தேர்தல் முடிவை விவசாயம் தீர்மானிக்குமா? – யோகேந்திர யாதவ்

public

இந்தியாவின் உயர்மட்ட அரசியல் தளத்தில் விவசாயிகளின் போராட்டம் / இயக்கம் மையம் கொண்டுவிட்டதா? விவசாயிகளின் பிரச்சினைகளை மையப்படுத்தி அரசியல் கட்சிகள் போட்டியிடும் முதல் தேர்தலாக வரப்போகும் 2019ஆம் ஆண்டின் பொதுத் தேர்தல் உருவெடுக்க முடியுமா?

சென்ற வாரம் நாடாளுமன்றத் தெருவில், விவசாயிகள் விடுதலைப் பேரணியில் (Kisan Mukti March) கலந்துகொண்டபோது இந்தக் கேள்விகளை எனக்கு நானே கேட்டுக்கொண்டேன். அனைத்து இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு (AIKSCC) எனப்படும் 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் குழுக்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் நடந்த இந்தப் பேரணியில் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பங்கேற்றனர். இந்த முறை, விவசாயிகளின் பேரணியை போக்குவரத்து நெருக்கடியாகவோ, சட்ட – ஒழுங்குப் பிரச்சினையாகவோ ஊடகங்கள் சித்திரிக்கவில்லை என்பது ஆறுதலான செய்தி.

எதிர்க்கட்சிகளின் முக்கியப் புள்ளிகளும் ஆளுமைகளும் இந்தப் போராட்டத்துக்கு வருகை தந்து ஆதரவு அளித்தது, என்னை இந்தக் கேள்விகளைக் கேட்கத் தூண்டியது. ஒரு சில மாதங்களுக்கு முன்புகூட இதுபோன்ற கேள்விகளை நான் கேட்டிருக்க வாய்ப்பில்லை.

சரியாக முப்பதாண்டுகளுக்கு முன்பு 1988-89இல், சௌத்ரி மகேந்திர சிங் திகைத்தின் தலைமையில் மேற்கு உத்தரப் பிரதேசத்திலிருந்து ஒரு லட்சத்துக்கும் மேலான விவசாயிகள் டெல்லியில் வந்து இறங்கியபோதுதான் கடைசியாக தேசிய அரசியல் தளத்தில் விவசாயிகளின் போராட்டக் குரல் ஒலித்தது. அவரது பாரதிய விவசாயிகள் சங்கம் (Bharatiya Kisan Union) ராஜ்பத்தில் உள்ள போட் கிளப்பை முற்றுகையிட்டதோடு, அதிகார வர்க்கத்தையும் சுற்றி வளைத்தது. ஆனால், இது நடந்து முடிந்த சில மாதங்களிலேயே போஃபோர்ஸ் முறைகேடு (Bofors scam) வெடித்ததால், அதுவே 1989 தேர்தலில் முக்கிய விவாதப் பொருளானது.

சென்ற சனிக்கிழமை நடந்த இந்தப் பேரணி, முப்பதாண்டுகளுக்கு முன்பு நடந்த போராட்டத்தை விடப் பெரியது அல்ல என்றபோதும், நாட்டில் அனைத்துத் தரப்பினரின் கவனத்தையும் அது தன்பக்கம் திருப்பியது குறிப்பிடத்தக்கது. தேசிய அளவிலான அரசியல் தளத்தில் இடம்பெறுவதற்கான அனைத்துக் கூறுகளையும் கொண்ட பேரணியாக அது அமைந்ததே அந்தக் கவனத்தைப்பெற முக்கியக் காரணம். பெரும் நிலச்சுவான்தாரர்கள், சிறு, குறு விவசாயிகள், நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்பவர்கள், விவசாயத்தில் கூலி வேலை செய்பவர்கள், பழங்குடியின மற்றும் பெண் விவசாயிகள் என இதுவரை எவரும் கண்டிராத அனைத்து வர்க்க விவசாயக் கூட்டணி இந்தியாவின் தலைநகரில் அணி திரண்டது இதுவே முதன்முறை.

வெவ்வேறு அரசியல் – கருத்தியல் கொள்கைகளைக் கொண்ட 200க்கும் மேற்பட்ட விவசாயிகள் குழுக்களுக்கும் சங்கங்களுக்கும் இந்தப் பேரணியில் பிரதிநிதித்துவம் கிடைத்தது. நிலமுள்ள பெரும் விவசாயிகளின் பிரதிநிதிகளாக மகேந்திர சிங் திகைத்தின் பாரதிய விவசாயிகள் சங்கம், சரத் ஜோஷியின் மகாராஷ்டிரா விவசாயிகள் சங்கம், எம்.டி.நஞ்சுண்ட சுவாமியின் கர்நாடக மாநில விவசாயிகள் சங்கம் பச்சைக் கொடிகள் பிடித்துக்கொண்டு அங்கு வந்திருந்தன. இவற்றோடு சேர்ந்து, சிறு, குறு மற்றும் நிலமற்ற விவசாயிகளின் பிரதிநிதிகளாக AIKS, AIKMS போன்ற இடதுசாரி இயக்கங்களுக்குப் பாத்தியப்பட்ட விவசாயிகளின் சங்கங்கள் சிவப்புக் கொடிகளோடு தங்களது வருகையைப் பதிவு செய்தன.

சுற்றுச்சூழலுக்கு இணக்கமான விவசாயம், வளங்குன்றா விவசாயம் ஆகியவற்றை ஆதரிப்பவர்கள் வெள்ளை அல்லது நீல நிறக் கொடிகளோடு வந்திருந்தார்கள். மஞ்சள் நிறக் கொடியோடு வந்த ஸ்வராஜ் அபியான் மற்றும் பல புதிய இயக்கங்கள் தங்களது கொடிகளோடு வந்து ஒரு வானவில்லையே உருவாக்கி விட்டனர். அந்த வானவில், ‘ஒற்றுமையே வலிமை’ என்று விவசாயிகள் கற்றுக்கொண்ட முக்கியமான பாடத்தின் சின்னமாக அமைந்தது.

இந்த முறை விவசாயிகள் தங்களது பிரச்சினைகளையும் ஆதங்கங்களையும் மட்டுமே கொட்டித் தீர்க்க அணி திரளவில்லை; ஒரு தெளிவான தீர்வை அவர்களே முன்வைத்தனர். நியாயமான, லாபகரமான விலையும், கடன் சுமையிலிருந்து நிரந்தரமான, முழுமையான விடுதலையுமே அவர்கள் முன்வைத்த தலையாய கோரிக்கைகள். முதன்முறையாக அவர்களே இரண்டு சட்ட வரைவுகளைத் தயார் செய்து மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் அந்த வரைவுகளை அரசியல் கட்சிகளின் உதவியோடு தனிநபர் மசோதாவாகச் சமர்ப்பித்தனர். பொருளாதாரக் கொள்கை சார்ந்த விஷயங்களில் விவசாயிகள் தங்களது நுண்ணறிவை வெளிப்படுத்தியது பிரமிப்பைத் தந்தது. நாடாளுமன்ற ஜனநாயகம் எனும் ஆடுகளத்தில் விளையாடுவதற்கான விதிமுறைகளை அவர்கள் நன்கு புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டனர்.

மேலும், நகரங்களில் வாழ்பவர்களோடு நட்பை வளர்த்துக்கொள்ளத் தொடங்கியுள்ளனர் விவசாயிகள். இந்த ஆண்டு மார்ச் மாதம் மும்பையில் நடந்த மகாராஷ்டிரா விவசாயிகள் பேரணியின்போது 40,000க்கும் மேலான ஏழை விவசாயிகளுக்காக அந்நகரில் வாழும் மக்களின் மனக்கதவுகளும் பணக்கதவுகளும் திறந்தன. இந்த முறை, மூத்த பத்திரிகையாளர் பி.சாய்நாத் எடுத்த முயற்சியால், மனசாட்சியும் மனிதநேயமும் உள்ள நகர்வாழ் மக்கள் பலர், ‘விவசாயிகளுக்கான தேசம்’ (Nation for Farmers) எனும் பதாகைக்குக் கீழ் ஒருங்கிணைந்து விவசாயிகளின் போராட்டத்துக்கும் கோரிக்கைகளுக்கும் தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

இந்த ஆதரவு, விவசாயிகளின் பேரணி பற்றிய ஆர்வத்தையும் செய்தியையும் ஃபேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்கள் வழியே பரப்ப உதவியது. ஊரக இந்தியாவையும் நகர்ப்புற இந்தியாவையும் இரு துருவங்களாகச் சித்திரித்து அரசியல்வாதிகளும் ஊடகங்களும் புனைந்த கதையாடல்கள் எல்லாம் இனி செல்லுபடி ஆகாது; தங்களது போராட்டத்தால், நகர்வாழ் மக்களுக்கு ஏற்பட்ட சிரமத்துக்குத் துண்டுச் சீட்டுகள் விநியோகித்து விவசாயிகள் மன்னிப்பு கேட்டுக்கொண்டனர்.

இறுதியாக, ‘நீங்கள் சொன்ன கதைகளை நாங்கள் கேட்டு ஏமாந்தது போதும். இனி நாங்கள் சொல்வதை நீங்கள் கேளுங்கள்’ என்னும் தொனியில் விவசாயிகள் தாங்கள் சொல்ல வந்ததை அரசியல்வாதிகளுக்குத் தெரிவித்துவிட்டுச் சென்றிருக்கின்றனர். எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் விவசாயிகளோடு கைகோத்து நிற்பதை, ஆளும் பாஜகவுக்கு எதிராக மற்ற கட்சிகள் ஒருங்கிணைக்கும் பெரும் அரசியல் கூட்டணியில் விவசாயிகளும் சேர்ந்துவிட்டார்கள் என்று நினைக்க வேண்டாம்.

விவசாயிகளுக்கு எதிரான கொள்கைகளையும் நடவடிக்கைகளையும் மேற்கொண்ட நரேந்திர மோடி அரசின் மீது அவர்களுக்குக் கோபமும் அதிருப்தியும் இருப்பது உண்மைதான். ஆனால், இந்தப் பேரணியின்போது தங்களோடு கைகோத்து நின்ற காங்கிரஸ் உட்பட அனைத்து அரசியல் கட்சிகளும் இத்தனை ஆண்டுகளாக விவசாயத்துக்குப் பாதகம் விளைவிக்கும் பொருளாதாரக் கொள்கைகளையே நடைமுறைப்படுத்தினர் என்பதையும் விவசாயிகள் மறக்கவில்லை. கடந்த நான்கு ஆண்டுகளாக இந்த அரசியல் கட்சிகள் எங்கு இருந்தார்கள் என்கிற கேள்வியை அவர்கள் எழுப்பினர்.

அரசியல் சந்தர்ப்பவாதமும், தேர்தல் கட்டாயங்களுமே அரசியல் கட்சிகளைப் போராடும் விவசாயிகளை நோக்கி வரவழைத்தது என்பதையும் அவர்கள் நன்கு அறிவார்கள். தாங்கள் தயார் செய்த இரண்டு சட்ட வரைவுகளையும் தனிநபர் மசோதாவாக நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்; அந்த மசோதாக்கள் சட்டங்கள் ஆகாத பட்சத்தில், தங்களது தேர்தல் வாக்குறுதி அறிக்கையில் அதனை நிறைவேற்றுவோம் என்று அரசியல் கட்சிகள் உறுதியளிக்க வேண்டும் எனும் நிபந்தனையோடுதான் இந்தப் பேரணிக்கு ஆதரவளிக்க அரசியல் கட்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.

விவசாயிகளின் இயக்கம் தேசிய அளவில் அது பெற வேண்டிய முக்கியத்துவத்தைப் பெற்றுவிட்டது என்று இந்த நிகழ்ச்சிகளைக் கொண்டு நாம் அறுதியிட்டுக் கூறிவிட முடியுமா? இந்த ஒருமுறையேனும் வேளாண் நெருக்கடி தவிர்க்கமுடியாத விவாதப் பொருளாக 2019 பொதுத் தேர்தலில் இடம்பெறுமா? வேளாண் மற்றும் ஊரகப் பொருளாதாரம் சந்தித்துவரும் நெருக்கடிகளுக்கு விரைவில் ஸ்தூலமான தீர்வு கிடைக்குமா?

ஆம். இவையெல்லாம் நடக்கலாம். நடக்காமலும் போகலாம்.

இப்போதைக்கு இந்தக் கேள்விகளுக்கு இவ்வாறுதான் பதில் கூற முடியும். ஏனென்றால், நாட்டில் விவசாயிகள் மட்டுமே வாக்காளர்கள் அல்லர்; அவர்களுக்கு மட்டுமே பிரச்சினைகள் உள்ளது எனும் வாதமும் சரியானதாக இருக்காது. ஆனால், ‘நாங்களும் இந்நாட்டு மக்களே; தவறாமல் வாக்களிப்பவர்களே. அதனால் தீவிரமடைந்து வரும் எங்களது நெருக்கடிகளுக்குத் தீர்வு வேண்டும்’ என்ற செய்தியை ஆளும்கட்சியினர், எதிர்க்கட்சியினர், பொருளாதாரக் கொள்கைகளை வடிவமைக்கும் அறிவுஜீவிகள், ஊடகங்கள், பொதுமக்கள் என அனைவரின் மனதிலும் பதியவைத்து விட்டார்கள் என்றே சொல்ல வேண்டும்.

இந்தப் பேரணி ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த அரிய வாய்ப்பை, இதற்கு முன்பு போராட்டம் நடத்தியவர்கள்போல் வீணடிக்காமல், போராட்டத்தை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வதே இந்தப் பேரணியை ஒருங்கிணைத்த தலைமையின் நோக்கமாக இருக்க வேண்டும். அவ்வாறு செய்தால், வேளாண் கொள்கையைத் தீர்மானிப்பதில் விவசாயிகளின் குரல் தவிர்க்கமுடியாத ஒன்றாக எழுவதை உறுதி செய்யும் சாத்தியக்கூறுகள் அதிகம்.

இது சாத்தியமானால், 2019ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தல், முதன்முறையாக விவசாயிகள் பிரச்சினைகளை முன்னிறுத்தி அரசியல் கட்சிகள் போட்டியிடும் தேர்தலாக இருக்கும்.

விவசாயிகளின் பிரச்சினைகள் முக்கியமான விவாதப் பொருளானால், அரசியல் கட்சிகளின் தேர்தல் வாக்குறுதி அறிக்கைகளில் வேளாண் துறைக்குப் பல சலுகைகள் அளிப்பது போன்ற தோற்றம் உருவாகும். ஆனால், பொருளாதாரக் கொள்கையே வேளாண் துறைக்குச் சாதகமான ஒன்றாக முற்றிலும் மாறிவிடும் என்னும் முதிர்ச்சியற்ற எதிர்பார்ப்புகளை நாம் தவிர்க்க வேண்டும். இந்தப் போராட்டம் இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியிருக்கிறது.

விவசாயிகளுக்கு விரோதமான அரசுக்கு எதிராக மட்டும் விவசாயிகள் போராடவில்லை; வரலாற்றை மாற்றியமைக்க எதிர்நீச்சல் போடத் தொடங்கி விட்டார்கள். இந்த விவசாயிகளின் இயக்கம் கற்றுக்கொண்ட பாடங்கள் ஏராளம். அது இன்னும் பல பாடங்களைக் கற்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும்.

**(கட்டுரையாளர்: யோகேந்திர யாதவ்)**

**நன்றி: [தி பிரின்ட்](https://theprint.in/opinion/why-2019-could-be-first-lok-sabha-election-to-be-fought-on-farmers-issues/158862/)**

**தமிழில்: நா. ரகுநாத்**

**நேற்றைய கட்டுரை: [ரிசர்வ் வங்கியின் சுதந்திரமும், தாராளவாதப் பொருளாதாரமும்!](https://www.minnambalam.com/k/2018/12/26/5)**�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *