ஊரடங்கில் விமானச் சேவை: அனுபவத்தைப் பகிரும் விமானி!

public

எப்போதும் பரபரப்பாக இருக்கும் வான் போக்குவரத்து தற்போது ஊரடங்கின் காரணமாக, சர்வதேச மற்றும் உள்நாட்டு விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டு அமைதி நிலை நிலவுகிறது. முன்னதாக பலநாடுகளுக்கும் பறந்துகொண்டிருந்த பைலட்டுகளுக்குத் தற்போது தங்கள் குடும்பங்களுடன் நேரத்தைச் செலவழிக்க வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

எனினும் சென்னையைச் சேர்ந்த பைலட் ஒருவர், அத்தியாவசிய தேவைகளுக்காக இயக்கப்படும் விமானங்களை இயக்க முன்வந்து, தன் கடமையைத் தொடர்ந்து செய்து வருகிறார். சென்னையைச் சேர்ந்த, திறன் பெற்ற பயணிகள் விமான கேப்டனான, அருண் பிரகாஷ்தான், தற்போது முக்கிய அத்தியாவசிய தேவைக்கான பொருட்களைக் கொண்டு செல்லும் விமானங்களை இயக்கி வருகிறார்.

பயணிகளுக்குப் பதில் விமான இருக்கைகளில் சரக்குகளைச் சுமந்து செல்லும் போயிங் 737 விமானத்தை அவர் இயக்குகிறார். அத்தியாவசிய மற்றும் மருத்துவத்துக்குத் தேவையான பொருட்களை விமானத்தில் சுமந்து கொண்டு வாரத்திற்கு 4 முறை பயணம் மேற்கொள்கிறார்.

சென்னையைப் பூர்விகமாகக் கொண்ட அருண் பிரகாஷ், ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அத்தியாவசிய பொருட்களைப் பயணிகள் விமானம் மூலம் கொண்டு செல்ல முடிவு செய்த போது, அந்த விமானங்களை இயக்க முதலில் முன்வந்த தன்னார்வலர் ஆவார். ஊரடங்கின் போது, விமானச் சேவைகள் ரத்து செய்த போதும், விமானத்தை இயக்க வேண்டும் என்ற ஆர்வம் அருண் பிரகாஷை வீட்டில் இருக்க விடவில்லை.

இதுகுறித்து அவர், “கடந்த 10 நாட்களில் 15 முறை விமானங்களை இயக்கியுள்ளேன். ஊரடங்கின் போது மக்களுக்கு உதவுவதற்காக நானும் ஒரு பகுதியாக இருக்கிறேன் என்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன். கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் என்னால் முடிந்த அளவு பங்களிப்பைக் கொடுக்க முடிகிறது என்பதுதான் என்னைத் தொடர்ந்து செயல்பட வைக்கிறது.

ஒருநாள் பயணத்தில் மூன்று விமான நிலையங்களில் நிறுத்தி பொருட்களை இறக்க வேண்டியுள்ளது. இதனால் சில நாட்களில் சென்னைக்குக் கூட திரும்ப முடியவில்லை. இதனால் குடும்பத்திலிருந்து விலகி, வெளியூர்களில் உள்ள ஹோட்டல்களில் தங்கிக் கொள்கிறேன். ஊரடங்கின் போது குறைந்த அளவிலான விமானங்கள் மட்டுமே இயக்கப்படுவதால், என்னுடைய விமானத்தை இயக்க சிரமமின்றி எளிமையாக இருக்கிறது.

அத்தியாவசிய பொருட்களுக்காக மட்டுமே விமானச் சேவைகள் செயல்படும் நிலையில், ஆயிரக்கணக்கான விமானங்களைப் பார்த்த வானில் தற்போது 5 முதல் 10 விமானங்களை மட்டுமே பார்க்க முடிகிறது.

இதனால் கால தாமதம், விமான நிலையங்களில் நெருக்கடி, தரையிறங்கும் போது ஏற்படும் சிக்கல், சிக்னலுக்காக காத்திருப்பு, என எந்த சிரமமும் இல்லாமல் இருக்கிறது. எனினும் என்னுடன் பணியாற்றிய விமான ஊழியர்கள், பைலட்டுளை இந்நேரம் நினைவு கூர்கிறேன்.

அதுபோன்று, 35,000 அடி உயரத்தில் மருந்து பொருட்களுடன் பறந்துகொண்டிருக்கும் போது, விமானத்தில் வழக்கமான நடைமுறைகளாக இருக்கும் வானொலி அறிவிப்புகள், பயணிகளுக்கான அறிவிப்புகள், குறிப்பாகத் தமிழில் ஒலிக்கச் செய்யும் அறிவிப்பு என அழகிய தருணங்களை எல்லாம் இந்நேரத்தில் இழக்கிறேன்” என்று தனது பயண அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டுள்ளார்.

மார்ச் 24 முதல் ஏப்ரல் 24 க்கு இடையில், ஸ்பைஸ்ஜெட் சென்னையிலிருந்து 28 முறை சர்வதேச சரக்கு விமானங்களை இயக்கியுள்ளதுடன், 100 டன் சரக்குகளை பாங்காக், சிங்கப்பூர், குவைத் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளுக்குக் கொண்டு சென்றுள்ளது.

அதே காலகட்டத்தில், ஸ்பைஸ் ஜெட் சென்னையிலிருந்து 110 முறை உள்நாட்டுச் சரக்கு விமானங்களை இயக்கி, சூரத், திருவனந்தபுரம், விசாகப்பட்டினம், கொல்கத்தா, கொச்சி, மும்பை, ஹைதராபாத், பெங்களூரு, கோழிக்கோடு, டெல்லி மற்றும் அகமதாபாத் ஆகிய பகுதிகளுக்கு 630 டன் சரக்குகளைக் கொண்டு சேர்த்துள்ளது.

**-கவிபிரியா**�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *