r30 குறவர் சமூகத்தினர் மீது 549 பொய் வழக்குகள்

Published On:

| By admin

குறவர் சமூக மக்கள் மீது பதியப்பட்ட பொய் வழக்குகள் குறித்து தன்னார்வ நிறுவனம் நடத்திய ஆய்வில் தஞ்சை, கடலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களை சேர்ந்த 30 நபர்கள் மீது 549 வழக்குகள் பதிவாகியுள்ளது தெரியவந்துள்ளது.

மதுரையை சேர்ந்த போப் (People’s organization for people education) என்ற தன்னார்வ நிறுவனம் குறவர் இன மக்கள் மீது நடத்தப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து தஞ்சாவூர், கள்ளக்குறிச்சி, கடலூர், புதுச்சேரி பகுதிகளில் கடந்த 2021 நவம்பர் மாதம் ஒரு ஆய்வை மேற்கொண்டது.

அந்த ஆய்வின் முடிவுகள் அடங்கிய அறிக்கையையும், ஆவணப்படத்தையும் வெளியிடும் நிகழ்வு தமிழ்நாடு ஹோட்டலில் நடைபெற்றது. இந்திய மாதர் தேசிய சம்மேளன பொது செயலாளர் ஆணிராசா ஆய்வறிக்கை நூலை வெளியிட்டார். குறவர் சமூகத்தைச் சேர்ந்த 30 நபர்களை தேர்வு செய்து நடத்தப்பட்ட ஆய்வில், அவர்கள் மீது மொத்தம் 549 வழக்குகள் பதியப்பட்டுள்ளதாகவும், அதில் 262 வழக்குகளில் விடுதலையும், 38 வழக்குகளில் தண்டனையும் பெறப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ள வழக்குகள் நீதிமன்ற விசாரணையில் உள்ளது தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வு குறித்து இந்திய மாதர் தேசிய சம்மேளனம் பொது செயலாளர் ஆணி ராசா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “குறவர் சமூகம் நெடுங்காலமாக காவல்துறையின் கொடுமைகளுக்கு உள்ளாகி வருகிறது. குறிப்பாக, 18 முதல் 35 வயது வரை உள்ள நபர்கள் மீது தான் காவல்துறை அதிகமான பொய் வழக்கு போட்டு சித்திரவதை செய்கிறார்கள். ஜனநாயக உரிமைகளை அதிகம் பேசும் தமிழகத்தில் இந்த கொடுமைகள் நடைபெற்று வருவது வேதனை அளிக்கிறது. இந்த 30 பேர் பதியப்பட்ட வழக்குகள் அனைத்தும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ், அரசு தனி கவனம் எடுத்து உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்று கூறினார்.

.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share