கர்நாடகத்தில் பி.யூ.சி. பொதுத்தேர்வு: ஹிஜாப் அணிந்து வர தடை

public

கர்நாடகத்தில் பி.யூ.கல்லூரி 2ஆம் ஆண்டு பொதுத்தேர்வு இன்று தொடங்குகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 1,076 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் 6 லட்சத்து 84 ஆயிரத்து 255 மாணவ – மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். இதில் 3 லட்சத்து 46 ஆயிரத்து 936 பேர் மாணவர்களும், 3 லட்சத்து 37 ஆயிரத்து 319 மாணவிகளும் அடங்குவர். தேர்வு மையங்களை சுற்றிலும் 200 மீட்டர் சுற்றளவுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தேர்வு எழுதும்போது மாணவர்கள் அந்தந்த கல்லூரி வளர்ச்சி குழுக்களால் நிர்ணயிக்கப்பட்ட சீருடையை மட்டுமே அணிந்து வர வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப் அணிந்து தேர்வு எழுத தடை விதிக்கப்பட்டுள்ளது. மீண்டும் தேர்வு எழுதுபவர்கள் மற்றும் தனித்தேர்வர்களுக்கு சீருடை விதிமுறைகள் பொருந்தாது என்று அரசு கூறியுள்ளது. தேர்வில் முறைகேடுகளை தடுக்க பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. சில பதற்றமான தேர்வு மையங்களில் அதிக போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தேர்வு நடைபெறும் நாட்களில் மாணவர்கள் தங்களின் நுழைவு சீட்டை காண்பித்து அரசு பஸ்களில் இலவசமாக பயணிக்கலாம். கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. தேர்வு தினமும் காலை 10.15 மணிக்கு தொடங்கி 1.30 மணி வரை நடைபெறும்.

தேர்வு மையங்களில் ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள் செல்போன் எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. முறைகேடுகளை தடுக்க 3,074 கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்களை சுற்றிலும் உள்ள ஜெராக்ஸ் கடைகளை மூட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. கேள்வித்தாள் கசியாமல் இருக்க அனைத்து மாவட்ட கருவூலங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளன. அங்கு 24 மணி நேரமும் செயல்படக்கூடிய கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

.

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *