~தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 16: ஆங் சான் சுகி

public

மியான்மரில் நடந்த ரோஹிங்கியா முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடந்த தாக்குதல் சம்பவம் குறித்து அந்த நாட்டின் தலைவர் சுகி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார். உலகையே திரும்பிவைத்திருக்கும் இந்த சம்பவத்துக்கு முரணாக அமைந்த இவருடைய பேசக்சுக்குப் பல விழிகள் ஆச்சர்யத்தில் விரிந்துள்ளது என்றுதான் சொல்ல வேண்டும். உலக செய்திகளிலும், இன்டர்நெட் போன்ற ஊடகங்களிலும் ஹேஷ்டாக் வைத்து ட்ரெண்ட் ஆகிக்கொண்டிருக்கும் இவரை பற்றி இந்த வாரம் விரிவாக தெரிந்துக்கொள்வோம்.

**ஆரம்ப கால வாழ்க்கை**

ஆங் சான் சுகி மியான்மரின் யங்கூன் என்ற இடத்தில் ஜூன் மாதம் 1945ஆம் ஆண்டில் பிறந்தார். இவரின் தந்தை ஆங் சான் பிரிட்டன் ஆட்சிக்காலத்தில் இருந்த பர்மா நாட்டில் பெரிய போராளியாக இருந்தார். பர்மாவின் சுதந்திரத்துக்காக இவர் தலைமையில் நடந்த போராட்டம் மற்றும் எழுச்சிகளின் முடிவாக அந்நாட்டுக்குச் சுதந்திரம் கிடைத்தது. இருப்பினும், அதே ஆண்டில் அவர் கொல்லப்பட்டார். சுகி இரண்டு வயது குழந்தையாக இருந்தபோது இந்தச் சம்பவங்கள் அடுத்தடுத்து நடந்ததால், தாயின் வளர்ப்பில் மட்டுமே தனது வாழ்நாளைக் கழித்தார். தந்தை ஆங் சானின் திடீர் கொலைக்குப் பின், சுகியின் தாயார் கின்கி பர்மா அரசாங்கத்தில் பிரதான இடத்தை அடைந்தார். தொடர்ந்து 1960ஆம் ஆண்டில் கின்கி பர்மாவின் தூதுவராக இந்தியாவுக்கு அனுப்பப்பட்டார். தன்னுடைய பதினைந்து வயது வரை பர்மாவில் இருந்த சுகி, தாயாருடன் இந்தியா வந்தார். டெல்லியில் பள்ளிப்படிப்பையும், அரசியல் துறையில் ஆரம்பப் பட்டப்படிப்பையும் முடித்தார்.

இந்தியாவிலிருந்து சுகி அடுத்தகட்டமாக இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து அரசியல் மற்றும் பொருளாதாரத் துறையில் இளநிலை பட்டப்படிப்பை 1964ஆம் ஆண்டில் முடித்தார். தொடர்ந்து முதுநிலை படிப்பை முடித்த சுகி அமெரிக்காவின் நியூயார்க் மாநகரத்துக்கு குடிபெயர்ந்தார். ஐக்கிய நாடுகளின் சபையில் பொருளாதாரம் மற்றும் வணிக துறையில் உதவியாளராக மூன்று ஆண்டுகள் பணியாற்றிய சுகி திருமணம், குழந்தைகள் என்று தனது சொந்த வாழ்க்கையையும் சேர்த்து கச்சிதமாக கவனித்துக்கொண்டார். மீண்டும் லண்டன் பல்கலைக்கழகத்தில் ஆய்வுகள், சிம்லா பல்கலைக்கழகத்தில் ஆய்வு என்று மேற்படிப்பு நோக்கி தனது பாதையை அமைத்துக்கொண்டிருந்தார் சுகி.

**மீண்டும் பர்மா**

இதற்கிடையே 1988ஆம் ஆண்டில் தாயாருக்கு உடல்நலம் குறைந்துவிடவே அவரை பார்த்துக்கொள்ள சுகி பல வருடங்களுக்கு பிறகு மீண்டும் பர்மா திரும்பினார். அதே சமயத்தில் அப்போதைய ராணுவ ஆட்சியின் தலைவரான ஜெனரல் நீ வின் பதவியிலிருந்து விலக்கப்பட்டார். பல ஆண்டுகள் ராணுவ ஆட்சியின் பிடியில் இருந்த பர்மா நாட்டு மக்கள் 1988ஆம் ஆண்டில் தொடர் போராட்டங்கள் மற்றும் கூட்டங்களை நடத்தி ராணுவ ஆட்சியைக் கலைக்க முற்பட்டனர். சுகி இந்தக் கிளர்ச்சியை கண்டபின், தன்னையும் இந்தப் போராட்டங்களில் ஈடுபடுத்திக்கொண்டார். 1988ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் பல்லாயிரக்கணக்கான மக்களிடையே குடியரசு ஆட்சி வேண்டும் என்ற நோக்கில் உரையாற்றினார். பொது மக்களால் சுகியின் பேச்சுக்கு அதிகளவில் வரவேற்பு கிடைத்தாலும், செப்டம்பர் மாதத்தில் மீண்டும் ராணுவ ஆட்சியே அமைக்கப்பட்டது. சுகியின் எழுச்சி மற்றும் உத்வேகத்தினால் தேசிய ஜனநாயகக் கட்சி (National League for Democracy, NLD) என்ற கட்சியும் தொடங்கப்பட்டது. கட்சியின் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்ட சுகியின் தலைமையில் பல அமைதி மற்றும் அறவழி போராட்டங்களும் நடைபெற்றுக்கொண்டே இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களிடையே வலுக்கும் ஆதரவு மற்றும் அரசுக்கு அளித்த அச்சுறுத்தல் என்ற அமைதி போராட்டத்தால் யூனியன் ஆர்மி என்ற பர்மாவின் ராணுவ அரசாங்கம் 1989ஆம் ஆண்டில் சுகியை வீட்டுச் சிறையில் அடைத்தது. நாட்டை விட்டு வெளியேறினால் மட்டுமே விடுவிக்க வாய்ப்புகள் உண்டு என்ற குறிப்பிட்ட அரசுக்கு எதிராக தனது இல்லத்துக்குள் இருந்தபடியே மக்களுக்கு தேவையான ஊக்கத்தை அளித்துக்கொண்டே வந்தார் சுகி. இவரின் இந்தத் தொடர் அமைதி போராட்டம் மற்றும் அரசாங்கத்தின் ஒடுக்குமுறைகள் உலகம் முழுவதிலும் பரவி, சுகி அவர்களுக்குப் பல்வேறு தரப்பிலிருந்து ஆதரவுகளைப் பெருகியது. தலைநகரான ரங்கூனிலிருந்து வெளியேறக் கூடாது என்ற நிபந்தனையின்கீழ் வைக்கப்பட்ட அரசு, சுகியை வெளியிடங்களில் நடக்கும் தனது கட்சி கூட்டங்கள் மற்றும் சந்திப்புகளுக்குச் செல்ல அனுமதியளிக்காமல் அவரை முற்றிலுமாக முடக்கியது. இருப்பினும், சுகியின் ஆதரவு அலைகளினால், 1990ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் NLD பெரும்பான்மை அடைந்து வெற்றி பெற்றது. குடியரசு ஆட்சிக்காகக் குரல் கொடுக்கும் சுகியின் கட்சியைத் தடுக்கும் விதத்தில் ராணுவ அரசு அந்தத் தேர்தலில் முடிவுகளை ரத்து செய்து, தொடர்ந்து அவரது சிறைக்காலத்தை நீட்டித்துக் கொண்டேயிருந்தது.

**உலக மக்கள் கவனம் பெற்ற சிறைவாசம்**

1990ஆம் ஆண்டு வரை ஆதரவுகள் இருந்தாலும், மற்ற நாட்டு அரசுகளின் ஆலோசனைகளும் பரிந்துரைகளையும் ஏற்றுக்கொள்ளாது பர்மாவின் ராணுவ அரசு செயல்பட்டது. பல நாட்டு தலைவர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் தூதுரவர்கள் தொடர்ந்து சுகியைச் சந்தித்து வந்தனர். ஐக்கிய நாடு சபையின் குறுக்கீட்டின் மூலம் தொடர் பேச்சுவார்த்தைகள் ராணுவ அரசுடன் நடத்தப்பட்டது. ஆனால், எந்தவொரு தீர்வுமின்றி பல்வேறு ஆண்டுகள் வரை இந்தப் பேச்சுவார்த்தை தொடர்ந்தது குறிப்பிடத்தக்கது. விருந்தினர்கள் மற்றும் பத்திரிகையாளர்கள் என்று சாதாரண போக்கின்றி, தனியாக வீட்டினுள் இருந்து தன் நாட்டு மக்களுக்காகப் போராடியமையால், அனைவரிடமும் மிகுந்த மரியாதை பெற்றிருந்தார். ஒருமுறை பத்திரிகையாளர் சுகி அவர்களைச் சந்தித்து சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டார். ஆனால், வெளியே வந்ததும் ராணுவத்தினரால் அந்தப் புகைப்பட ரோல்கள் அனைத்தும் அப்போதே அழிக்கப்பட்டது. அவ்வப்போது அரசால் சிறை தண்டனை நிறுத்திவைக்கப்பட்டாலும், ரங்கூன் நகரில் சுகி சென்றபோது மற்ற கட்சிகள் செய்த சில தாக்குதல் சம்பவங்களைக் காரணமாக காட்டி, சிறைவாசம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டது. இவ்வாறாக தொடர்ந்து 12 ஆண்டுகள் சுகியின் வீட்டுச் சிறை தொடர்ந்தது.

2000ஆம் ஆண்டில் மீண்டும் வீட்டுச் சிறையில் வைத்த அரசு, தொடர்ந்து பல்வேறு புதிய நிபந்தனைகளைச் சட்டமைப்பில் சேர்த்தது. 2009ஆம் ஆண்டில் நடக்கவிருக்கும் பொது தேர்தலில் சுகியின் NLD கட்சி போட்டியிடாமல் செய்யும்விதமாக அந்த புது நிபந்தனைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. கட்சியின் பொதுச்செயலாளர் பதவியிலிருந்து சுகியை விலக்கியது மட்டுமின்றி, கட்சியின் அங்கீகாரத்தையும் ரத்து செய்தது. 2009ஆம் ஆண்டில் வெளிவரும் சமயத்தில் மீண்டும் சிறைக்காலம் நீட்டிக்கப்பட்டது. இம்முறை, நிபந்தனைகளை மீறி வீட்டில் விருந்தினர் வந்த காரணம் என்று குறிப்பிடப்பட்டது. ஏரியின் ஓரமாக இருந்த சுகியின் வீட்டுக்குள் ஏரி வழியாக ஓர் அமெரிக்கர் உள்ளே நுழைந்தார். இந்தச் செயலைக் குற்றமாகக் கருதி, சுகிக்கு மேலும் 18 மாதங்கள் சிறைக்காலம் நீட்டிக்கப்பட்டது. பல ஆண்டு சிறை மற்றும் அமைதிப் போராட்டம் என்று அனைத்து அச்சுறுத்தல்களையும் பொறுத்த சுகி 2010ஆம் ஆண்டில் 15 ஆண்டு கால வீட்டுச் சிறைக்குப்பின் விடுவிக்கப்பட்டார்.

**ஆங் சான் சுகி – சில தகவல்கள்**

• இவரின் இந்த முழு பெயரானது மூன்று குடும்பத்தினர் பெயர்களிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளது. ஆங் சான் என்பது இவரது தந்தையின் பெயர், சு என்பது இவரது பாட்டியின் பெயர், கி என்பது இவரது அம்மாவின் பெயர்.

• இங்கிலாந்து சென்று பட்டப்படிப்பை படித்த காலத்தில் சுகி, மைக்கேல் ஆரிஸ் என்பவரைச் சந்தித்து திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு அலெக்ஸ்சாண்டர், கிம் என்று இரு மகன்கள். 1988ஆம் ஆண்டில் பர்மா சென்றபின் வீட்டு சிறையில் அடைக்கப்பட்டதால், பர்மாவுக்கு ஐந்து முறை மைக்கேல் வந்து சந்தித்தார். தனது கணவருக்கு புற்றுநோய் ஏற்பட்டபோது, விசா அளிக்காத பர்மா அரசு சுகி அவர்களை நாட்டைவிட்டு வெளியே செல்ல பரிந்துரைத்தது. தன்னுடைய போராட்டங்களுக்கு பலனில்லாமல் போய்விடும், மீண்டும் பர்மாவுக்குள் நுழைய முடியாது என்று அஞ்சி சுகி தனது கணவரைக்கூட பார்க்கச் செல்லவில்லை.

• வீட்டு சிறைவாசம் இருந்த சமயத்தில், சுகிக்கு உலகெங்கிலும் இருந்து ஆதரவுகள் மட்டுமின்றி பல்வேறு விருதுகளும் கிடைத்தன. 1991ஆம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு, அமெரிக்காவின் அதிபர் விருது போன்றவை இதில் அடங்கும். சுகியின் மகன் சென்று இந்த விருதை பெற்றுக்கொண்டார். 1991ஆம் ஆண்டில் தரப்பட்ட நோபல் பரிசுக்காக, கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து 2012ஆம் ஆண்டில் ஏற்புரை அளித்தது இங்குக் கூடுதல் தகவல்.

• சிறைவாசம் இருந்த காலத்தில் சுகி தனது பெரும்பாலான நேரத்தை புத்தகங்கள் படிப்பதிலும், தியானம் செய்வதிலும் அதிகம் செலவிட்டார். Freedom from Fear மற்றும் Letters from Burma போன்ற புத்தகங்களை இந்த சமயத்தில் இவர் எழுதியது குறிப்பிடத்தக்கது.

• விடுதலைக்குப் பின், தனது கட்சியான NLD-க்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கப்பட்டது. கட்சியின் தலைவராக பொறுப்பேற்றாலும், இங்கிலாந்து நபரை திருமணம் செய்துகொண்டதால், அதிபர் பொறுப்பேற்கமுடியாத நிலை சுகிக்கு ஏற்பட்டது. இருப்பினும் தலைவர் என்று பிரத்யேகமாக ஒரு பதவியை உருவாக்கி அதில் சுகியை மக்கள் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நல்ல படிப்பு, குடும்பம், வேலை என்று சாதாரண வாழ்க்கையை வாழ்ந்தாலும் தன் நாட்டுக்குத் தக்க சமயத்தில் நின்று போரிட வேண்டும் என்ற குணமே சுகி அவர்களுக்கு பல்வேறு இடங்களிலிருந்தும் தொடர் ஆதரவுகள் தரப்பட்டன. அகிம்சை, அமைதி என்ற ஒரே கொள்கையை பின்பற்றி ஒரு நாட்டையே சீர்திருத்தி சரியான பாதையில் கொண்டுவந்த பெருமை மட்டுமல்லாது சிறந்த உதாரணமாகவும் இந்த 21ஆம் நூற்றாண்டில் மட்டுமின்றி பல்வேறு தலைமுறையினருக்கும் தொடர்ந்து சுகி விளங்குவார் என்பதில் சிறிதும் ஐயமில்லை.

கட்டுரையாளர்: நித்யா ராமதாஸ்

இவர் குமுதம் சிநேகிதி மாதமிருமுறை இதழில் முழு நேர நிருபராகப் பணியாற்றியவர். புதிய தலைமுறை தொலைக்காட்சி மற்றும் தினகரன் நாளிதழில் பயிற்சி நிருபராக இருந்தவர். இவர், லைஃப் ஸ்டைல், ஃபேஷன், கலை மற்றும் மியூசிக் சார்ந்த கட்டுரைகளை எழுதிவதில் தேர்ந்தவர். அண்ணா பல்கலைக்கழகத்தில் மின்னணு ஊடகவியலில் முதுகலை பட்டம் பெற்றவர். இவர், தற்போது கணவருடன் லண்டனில் வசித்து வருகிறார்.

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 1](http://minnambalam.com/k/2017/05/23/1495477820)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 2](https://minnambalam.com/k/2017/06/01/1496255433)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 3](https://minnambalam.com/k/2017/06/08/1496860214)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 4](https://minnambalam.com/k/2017/06/15/1497465020)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 5](https://www.minnambalam.com/k/2017/06/22/1498069815)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 6](http://minnambalam.com/k/2017/06/29/1498674620)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 7](http://krypto.in/k/2017/07/13/1499884221)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 8](https://minnambalam.com/k/2017/07/20/1500489026)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 9](http://minnambalam.com/k/2017/07/27/1501093821)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 10](http://www.krypto.in/k/2017/08/03/1501698624)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 11](https://www.minnambalam.com/k/2017/08/10/1502303408)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 12](https://www.minnambalam.com/k/2017/08/17/1502908212)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 13](https://minnambalam.com/k/1503513024)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 14](http://minnambalam.com/k/1504809022)

[தெரிந்த பெயர் தெரியாத தகவல்கள் – 15](http://minnambalam.com/k/1505413823)�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *