இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள 2024 ஐபிஎல் தொடரில், தங்களது கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியும் மோதிக்கொண்டன.
2 அணிகளுமே பிளே-ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், இந்த தொடரை வெற்றியுடன் நிறைவு செய்யும் முனைப்பில் இப்போட்டியில் களமிறங்கின.
மே 17 அன்று வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற மும்பை அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த லக்னோ அணி, நிகோலஸ் பூரன் (75 ரன்கள்) மற்றும் கே.எல்.ராகுல் (55 ரன்கள்) ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்களில் 214 ரன்களை சேர்த்தது.
215 ரன்கள் என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய மும்பை அணிக்கு, ரோகித் சர்மா (68 ரன்கள்) மற்றும் நமன் திர் (62 ரன்கள்) ஆகியோர் அதிரடியாக விளையாடினாலும், அந்த அணி 20 ஓவர்களில் 196 ரன்கள் மட்டுமே சேர்த்தது.
இதன்மூலம், 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்து, புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் தனது 2024 ஐபிஎல் பயணத்தை நிறைவு செய்தது.
இந்நிலையில், இப்போட்டியில் மெதுவாக பந்துவீசியதாக மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு, இப்போட்டியில் விளையாடிய அந்த அணியின் மற்ற வீரர்களுக்கும் பிசிசிஐ அபராதம் விதித்துள்ளது.
முன்னதாக, ஏப்ரல் 18 அன்று பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி மெதுவாக பந்துவீசியதாக, ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பின், ஏப்ரல் 30 அன்று நடைபெற்ற லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் மெதுவாக பந்துவீசியதாக, பாண்டியாவுக்கு மீண்டும் ரூ.24 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
தற்போது, மீண்டும் அதே லக்னோ அணிக்கு எதிராக, இந்த தொடரில் 3வது முறையாக இந்த தவறை மும்பை இந்தியன்ஸ் அணி மேற்கொண்டுள்ளதால், ஹர்திக் பாண்டியாவுக்கு ரூ.30 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இப்போட்டியில் இம்பேக்ட் பிளேயர் உட்பட மும்பை அணிக்காக விளையாடிய அனைத்து வீரர்களுக்கும் ரூ.12 லட்சம் அல்லது போட்டி கட்டணத்தில் இருந்து 50% அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, ஐபிஎல் தொடரில் ஒரு போட்டியில் விளையாட ஹர்திக் பாண்டியாவுக்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
நடிப்பு 2024 ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணி தனது அனைத்து போட்டிகளையும் விளையாடி விட்ட நிலையில், இந்த தடை காரணமாக, ஹர்திக் பாண்டியா 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டியிலேயே விளையாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
– மகிழ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
இலவச பேருந்தால் மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை குறைகிறதா? மோடிக்கு ஸ்டாலின் பதில்!
விமர்சனம்: இங்க நான் தான் கிங்கு!
share market: இன்று சனிக்கிழமையும் இயங்குவது ஏன்? என்ன பங்குகள் வாங்கலாம்?