மீனவப் பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்: வடமாநில இளைஞர்கள் கைது!

public

ராமேஸ்வரத்தில் மீனவப் பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, எரித்துக் கொலை செய்யப்பட்டிருப்பது அம்மாவட்ட மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரம் அருகே வடகாடு மீனவர் கிராமம் உள்ளது. இங்கு மீன்பிடித் தொழில், வலை பின்னுதல், கடற்பாசி சேகரித்தல் ஆகியவை பிரதான தொழிலாகும்.

வழக்கம்போல் நேற்று காலை இந்த பகுதியைச் சேர்ந்த 45 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் கடல் பாசி எடுக்கச் சென்றார். மாலை வரை வீடு திரும்பாததால் அச்சம் அடைந்த அவரது கணவர் பல இடத்திலும் தேடினார். தனது மனைவி குறித்து எந்த தகவலும் கிடைக்காததால் ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

காவல் நிலைய ஆய்வாளர் சதீஷ் உள்ளிட்ட போலீசார் வடகாடு பகுதிக்குச் சென்று மாயமான பெண்ணை தேடினர். அப்போது வடகாடு காட்டுப்பகுதியில் அரை நிர்வாணமாக அந்தப் பெண் எரிக்கப்பட்ட நிலையில் இறந்து கிடந்தது தெரியவந்தது.

வடகாடு பகுதியில் தனியாருக்குச் சொந்தமான இறால் பண்ணை ஒன்று உள்ளது. அங்கு ஒரிசாவை சேர்ந்த ஆறு இளைஞர்கள் பணியாற்றி வருகின்றனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்திய போது முன்னுக்குப்பின் முரணாகப் பதில் அளித்துள்ளனர். இதனால் போலீஸாருடன் சென்ற ஊர் மக்கள் ஆத்திரமடைந்து அந்த இறால் பண்ணையை அடித்து நொறுக்கி தீ வைத்து எரித்ததுடன் இந்த இளைஞர்களையும் சரமாரியாகத் தாக்கினர். பின்னர் ஆறு பேரையும் ஒரு அறையில் வைத்துப் பூட்டினர்.

இதனால் அங்கு மேலும் பரபரப்பு அதிகரித்ததால் விசாரணைக்குச் சென்ற போலீசார் கொடுத்த தகவலின் பேரில் ராமேஸ்வரம் நகர் காவல் நிலையத்திலிருந்து கூடுதல் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். உயிரிழந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர்.

ஆனால் பெண்ணின் இந்த நிலைக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் உடலை எடுத்துச்செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று அப்பகுதி மீனவ மக்கள் காவல்துறையினரை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இரண்டு நாட்களுக்கு முன்புதான் சம்பந்தப்பட்ட அந்தப் பெண்ணை இறால் பண்ணையில் வேலை செய்த வடமாநில இளைஞர்கள் கேலி செய்ததாகவும் அவர்கள் கூறினர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இந்த சம்பவம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து அப்பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அதுபோன்று பொது மக்களால் அடைத்து வைக்கப்பட்டிருந்த 6 பேரையும் மீட்டு, சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைத்தனர். முதற்கட்ட விசாரணையில் அந்த பெண்ணை வடமாநில இளைஞர்கள் கஞ்சா போதையில் வழிமறித்துக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்து, சேலையால் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு அடையாளம் தெரியக்கூடாது என்பதற்காக முகத்தில் பெட்ரோலை ஊற்றி எரித்தது தெரியவந்துள்ளது.

அதுபோன்று முதற்கட்ட மருத்துவ பரிசோதனையில் அந்தப் பெண்ணை மூன்று பேர் பாலியல் வன்கொடுமை செய்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது. எனினும் ஆறு வடமாநில இளைஞர்களில் அந்த மூன்று பேர் யார் என்பது குறித்துத் தெரியவில்லை. அந்த ஆறு இளைஞர்களும் தற்போது சிகிச்சை பெற்று வரும் நிலையில் சிகிச்சைக்குப் பின் அவர்களிடம் விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு வருகின்றனர்.

இந்த சூழலில் அப்பெண்ணின் இறப்புக்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி இன்று வடகாடு கிராம மக்கள் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் அருகே தனுஷ்கோடி நெடுஞ்சாலை பகுதியில் சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு, கடைகள் அடைக்கப்பட்டதால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *