}சிறப்புப் பேட்டி: அமுல் இயக்குநர் ஆர்.எஸ்.சோதி!

public

இந்தியாவில் பால் பொருள்கள் தயாரிப்பு குறித்தும், அமுல் நிறுவனத்துக்கு எதிராக ஹிந்துஸ்தான் யூனிலிவர் தொடர்ந்த வழக்கு குறித்தும் அமுல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆர்.எஸ்.சோதி ‘தி மின்ட்’ இதழுக்கு வழங்கிய பேட்டி.

**ஹிந்துஸ்தான் யூனிலிவர் நிறுவனம் உங்களது விளம்பரத்துக்கு எதிராகக் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து அனைத்து வழக்குகளிலும் நீங்கள் வெற்றி பெற்றுள்ளீர்கள். உங்களுக்கிடையே நிலவும் இந்த விவகாரம் ஏன் தொடர்ந்து நீள்கிறது?**

பன்னாட்டு நிறுவனங்களிடையே நிலவும் ஈகோ பிரச்னையே இந்த வழக்குகளுக்கு முக்கிய காரணம். பொதுவாக அனைத்து பன்னாட்டு நிறுவனங்களும் தங்களிடம் மட்டுமே சிறந்த வழக்கறிஞர்கள் இருப்பதாகவும் எனவே அனைத்து விவகாரத்திலும் தங்களால் வெற்றி பெற்றுவிட முடியும் என்ற அகங்காரம் கொண்டுள்ளன. மேலும், எங்களைப் போன்ற நிறுவனங்கள் கிராமப்புறங்களில் இருந்து வந்தது போன்றும் எங்களுக்கு இந்தச் சட்டத்திட்டங்கள் குறித்த விழிப்பு உணர்வு இல்லை என்றும் அவர்கள் நினைத்துக் கொள்கின்றனர்.

எங்களது விளம்பரத்தில் உறைய வைக்கப்பட்ட இனிப்பு வகைகளைச் சுட்டிக்காட்ட வனஸ்பதி எண்ணெயைக் குறிப்பிட்டிருந்தோம். ஆனால், தங்கள் நிறுவனத்தின் ஐஸ்க்ரீமில் தாவர எண்ணெயைத்தான் பயன்படுத்தி உள்ளதால் இந்த விளம்பரத்தை நீக்க வேண்டும் என்று ஹிந்துஸ்தான் நிறுவனம் வலியுறுத்தியது. ஆனால், எங்கள் விளம்பரத்தில் நாங்கள் தெளிவாக, தாவர எண்ணெய் (Vegetable oil) என்றே குறிப்பிட்டிருந்தோம்.

**உங்களின் அடுத்த கட்ட திட்டம் என்ன?**

எங்களுடைய விளம்பரத்தை நீக்க வேண்டும் என்ற அவர்களின் கோரிக்கையை ஏற்க மும்பை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. மேலும், இந்த வழக்கு வரும் ஏப்ரல் 5ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவிருக்கிறது. எங்கள் விளம்பரங்கள் மூலம் நுகர்வோர் மத்தியில் விழிப்பு உணர்வு ஏற்படுத்துவதே எங்களின் நோக்கமாகும். மேலும், நிறுவனப் பொருள்களின் மூலப்பொருள் குறித்த தகவலை நுகர்வோருக்கு தெரிவிப்பதில் என்ன தவறு இருக்கமுடியும்?

**பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும், பெரு நிறுவனங்களும் பால் பொருள்கள் தயாரிப்பு துறையில் கால் பதிக்க அதிகளவில் ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்கான காரணம் என்ன?**

இந்தியாவின் பால் பயன்பாடு ஆண்டுக்கு 4.5 சதவிகிதம் அதிகரித்து வருகிறது. அதேபோல, பிராண்டட் பால் மற்றும் பால் பொருள்களின் பயன்பாடு ஆண்டு ஒன்றுக்கு 10-11 சதவிகிதம் வளர்ச்சியடைந்து வருகிறது. பிராண்டட் பொருள்களின் பயன்பாடு அதிகரித்தாலும் ஒட்டுமொத்த விற்பனையில் வெறும் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே பிராண்டட் பொருள்களின் பயன்பாடு உள்ளது. மக்களிடையே அதிகரித்து வரும் பால் பொருள்களின் பயன்பாடும், மக்கள் அதிகளவில் பிராண்டட் அல்லாத பொருள்களில் இருந்து பிராண்டட் பொருள்களுக்கு தங்களை மாற்றி வருவதும் பிராண்டட் பொருள்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாகும். இதனால், பால் பொருள்கள் தயாரிப்பு துறையில் நிறுவனங்களுக்கு நல்ல எதிர்காலம் உள்ளது. ஆனால், ஒரு மாநிலத்தில் ஒரு வேகமாக விற்பனையாகும் நுகர்பொருள் தயாரிப்பு நிறுவனம் (FMGC) மேற்கொள்ளும் வணிகத்தைப் பால் பொருள் தயாரிப்பு துறையில் வெறும் ஒரு நகரத்தில் மட்டுமே மேற்கொள்ள முடியும்.

**புதிதாகக் களமிறங்கும் பன்னாட்டு நிறுவனங்கள், நேரடியாக ஐஸ்க்ரீம் போன்ற மதிப்பு கூட்டுப் பொருள்களை விற்பனை செய்வதில் இறங்கிவிடுகின்றன. இதை எப்படி நீங்கள் பார்க்கிறீர்கள்? **

ஐஸ்க்ரீம் மற்றும் பாலாடைக்கட்டி மட்டுமே மதிப்பு கூட்டப்பட்ட பொருள்கள் அல்லது பிராண்டட் பொருள்கள் என்ற தவறான கண்ணோட்டம் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் உள்ளது. ஆனால், இந்தத் துறையைப் பொறுத்தவரைப் பதப்படுத்தப்பட்ட பால்தான் மிகப் பெரிய பிராண்டட் பொருளாக உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இந்தியாவில் உள்ள அனைத்துக் குடும்பங்களும் பதப்படுத்தப்பட்ட பாலையே பயன்படுத்துகின்றன. மேலும், பதப்படுத்தப்பட்ட பால் விற்பனையில் அதிகளவில் போட்டி உள்ளது.

அடுத்ததாக, பன்னாட்டு நிறுவனங்களுக்கு மிகப்பெரிய சவாலாக இருப்பது பால் கொள்முதல். பால் கொள்முதல் செய்யாமல் பால் பொருள்களை எப்படித் தயாரிக்க முடியும்? எனவே இந்தத் துறையில் வெற்றிகரமாகச் செயல்பட நிறுவனங்கள் பல்வேறு பால் கொள்முதல் பண்ணைகள், பதப்படுத்தும் ஆலைகள் அமைக்க வேண்டும். குறிப்பாக நகரத்துக்கு அருகில் அமைக்க வேண்டும். அப்போதுதான் வாடிக்கையாளர்களுக்குத் தரமான மற்றும் ஃப்ரெஷான பொருள்களை வழங்க முடியும்.

**புதிதாகப் பால் பொருள்கள் தயாரிப்பு துறையில் களமிறங்கும் நிறுவனங்கள் எதிர்கொள்ள வேண்டிய முக்கிய சவால்கள் என்னென்ன?**

பொதுவாக, பால் பொருள்கள் தயாரிப்பு துறையைப் பொறுத்தவரை பால் கொள்முதல் மிகவும் முக்கியமான ஒன்றாகும். எனவே ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள விவசாயிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களை தங்கள் வளையத்துக்குள் கொண்டுவர வேண்டியது மிகவும் முக்கியமான ஒன்றாகும். ஆனால், இது மிகப் பெரிய சவாலாகும். இந்தப் பணியை மேற்கொள்ள எங்களுக்கு 70 ஆண்டுகள் தேவைப்பட்டன.

**இந்தியாவில் புதிய பால் உற்பத்தி நிறுவனங்கள் வெற்றி பெற இயலுமா?**

அமுல் நிறுவனக் கிளைகள் இந்தியா முழுவதும் உள்ளன. இருப்பினும் சந்தையில் 25 சதவிகிதப் பங்குகளை மட்டுமே நாங்கள் கொண்டுள்ளோம். இந்தியா முழுவதும் தங்களது தொழிலை விரிவடையச் செய்யும் முயற்சியில் ஈடுபடும் பல்வேறு பால் உற்பத்தி நிறுவனங்கள் கடந்த காலங்களில் தோல்வியடைந்துள்ளன. மேலும், அடுத்துவரும் 20 ஆண்டுகளுக்கு இந்தியா முழுவதும் விரிவடையக் கூடிய வாய்ப்பு எந்தப் பால் நிறுவனத்துக்கும் இங்கு இல்லை. தாராளமயமாக்கலுக்குப் பிறகு இந்தியாவில் கால்பதித்த எந்தவொரு பால் உற்பத்தி நிறுவனத்தாலும் லாபத்தை ஈட்ட முடியவில்லை. உலகம் முழுவதும் மிகவும் பிரபலமடைந்திருந்த நெஸ்ட்லே நிறுவனத்தால் மட்டுமே இந்தியாவில் லாபத்தை ஈட்ட முடிந்தது.

**அமுல் நிறுவனப் பொருள்களுக்கு அதிகரித்து வரும் தேவையை நீங்கள் எவ்வாறு பூர்த்தி செய்கிறீர்கள்?**

தேவையைப் பூர்த்தி செய்ய, நாங்கள் அதிகளவிலான விவசாயிகளை எங்களது வளையத்துக்குள் இணைத்து வருகிறோம். அதேபோல, ஹரியானா, மேற்கு வங்காளம், ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் உற்பத்தி ஆலைகளை விரிவுபடுத்தும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். புதிய ஆலைகளை அமைக்க ஒவ்வொரு வருடமும் ரூ.800 கோடி முதலீடு செய்து வருகிறோம். மேலும், அடுத்த இரண்டு ஆண்டுகளில் கொல்கத்தா, மும்பை, குஜராத் மாநிலங்களில் புதிய மின்சார உற்பத்தி ஆலைகள் அமைக்கவும் புனேவில் ஒரு புதிய ஐஸ்க்ரீம் ஆலை அமைக்கவும் அடுத்த இரண்டு ஆண்டுகளில் ரூ.2000 கோடி முதலீடு செய்யவும் முடிவு செய்துள்ளோம்.

**அமுல் விளம்பரங்கள் மிகவும் தனித்துவம் மிக்க ஒன்றாக இருந்து வருகின்றன. தற்போது விளம்பரங்கள் மூலம் வாடிக்கையாளர்களுக்கு விழிப்பு உணர்வு ஏற்படுத்தி வருகிறீர்கள். உங்களது அடுத்த கட்ட திட்டம் என்ன?**

இளைஞர்களைக் கவரும் விதத்தில் விளம்பரங்கள் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம். இருப்பினும் பழைய விளம்பர உத்தியையே நாங்கள் பின்பற்றுவோம். உதரணமாக, கடந்த 50 வருடங்களாக அமுல் வெண்ணெய் விளம்பரங்களில் “Utterly Butterly Delicious” என்ற வாசகத்தையே தொடர்ந்து பயன்படுத்தி வருகிறோம். ஆனாலும், எங்கள் விளம்பரத்தை மக்களிடம் கொண்டு செல்லச் சமகால நிகழ்வுகள் குறித்து விளம்பரங்களில் கருத்து தெரிவித்து வருகிறோம். தனித்துவம் மூலமே மக்களின் மனதில் இடம்பெற முடியும்.

நன்றி: [லைவ் மின்ட்](http://www.livemint.com/Companies/gVYHuna8AT28H0aaaKHzcM/MNCs-think-companies-like-us-are-from-villages-says-Amuls.html)

தமிழில்: ரிச்சர்ட்சன்�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *