நிர்பயா குற்றவாளி மனு தள்ளுபடி: தூக்கு உறுதி செய்யப்படுமா?

public

நாட்டையே உலுக்கிய நிர்பயா பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கின் குற்றவாளிகளில் ஒருவரான பவன் குப்தா தாக்கல் செய்த மறுசீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று (மார்ச் 2) தள்ளுபடி செய்தது.

2012 டிசம்பர் 16 அன்று இரவு ஓடும் பேருந்தில் மருத்துவ மாணவி நிர்பயா வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் பவன் குப்தா, அக்‌ஷய் சிங், முகேஷ் குமார் சிங், வினய் குமார் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு, இறுதியாக நாளை காலை 6 மணிக்குத் தண்டனையை நிறைவேற்ற டெல்லி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதனிடையே குற்றவாளி பவன் குப்தா தனக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க கேட்டு உச்ச நீதிமன்றத்தில் பிப்ரவரி 29ஆம் தேதி மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு இன்று நீதிபதிகள் ரமணா, பானுமதி, அசோக் பூஷன், நாரிமன், அருண் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவைத் தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்.

ஏற்கனவே மூன்று குற்றவாளிகளின் சட்ட வாய்ப்புகள் முடிந்துவிட்ட நிலையில் பவன் குப்தா உச்ச நீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவும் இன்று தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், பவன் குப்தா சார்பில் குடியரசுத் தலைவரிடம் கருணை மனுத் தாக்கல் செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதே சமயத்தில், குற்றவாளிகளைத் தனித் தனியாகத் தூக்கிலிட அனுமதிக்க வேண்டும் என்று கோரி மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மார்ச் 5ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. இதன்மூலம் டெத் வாரண்ட் பிறப்பித்த படி, நாளை காலை 6 மணிக்கு 4 பேருக்கும் தண்டனை நிறைவேற்றப்படுமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

இதனிடையே திகார் சிறையில் குற்றவாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட தண்டனையை நிறைவேற்றுவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. குற்றவாளிகள் 4 பேரும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். முன்னதாக நிர்பயாவின் தாய் ஆஷா தேவி, மார்ச் 3ஆம் தேதி தண்டனை நிறைவேற்றப்படும் என நம்பிக்கையில்லை என்று தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

**கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *