Bசதத்தால் கிடைத்த வெற்றி!

public

ஐபிஎல் தொடரின் 11ஆவது சீசனில் இரண்டாவது சதத்தை சென்னை வீரர் ஷேன் வாட்சன் அடித்து அணியை வெற்றி பெறச் செய்துள்ளார்.

ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற ராஜஸ்தான் ராயல்ஸ் கேப்டன் ரஹானே பந்து வீச்சைத் தேர்வு செய்தார். சென்னை அணியில் சுரேஷ் ரெய்னா, கரண் சர்மா ஆகியோரும், ராஜஸ்தான் அணியில் கிளாசன், ஸ்டூவர்ட் பின்னி ஆகியோரும் சேர்க்கப்பட்டனர்.

ஷேன் வாட்சன், அம்பதி ராயுடு ஆகியோர் தொடக்க வீரர்களாகக் களம் இறங்கினார்கள். வாட்சன் ஆரம்பம் முதலே அதிரடி காட்டத் தொடங்கினார். முதல் ஓவரிலேயே அவர் கொடுத்த கேட்ச்சை ராஜஸ்தான் அணி பிடிக்கத் தவறியது; அது அந்த அணி செய்த எவ்வளவு பெரிய தவறு என்பது பின்னால் தெரிந்தது.

​​

கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொண்ட வாட்சன் அதிரடியாக விளையாடி 51 பந்துகளில் சதமடித்தார். ராயுடு 12 ரன்களில் ஆட்டமிழந்தாலும், அடுத்து களமிறங்கிய ரெய்னா 29 பந்துகளில் 46 ரன்கள் குவித்தார். இதன் பின்னர் களமிறங்கிய தோனி 5, பில்லிங்ஸ் 3 என அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். பிராவோ அதிரடியாக விளையாட, சென்னை அணி 20 ஓவர்களில் 204 ரன்கள் குவித்தது. 106 ரன்கள் எடுத்து வாட்சன் கடைசி ஓவரின் 5ஆவது பந்தில் ஆட்டமிழந்தார்.

ராஜஸ்தான் தரப்பில் ஸ்ரேயாஸ் கோபால் மட்டும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 205 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் ராஜஸ்தான் அணி களமிறங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அஜிங்கியா ரஹானே, ஹெயின்ரிச் கிளாசென் ஆகியோர் களமிறங்கினர். கிளாசன் 7 ரன்னிலும், அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சஞ்சு சாம்சன் 2 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மற்றொரு தொடக்க ஆட்டக்காரரான ரஹானே 16 ரன்னில் வெளியேறினார். ராஜஸ்தான் அணி 32 ரன்களுக்கு 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது.

அதன்பின் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோர் ஜோடி சேர்ந்து அணியைச் சரிவிலிருந்து மீட்கப் போராடினர். பட்லர் 22 ரன்னிலும், அவரைத் தொடர்ந்து வந்த ராகுல் திரிபாதி 5 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். ஒரு முனையில் சிறப்பாக விளையாடிவந்த ஸ்டோக்ஸ் 45 ரன்னில் வெளியேறினார். அப்போது ராஜஸ்தான் அணி 113 ரன்களுக்கு 6 விக்கெட்டை இழந்து தடுமாறியது. இறுதியில் ராஜஸ்தான் அணி 140 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

சென்னை அணியில் தீபக் சஹார், ஷர்துல் தாகூர், பிராவோ, கரண் சர்மா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன்மூலம் சென்னை அணி 64 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

சென்னை அணியின் வாட்சன் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இந்த வெற்றியின்மூலம் சென்னை அணி புள்ளிப் பட்டியலில் முதல் இடத்திற்கு முன்னேறியது.

இன்று (ஏப்ரல் 21) நடைபெறும் போட்டிகளில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் – டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதுகின்றன.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *