இருளர் இன மக்களுக்கு மாவட்ட ஆட்சியர் தந்த சர்ப்ரைஸ்!

public

தஞ்சாவூர் மாவட்டம் ஒன்னாம்சேத்தி கிராமத்தைச் சேர்ந்த இருளர் இன மக்களின் நீண்ட காலக் கோரிக்கையை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தீர்த்துவைத்துள்ளார். சாதிச் சான்றிதழ் வேண்டும் என்னும் அவர்களுடைய கோரிக்கையை நிறைவேற்றிய அவர், இருளர் இனக் குழந்தைகள் பத்துப் பேருக்கு அவர்களது வீட்டிற்கே நேரில் சென்று சான்றிதழ்களைக் கொடுத்திருக்கிறார்.

ஒன்னாம் சேத்தி கிராமத்தில் இருளர் இனத்தைச் சேர்ந்த 23 குடும்பங்கள் வசித்துவருகின்றன. இவர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பு அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் பகுதியிலிருந்து வந்து குடியேறியவர்கள். தங்க்ளுக்கான சாதிச் சான்றிதழ் வேண்டும் என்று வருவாய்த் துறை அதிகாரிகளிடம் இவர்கள் பல முறை கோரிக்கை விடுத்தும் சாதிச் சான்றிதழ்கள் இவர்களுக்கு வழங்கப்படவில்லை.

அண்மையில் இந்த மக்கள் தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் இது குறித்து மனு கொடுத்தனர். சாதிச் சான்றிதழ் இல்லாததால் அரசின் சலுகைகளைத் தங்கள் குழந்தைகள் பெற முடியவில்லை என அவர்கள் தெரிவித்திருந்தனர்.

அவர்களது மனுவைப் பரிசீலித்த ஆட்சியர், ஒரு வார காலத்திற்குள் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வருவாய்த் துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

இந்த மக்களின் நெருங்கிய உறவினர்கள் ஜெயங்கொண்டம் பகுதியில் தற்போது வசித்துவருகிறார்கள். அவர்களுக்கு அந்த மாவட்ட வருவாய்த் துறை அதிகாரிகள் இருளர் இன மக்களுக்கான ஜாதிச் சான்றிதழ்கள் வழங்கியிருப்பது விசாரணையில் தெரியவந்தது.

அதனை அடிப்படையாகக் கொண்டு, ஒன்னாம்சேத்தி கிராமத்தில் வசிக்கும் இருளர் மக்களுக்கு இருளர் இன மக்களுக்கான சாதிச் சான்றிதழ் வழங்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக அந்தக் கிராமத்தைச் சேர்ந்த பள்ளி செல்லும் குழந்தைகள் 10 பேருக்கு நேற்று சாதிச் சான்றிதழ் வழங்கப்பட்டது.

இதில் விசேஷம் என்னவென்றால், அந்தச் சான்றிதழ்களை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அந்தக் குழந்தைகளின் வீட்டுக்கே நேரில் சென்று வழங்கினார்.

இந்தக் கிராமத்தில் வசிக்கும் 23 இருளர் குடும்பங்களும் நெடுஞ்சாலைத் துறைக்குச் சொந்தமான புறம்போக்கு இடத்தில் வசித்துவருகிறார்கள். விரைவில் இவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்குவதற்கான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுவருவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். பட்டா வழங்கிய பின்னர் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் அவர் கூறினார்.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *