டிஜிட்டல் திண்ணை: எடப்பாடி வலையில் மூவர் – அமமுக மீது அடுத்த அட்டாக்!

public

மொபைல் டேட்டா ஆன் செய்யப்பட்டதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. லொக்கேஷன் பெங்களூரு காட்டியது.

“அதிமுகவையும் அமமுகவையும் இணைப்பதற்கான பல அறிகுறிகள் தென்படத் தொடங்கியுள்ள நிலையில், ஒருவேளை இரு கட்சிகளும் இணைந்துவிட்டால் அப்போதும் தனக்குரிய முக்கியத்துவம் குறையக் கூடாது என முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், டிடிவி தினகரனும் உறுதியாக இருக்கிறார்கள். இதை அடிப்படையாக வைத்து இருவருமே சில காய் நகர்த்தல்களில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த ஒரு மாதமாக சசிகலாவுடன் பாஜக தரப்பு நடத்திய பேச்சு வார்த்தைகளைப் பற்றி மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் தொடர்ந்து பதிவு செய்து வந்திருக்கிறோம். இதன் முக்கியமான கட்டமாகக் கடந்த நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத் தேர்தலில் அமமுக போட்டியிடாவிட்டாலும் அதிமுகவுக்கு ரகசிய ஆதரவு அளிக்கச் சொல்லி சசிகலா உத்தரவிட்டதையும், தினகரன் அதை நிறைவேற்றியதையும் குறிப்பிட்டிருந்தோம்.

இந்த நிலையில் சசிகலா வெளியே வந்தால்கூட அவரால் தேர்தலில் நிற்க முடியாது. அதை வைத்து தினகரனுக்கு அதிகார மையம் மாறிவிடக் கூடாது என்பதில் எடப்பாடி தெளிவாக இருக்கிறார். வருகிற சட்டமன்ற பொதுத் தேர்தலில் அதிமுக வெற்றிபெற வேண்டுமென்றால் இரு தரப்பும் இணைய வேண்டும் என்பது எடப்பாடிக்கும் தெரிந்திருக்கிறது. அதேநேரம் பழையபடி அவர்களுக்குக் கீழே தான் இருப்பதை எடப்பாடி விரும்பவில்லை.

இதனால்தான் அமமுகவை இணைப்பதற்குள் அதன் முக்கியஸ்தர்களை அதிமுகவில் தன் மூலமாக இணைத்து – இணைப்புக்கு முன்பே தன் வலிமையைப் பெருக்கி அமமுகவின் வலிமையைக் குறைக்க திட்டமிட்டுச் செயல்பட்டு வருகிறார் எடப்பாடி.

அதில் முக்கியமான கட்டமாக அமமுகவின் மூன்று முக்கியஸ்தர்களை எடப்பாடி கிட்டத்தட்ட தன் வழிக்குக் கொண்டுவந்துவிட்டதாகச் சொல்கிறார்கள். அமமுகவுக்குப் பலமாக உள்ள மாநில அமைப்புச் செயலாளரான முன்னாள் உயர் கல்வித்துறை அமைச்சர் பழனியப்பன், திருச்சி வடக்கு அவைத் தலைவர் தர்மதுரை, அமமுக பொருளாளர் ரங்கசாமி மூவரும் முதல்வர் வீசிய வலையில் சிக்கிக்கொண்டதாகச் சொல்கிறார்கள் அதிமுகவினர்.

திருச்சி தர்மதுரைக்கும் வடக்கு மாவட்டச் செயலாளர் மனோகருக்கும் ஏழாம் பொருத்தமாக இருந்து வந்ததை அறிந்த முதல்வர் சரியான ஸ்கெட்ச் போட்டு தர்மத்தை தூக்கிவிட்டார். தீபாவளிக்கு முன்பு ரகசியமாகத் தன்னை சந்தித்த தர்மத்துக்குத் தீபாவளி வாழ்த்துகளைச் சொன்ன முதல்வர்,

அமமுகவில் உள்ள 50 கிளை செயலாளர்கள் மற்றும் முக்கியப் பொறுப்பாளர்களை அழைத்து வாருங்கள் என்று அசைன்மென்ட் கொடுத்து செலவுக்கு ஒருவரை பார்த்துக்கொள்ளச் சொல்லி கை காட்டியுள்ளார்.

அதேபோல அமமுக துணைப் பொதுச் செயலாளர் பழனியப்பனுக்கும் தினகரனுக்கும் சில மாதங்களாகவே சிற்சில உரசல்கள் வந்தபோதும் தன் வீட்டுத் திருமணத்தை தினகரனை வைத்தே பிரமாண்டமாக நடத்தினார். அந்தத் திருமணத்துக்கு அதிமுக பிரமுகர்களும் சென்று வாழ்த்தினார்கள். கே.பி.முனுசாமிக்கும் பழனியப்பனுக்கும் உள்ள பிரச்சினையில்தான் அவர் தினகரனிடம் போனார். அவரை அதிமுகவுக்குக் கொண்டுவர முதல்வரே பல்வேறு முயற்சிகள் எடுத்தார். இறுதியாக இப்போது முக்கியமான அஸ்திரம் ஒன்று முதல்வரிடம் சிக்கியிருக்கிறது.

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி தொகுதியில் சேலம் டு வாணியம்பாடி சாலையில் மஞ்சவாடி கனவாய் கிராமத்தில், பழனியப்பனுக்குச் சொந்தமான 12 ஏக்கர் நிலம் இருக்கிறது. இதில் சொகுசு கெஸ்ட் ஹவுஸ் கட்டிவைத்துள்ளார் பழனியப்பன். அந்த இடம் பல கோடி மதிப்புள்ளது என்கிறார்கள். அந்த கெஸ்ட் ஹவுஸ் வழியாக நான்கு வழி சாலை அமைக்கக்கூடிய கோப்பு முதல்வர் டேபிளில் உள்ளது. மூன்று மாதங்களாக அதில் கையெழுத்திடாமல் வைத்திருக்கிறார் முதல்வர். இப்போது அந்தக் கோப்புகளை வைத்துதான் பழனியப்பனை மிரட்டி வருகிறார்கள். பழனியப்பன் அதிமுகவுக்கு வந்துவிட்டால் நான்கு வழிச் சாலை வேறு ரூட்டில் போகும், பழனியப்பன் வரவில்லை என்றால் கெஸ்ட் ஹவுஸ் வழியாகத்தான் நான்கு வழிச் சாலை போகும் என்பதுதான் பழனியப்பனுக்கு அனுப்பப்பட்டுள்ள செய்தி. ஏற்கனவே பல கோடிகளை இழந்திருக்கும் பழனியப்பன் இதையாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற முனைப்பில் இருக்கிறார். அதனால் அவர் இறங்கிவந்துள்ளதாகச் சொல்கிறார்கள் அமமுகவினர்.

அமமுக பொருளாளராக இருந்து துணைப் பொதுச் செயலாளர் ஆகியுள்ள ரங்கசாமியையும், அதிமுக பிரமுகர்கள் சிலர் சந்தித்து ரங்கசாமி சொத்துகள் பட்டியலை எடுத்துக்காட்டி மிரட்டி அதிமுக பக்கம் சாய்வதற்கு ஏற்பாடுகள் செய்துவிட்டார்களாம்.

அமமுக – அதிமுக இணைப்புக்குப் பின்னரும் தன் கை ஓங்கியிருக்க வேண்டும் என்பதற்காக இப்படி பல வேலைகளை எடப்பாடி செய்யத் துணிந்துவிட்டார். இதையெல்லாம் கேள்விப்பட்ட சசிகலா, பழனிசாமியா இந்த வேலையைச் செய்கிறார் என்ற அப்செட்டில் இருக்கிறார். டிடிவி தினகரனோ, ’சின்னம்மா அமைதியாக இருக்க சொன்னாங்க. அதனால் நானும் அமைதியாக இருக்கிறேன். போவோர்களை நான் என்ன தடுக்கவா முடியும்?’ என்ற விரக்தியில் இருக்கிறார்” என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்துவிட்டு ஆஃப் லைனுக்குப் போனது வாட்ஸ் அப்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *