வாகிகளும் அறிவிக்கப்பட்டனர். இதில் முதல்வர், துணை முதல்வர் ஆகியோர் பெயர்கள் இடம்பெறவில்லை. இதற்குப் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர். தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் அய்யாக்கண்ணு, அதிமுக உண்ணாவிரதத்தில் முதல்வர், துணை முதல்வர் பங்கேற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். டிடிவி தினகரன் போன்றோர் விமர்சித்திருந்தனர்.

இதுபற்றித் தங்களிடம் பேசிய கட்சி நிர்வாகிகளிடம், ‘’முதல்வர், துணை முதல்வர் பொறுப்பில் இருந்துகொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் இருந்தால் அது நல்லா இருக்காது. அதனால்தான் எங்க பேரை அறிவிக்கலை’’ என்று பதில் சொல்லியிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி.

ஆனால் அதற்கு நிர்வாகிகளோ, ‘’எம்ஜிஆர் முதல்வராக இருந்தபோது அரிசி விஷயத்துக்காக மத்திய அரசை எதிர்த்து ஒருநாள் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார். காவிரிப் பிரச்னைக்காக நம்ம அம்மா உண்ணாவிரதம் இருந்தப்ப அவங்க முதல்வர் பதவியிலதான் இருந்தாங்க. அப்புறம் ஈழப் பிரச்னைக்கு கடற்கரையில உண்ணாவிரதம் இருந்தப்பகூட கருணாநிதி முதல்வர் பொறுப்புல இருந்தாரு. அதனால இந்தப் பதவியெல்லாம் ஒரு தடையில்ல. முதல்வரும் துணை முதல்வரும் வரலைன்னா அது நல்லா இருக்காது’’ என்று எடப்பாடியிடம் விளக்கியிருக்கிறார்கள். ஆனால் அப்போதும் அவர்கள் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ள முடிவெடுக்கவில்லை.

இந்நிலையில் நேற்று இரவு முதல்வருக்கு நெருக்கமான கேரளப் பிரமுகர் வட்டாரத்தில் இருந்து ஒரு தகவல் வந்துள்ளது. அதில், ‘உண்ணாவிரதம் இருக்கறதுல ஒரு பிரச்சினையும் இல்லை. நாங்க பேசிட்டோம். நீங்க கலந்துக்கங்க’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதன் பிறகுதான் உண்ணாவிரதத்தில் கலந்துகொள்ள முதல்வர் முடிவெடுத்து, இதை துணை முதல்வரிடமும் சொல்லியிருக்கிறார். அதன் பிறகுதான் இருவரும் இன்று (ஏப்ரல் 3) காலை சென்னையிலேயே உண்ணாவிரதம் இருப்பது என்று சேப்பாக்கத்துக்குக் கிளம்பி வந்திருக்கிறார்கள்.

இவர்களோடு அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர் ஜெயக்குமார், அமைப்புச் செயலாளர் எஸ்.கோகுலஇந்திரா, மாவட்டச் செயலாளர்கள் நா.பாலகங்கா, தி.நகர் பி.சத்தியா, விருகை வி.என்.ரவி, உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். கோவையில் நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உள்ளிட்டோர் கறுப்புச் சட்டை அணிந்து கலந்துகொண்டனர். மாலை 5 மணிவரை இந்தப் போராட்டம் நடைபெறவுள்ளது.

**முதல்வர், துணை முதல்வர் மீது வழக்கு**

இதற்கிடையே, முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஆகியோர் போராட்டத்தில் கலந்துகொண்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை பெரம்பூரைச் சேர்ந்த தேவராஜ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், பதவிப் பிரமாணம் மற்றும் ரகசியக் காப்புப் பிரமாணத்தை மீறி முதல்வர் உண்ணாவிரதம் இருப்பதாகவும், எனவே அரசைக் கலைக்க உத்தரவிடவேண்டும் என்றும் மனுதாரர் கூறியிருந்தார்.

எனினும் “முதல்வரும் துணை முதல்வரும் இந்தியக் குடிமக்கள்தான். உண்ணாவிரதம் இருப்பதற்கு முதல்வர் உள்பட அனைவருக்கும் உரிமை உள்ளது ” என்று நீதிமன்றம் தெரிவித்தது.

மேலும், முதல்வர், துணை முதல்வர் உண்ணாவிரதத்திற்கு எதிராக உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்கை எடுத்து கொள்ள மறுப்பு தெரிவித்த தலைமை நீதிபதி மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும் என கூறினார்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *