புயலில் சேதமடைந்த தனுஷ்கோடிக்கு பேருந்து சேவை!

public

புயலால் பெரும் சேதம் அடைந்த தனுஷ்கோடிக்கு சாலை அமைத்ததும் அரை நூற்றாண்டுக்குப் பிறகு நேற்று ஜூலை 28ம் தேதி முதல் பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.

அரை நூற்றாண்டுக்கு முன்பான தனுஷ்கோடி துறைமுகம், ரயில்நிலையம், தேவாலயம், மாரியம்மன் கோயில், பாஸ்போர்ட் அலுவலகம், சுற்றுலாப் பயணிகள் என்று பரபரப்பாக இயங்கிகொண்டிருந்தது. தமிழக அரசு 1961-ம் ஆண்டு வெளியிட்ட ஒருங்கிணைந்த ராமநாதபுரம் மாவட்ட விவரச் சுவடியில் தனுஷ்கோடியில் 3,197 மக்கள் வசித்ததாகவும், இங்கிருந்து பருத்தித் துணிகள், பித்தளை, அலுமினியம், கருவாடு, முட்டை, காய்கறிகள் ஏற்றுமதி செய்யப்பட்டதாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படியான தனுஷ்கோடி கடந்த 1964ம் ஆண்டு வீசிய புயலில் உருத்தெரியாமல் சிதிலமடைந்தது. இந்த புயலில் ஆயிரக்கணக்கான மக்களும், ரயிலில் வந்த பயணிகளும் பலியானார்கள். ஒரு புயலில் எல்லாமே சூனியமானது.

தற்போது கடலை மட்டுமே நம்பி தனுஷ்கோடியைச் சுற்றி ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவக் குடும்பங்கள் வசிக்கின்றன. தனுஷ்கோடியை புயல் தாக்கி 50 ஆண்டுகள் கடந்தாலும், அங்கே மருத்துவம், மின்சாரம், போக்குவரத்து, சாலை, குடிநீர் என்று எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் இருந்தன. ராமேசுவரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு முகுந்தராயர் சத்திரம் வரை மட்டுமே சாலை வசதி உள்ளது. அதன் பிறகு, மூன்றாம் சத்திரத்தில் இருந்து தனுஷ்கோடிக்கு கடல் மணலில் 5 கி.மீ. நடந்துதான் செல்ல வேண்டும். உடல்நிலை சரியில்லை என்றால் அவசரமாக மருத்துமனைக்கு செல்ல வேண்டுமானால்கூட அங்கே போக்குவரத்து வசதி இல்லை. மருத்துவமனைக்கு போக வேண்டிய அவசரம் ஏற்பட்டால்கூட 18 கி.மீ. தொலைவில் உள்ள ராமேசுவரம் மருத்துவமனைக்கு படகுகளில்தான் போக வேண்டும். ஆனாலும், தனுஷ்கோடி எனும் எழில்மிகு கடற்கரையைக் காண சுற்றுலாப் பயணிகளும், பக்தர்களும் தனுஷ்கோடிக்கு கடற்கரை மணலில் வாடகை வேன்களில் அபாயகரமான பயணத்தை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில்தான், தேசிய நெடுஞ்சாலைத் துறை மூலம் ராமேசுவரம் முகுந்தராயர் சத்திரத்திலிருந்து தனுஷ்கோடிக்கும் அதைத் தொடர்ந்து அரிச்சல்முனை வரையிலும் சாலை அமைக்கப்பட்டது. மீண்டும், தனுஷ்கோடியை புதுப்பிக்கும் நோக்கத்தில் புயலில் இடிந்து சேதமடைந்த தேவாலயம், கோயில், மருத்துவமனை, பள்ளிக்கூடம், ரயில்வே கேபின் உள்ளிட்ட கட்டிடங்களை அதன் பழமை மாறாமல் பராமரித்து பாதுகாக்கும் பணியை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம், தொல்லியல் துறை, சுற்றுலாத்துறை இணைந்து மேற்கொண்டுவருகின்றன.

இந்நிலையில் நேற்று முன் தினம் ஜூலை 27ம் தேதி பிரதமர் மோடி ராமேசுவரம் முகுந்தராயர் சத்திரம் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை ரூ.65 கோடியே 68 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலையை திறந்து வைத்தார். புதிய சாலை அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து,நேற்று ஜூலை 28ம் தேதி முதல் ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடற்கரையிலிருந்து முகுந்தராயர் சத்திரம் வழியாக தனுஷ்கோடி வரை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்து சேவை தொடங்கி வைக்கப்பட்டன. இந்த பேருந்துகள் அதிகாலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை இயக்கப்படும். இந்த பேருந்துகளில் ராமேசுவரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு செல்ல ரூ.15 மட்டுமே கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதற்கு, முன்பு சுற்றுலாப் பயணிகள் தனியார் வேன்களில் ஆபத்தான முறையில் தனுஷ்கோடிக்கு பயணம் செய்ய வேண்டுமானால் ஒரு நபருக்கு ரூ.100 வரை வசூலிக்கப்பட்டது. தற்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் பேருந்துகளை இயக்குவதால் தனுஷ்கோடிக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகள் பெரு மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

புயலில் சிக்கி சேதமடைந்த தனுஷ்கோடிக்கு, எப்படியோ முதல் பேருந்து சேவை 52 ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது அரை நூற்றாண்டுக்குப் பிறகு தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு சுற்றுலாப்பயணிகள், தனுஷ்கோடி மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *