ஜெயக்குமார் தன்சிங் மரண விவகாரத்தில் ரூபி மனோகரன், தங்கபாலு உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் நெல்லை கிழக்கு மாவட்ட தலைவர் ஜெயக்குமார் தன்சிங் கடந்த மூன்று நாட்களாக காணவில்லை. இந்நிலையில் அவரது உடல், கரைசுத்துபுதூரில் உள்ள அவரது தோட்டத்தில் எரிந்த நிலையில் இன்று (மே 4) மீட்கப்பட்டுள்ளது.
இதனிடையே அவர், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் அதற்கு இவர்கள் தான் காரணம் என்றும் பட்டியலிட்டு நெல்லை மாவட்ட எஸ்.பி.க்கு ஜெயக்குமார் கடிதம் எழுதியிருந்தார்.
இது தொடர்பாக முதன் முதலில் இன்று (மே 4) காலை மின்னம்பலத்தில், ‘காணாமல் போன காங்கிரஸ் தலைவர்… எஸ்.பி.க்கு அனுப்பிய மரண சாசனம்! நெல்லையில் என்ன நடக்கிறது?’ என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டிருந்தோம்.
இந்நிலையில் ஜெயக்குமார் தன்சிங் எஸ்.பி.க்கு அனுப்பிய கடிதத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ள மாநில பாஜக தலைவர் அண்ணாமலை, “காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த காங்கிரஸ் கட்சியின், நெல்லை கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் சடலமாக மீட்கப்பட்டுள்ளது மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது.
கடந்த ஏப்ரல் 30 அன்றே, மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக ஜெயக்குமார் புகார் அளித்திருப்பதாகத் தெரிகிறது.
குறிப்பாக, நாங்குநேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரன், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் தங்கபாலு உள்ளிட்டவர்கள் பெயர்களை, அந்தப் புகார்க் கடிதத்தில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும், காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுத்ததாகத் தெரியவில்லை.
காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவரின் புகாருக்கே, திமுக ஆட்சியில் இதுதான் நிலைமை என்றால், சாமானிய பொதுமக்கள் எதிர்கொள்ளும் சட்ட ஒழுங்கு பாதுகாப்பு குறித்த கேள்வி பலமாக எழுகிறது.
உடனடியாக, மறைந்த காங்கிரஸ் திருநெல்வேலி கிழக்கு மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் புகாரில் குறிப்பிட்டுள்ள அனைவரிடமும் விசாரணை நடத்தி, உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
பிரியா
”அவரு இசைஞானி தான்… ஆனா பாடல் எங்களுக்கு தான் சொந்தம்” : கே.ராஜன் பளீச்!
காங்கிரஸ் மாவட்ட தலைவர் சடலமாக மீட்பு: திக் திக் நெல்லை