ஜெயக்குமார் தனசிங் கடிதம் எப்போது கிடைத்தது? : நெல்லை எஸ்.பி. பேட்டி!

Published On:

| By Kavi

ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்று நெல்லை எஸ்.பி. சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.

நெல்லை கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜெயக்குமார் தனசிங் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

ஏற்கனவே அவர் மாவட்ட எஸ்.பி.க்கு ஒரு கடிதமும் எழுதியிருக்கிறார். அதில் ரூபி மனோகரன், தங்கபாலு உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மீது குற்றச்சாட்டை வைத்துள்ளார். தொடர்ந்து ,இரண்டு நாட்களாக காணாமல் போயிருந்த ஜெயக்குமார் இன்று கரைசுத்துபுதூர் உவரியில் உள்ள அவருக்கு சொந்தமான தோட்டத்தில் பாதி எரிந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது.

அவரது உடலை மீட்டு போலீசார் நெல்லை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். அங்கு பிரேத பரிசோதனை மேற்கொள்ள்ளப்பட்ட நிலையில் நாளை இறுதி அஞ்சலி நடைபெறும் என்று தகவல்கள் வருகின்றன.

இதனிடையே  ஜெயக்குமார் உடல் மீட்கப்பட்ட இடத்தில் நெல்லை எஸ்.பி.சிலம்பரசன் ஆய்வு மேற்கொண்டார்.

அதன்பின் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,  “ஜெயக்குமார்  காணாமல் போனது தொடர்பாக அவரது மகன் நேற்று இரவு காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார். அப்போது ஜெயக்குமார் எழுதிய கடிதத்தையும் கொடுத்தார். இந்த புகார் மீது உடனடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவரை தேட நேற்று இரவு 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடுதல் பணிகள் நடைபெற்றன.

அதன் தொடர்ச்சியாக இன்று ஜெயக்குமார் உடல் அவரது தோட்டத்திலே எரிந்த நிலையில் கிடந்தது தெரியவந்தது. இதுதொடர்பாக புலன் விசாரணை நடைபெற்று வருகிறது” என்றார்.

அந்த கடிதத்தை அவர் உங்களை சந்தித்து கொடுத்தாரா என்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, “இல்லை… அவருடைய ஆபீஸில் தான் கடிதம் இருந்திருக்கிறது. நேற்று மாலைதான் அவரது உதவியாளர்கள் அதை எடுத்திருக்கின்றனர். அதன்பிறகு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

ஜெயக்குமார் தனசிங் மரணம் தொடர்பாக 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது” என்று கூறினார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

விஜய்யின் பாலிடிக்ஸ் புடிச்சிருக்கு: பாராட்டிய சிவராஜ் குமார்

கிரிக்கெட் வாழ்க்கையில் தோனி தான் எனது தந்தை: மதிஷா பதிரனா உருக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share