டிஜிட்டல் திண்ணை-கருணாநிதி டிக் அடித்த காங்கிரஸ் தொகுதி லிஸ்ட்!

public

ஃபேஸ்புக் லொக்கேசன் தேனாம்பேட்டை என்று காட்டியது. லாக் இன் ஆகியிருந்த ஃபேஸ்புக் போட்ட ஸ்டேட்டஸ் திமுக-காங்கிரஸ் பற்றியதுதான். ‘‘கடந்த 5ம் தேதி, காமராஜர் அரங்கத்தில் காங்கிரஸ் கட்சியின் தொகுதிப் பங்கீட்டுக் குழுவில் உள்ள 8 பேரும் ஆலோசனை நடத்தினார்கள். முடிவில் 75 தொகுதிகள் முடிவு செய்யப்பட்டு, அந்த லிஸ்ட்டுடன் சத்தியமூர்த்தி பவனுக்குப் போயிருக்கிறார்கள். அங்கே இருந்த நிர்வாகிகளுடன் கலந்து பேசி, 61 தொகுதிகளாக அது முடிவுசெய்யப்பட்டது. முடிவுசெய்யப்பட்ட ஃபைனல் லிஸ்ட்டுடன் அறிவாலயத்துக்குப் போனார்கள். அங்கே சர்க்கரை போட்ட காபி, சர்க்கரை இல்லாத காபி, பக்கோடா கொடுக்கப்பட்டது. அதைச் சாப்பிட்டபடியும், குடித்தபடியும் ஆலோசனை நடந்திருக்கிறது. ‘ஒரு பாராளுமன்றத் தொகுதிக்கு ஒரு தொகுதி கொடுப்பதாகத்தான் பேசினோம். ஆனால், நீங்கள் ஒரே மாவட்டத்தில் எப்படி நான்கு இடங்களையெல்லாம் கேட்டிருக்கீங்க?’ என்று ஸ்டாலின் கேட்டிருக்கிறார். ’எங்க நிர்வாகிகள் எல்லோருடன் பேசி முடிவுசெய்த லிஸ்ட்டைத்தான் உங்ககிட்ட கொடுத்திருக்கோம்’ என்று இளங்கோவன் சொல்லியிருக்கிறார். ‘தமிழ்நாடு முழுக்க திமுக-வுக்கு செல்வாக்கு உள்ள தொகுதிகள் என்று நாங்கள் ஒரு சர்வே எடுத்தோம். அதில் உள்ள பல தொகுதிகளை நீங்க கேட்டிருக்கீங்க…’ என்று ஸ்டாலின் சொன்னதாகச் சொல்கிறார்கள். ‘அது எங்களுக்கும் செல்வாக்கு உள்ள தொகுதிகள் என்று நிர்வாகிகள் சொல்றாங்களே..’ என்று இளங்கோவன் சொன்னாராம். இப்படியாகத் தொடங்கிய பேச்சுவார்த்தையில், 30 தொகுதிகள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் முடிவாகியிருக்கிறது. திமுக-வுக்கு செல்வாக்குள்ள தொகுதிகளாக ஸ்டாலின் நினைத்த 11 தொகுதிகள் மட்டும் இழுபறியாக இருந்திருக்கிறது. ‘நாங்க பேசிட்டுச் சொல்றோம்!’ என ஸ்டாலின் சொன்னாராம். அந்த லிஸ்ட்டை ஸ்டாலின், கருணாநிதியிடம் கொடுத்திருக்கிறார். காங்கிரஸ் கேட்ட தொகுதிகள் சிலவற்றையும், அவர்கள் கேட்காத தொகுதிகள் சிலவற்றையும் கருணாநிதி டிக் அடித்தாராம். அந்த லிஸ்ட், மறுபடியும் இளங்கோவனுக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவர், 8 பேர் குழுவுடன் பேசிவிட்டு ஓகே சொல்லியிருக்கிறார். அதன்பிறகே, இன்று மாலை கருணாநிதியைச் சந்தித்து தொகுதிகளை முடிவு செய்தார் இளங்கோவன்’’ என்ற தகவல் போஸ்ட் ஆனது.

வாட்ஸ் அப், அதைப்படித்து லைக் போட்டுவிட்டு தேமுதிக தகவலுக்குப் போனது. ‘‘தேமுதிக தலைமை அலுவலகத்துக்கு கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து வந்தபடியே இருக்கிறார்கள். அவர்களிடம் மாநிலப் பொருளாளர் ஏ.ஆர்.இளங்கோவன், ‘எதுக்கும் கவலைப்படாதீங்க… கேப்டன் இருக்காரு!’ என்று பேசி சமாதானப்படுத்தி அனுப்புகிறாராம். அதுமட்டுமல்லாமல், சீட் கேட்டு பணம் கட்டியவர்களுக்கு போன் செய்யும் இளங்கோவன், ‘ உங்களுக்கு சீட் வேணுமா? நீங்க நிற்கிறீங்களா? என்னன்னு சொல்லுங்க’ என்று கேட்க ஆரம்பித்துள்ளார். அதற்கு, ‘வீட்டுல வேணாம்னு சொல்றாங்க. அடுத்த எலெக்‌ஷன்ல பார்த்துக்கலாம்’ என்று சிலரும், ‘என்னைவிட சீனியர் அவரு. அதனால அவருக்குக் கொடுத்துடுங்க…’ என்று சிலரும் சொல்கிறார்களாம். இன்று காலை, தேமுதிக அலுவலகத்தில் இருந்த முக்கிய நிர்வாகி ஒருவர், ‘கேப்டனுக்கு பேசத் தெரியலைன்னு சொல்லிட்டு இப்போ, வைகோ வாய்க்கு வந்ததை எல்லாம் உளறிட்டு இருக்காரு… அவருக்கு மட்டும் பேசத் தெரியுதா?’ என்று சொல்லவும், உடன் இருந்தவர்கள் சிரித்தார்களாம்’’ என்ற செய்திக்கு செண்ட் கொடுத்தது வாட்ஸ் அப்.

ஸ்மைலி போட்ட ஃபேஸ்புக், அடுத்த ஸ்டேட்டஸ் போட்டது. ‘‘அதிமுக-வில் அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களை ஜெயலலிதா சந்திக்கிறார் என சென்னைக்கு வரச் சொல்லியிருக்கிறார்கள். ஆனால், ஜெயலலிதா யாரையும் சந்திக்கவில்லை. வந்தவர்கள் போயஸ்கார்டனுக்கு வரிசையாகப் போயிருக்கிறார்கள். எல்லோரையும் பூங்குன்றன்தான் பார்த்திருக்கிறார். ‘நீங்க ஊருக்குப் போய் வேலைகளை ஆரம்பிங்க. எல்லோரையும் உற்சாகமாக வேலைபார்க்கச் சொல்லி அம்மா சொல்லச் சொன்னாங்க’ என்று சொல்லி அனுப்பிவிட்டாராம். வேட்பாளர்கள் ஒவ்வொருவருடனும் போட்டோ எடுத்துக்கொள்ளத்தான் முதலில் திட்டமிட்டிருந்தாராம் ஜெயலலிதா. ஆனால், நீண்டநேரம் நிற்பது சாத்தியமில்லை என்பதால், வேண்டாம் என சொல்லிவிட்டதாகச் சொல்கிறார்கள். பிரச்சாரத்துக்குப் போகுமிடங்களில் வரிசையாக நிற்கவைத்து பார்த்துக் கொள்ளலாம் என்பது திட்டமாம். வேட்பாளர் அறிவிக்கப்பட்டதில் இருந்து தொடர்ந்து மாற்றங்கள் நடந்தபடியே இருக்கின்றன. மாற்றம் இருக்கும் என்பதை நான் ஏற்கனவே சொல்லியிருந்தேன். விவேக் டீம் கொடுத்த லிஸ்ட், உளவுத்துறை கொடுத்த லிஸ்ட், மாவட்டச் செயலாளர்கள் லிஸ்ட் என, மூன்று லிஸ்ட் ஜெயலலிதா கையில் இருந்தது. ஆனால், விவேக் கொடுத்த லிஸ்ட்தான் ஃபைனல் ஆனது. அதில்தான் இப்போது ஏகத்துக்கும் சிக்கல். வேட்பாளர் அறிவிப்பு வந்ததும், அவர்களைப் பற்றிய புகார்கள் வரிசைகட்ட ஆரம்பித்தன. அந்த வேட்பாளர்களைப் பற்றியெல்லாம் உடனடியாக விசாரிக்கச் சொல்லி உளவுத்துறைக்குச் சொன்னார் ஜெயலலிதா. உளவுத்துறையின் ரிப்போர்ட் வரவர மாற்றங்கள் நடக்கின்றன. அதில் செம்மலை, ஓ.எஸ்.மணியன் என்று சில சீனியர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பதையும், அதனால் அந்தத் தொகுதிகளில் நிலவும் அதிருப்தியையும் உளவுத் துறை ரிப்போர்ட்டில் சொல்லப்பட்டிருக்கிறது. சிக்கல் வேட்பாளர்களை மாற்றியதுடன், சீனியர்களுக்கும் வாய்ப்புக் கொடுத்துவிட்டார் ஜெயலலிதா. திமுக வேட்பாளர் பட்டியல் வந்தபிறகு, இன்னும் சில மாற்றங்களும் அதிமுக வேட்பாளர் பட்டியலில் இருக்குமாம்’’ என்று போஸ்ட் செய்யப்பட்ட லொக்கேசன் போயஸ் கார்டன்.

ட்விட்டர் அடித்த ட்விட் இது. ‘‘திமுக-வின் தேர்தல் அறிக்கை வரும் 10ம் தேதி வெளியாகுமாம். அந்தத் தேர்தல் அறிக்கையை மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்க மூன்று நாட்கள் ஆகும். நான்காவது நாள் அதாவது, 14ம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்கிறார்கள்’’ என்று சொல்லிவிட்டு லாக் அவுட் ஆனது.�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *