|சிறப்புத் தொடர்: ஊதிய விகிதம் என்னும் சிக்கல்!

public

b>

மனீஷ் சபர்வால்

இந்தியாவின் வேலைவாய்ப்பு சவாலைப் பற்றிய ஐந்து பகுதிகளைக் கொண்ட கட்டுரையின் மூன்றாவது பகுதி இது. [முதல் பகுதி]( http://www.minnambalam.com/k/2018/10/04/8) இந்தியாவின் வேலைவாய்ப்பு அரங்கில் மைய அரசியல் பொருளாதார சவாலை விளக்கியது. [இரண்டாவது பகுதி]( http://www.minnambalam.com/k/2018/10/05/8) 2017இல் இந்தியப் பொருளாதாரம் 12.8 மில்லியன் வேலைவாய்ப்புகளை உருவாக்கியதா என்பதைப் பரிசீலித்தது.

சேம்பர் ஆஃப் சீக்ரெட்ஸ் கதையில் ஹார்ரி பாட்டர் டம்பிள்டோரிடம் கூறியதாவது: “நமது ஆற்றல்களைவிட நாம் நாம் எதைத் தேர்ந்தெடுக்கிறோமோ அவையே நாம் உண்மையில் யார் என்பதைக் காட்டுகின்றன”.

இந்த ஆலோசனை கொள்கை முடிவுகளை எடுப்பவர்களுக்கு முக்கியமான ஒன்றாகும். ஏனெனில் எந்தக் கேள்விகளை மையமாகக் கொண்டு அவர்கள் விஷயங்களைத் தேர்ந்தெடுக்கின்றனர் என்பது அதற்கான விடைகளைத் தீர்மானிக்கிறது. நோய்க்கு சிகிச்சையளிப்பதைவிட நோய்க்கான அறிகுறிகளுக்கு சிகிச்சையளிப்பது உயிருக்கே ஆபத்தில் போய் முடியும் என்பதை ஒவ்வொரு மருத்துவருமே அறிவர்.

இந்தியாவுக்கு வேலைவாய்ப்பு பிரச்சினை உள்ளது என நீங்கள் நினைப்பீர்களானால் பணத்தை மேலிருந்து கொட்டுவீர்கள் (எடுத்துக்காட்டாக, NREGSக்காக மேற்கொள்ளப்படும் செலவு), வாரத்திற்கு மூன்று நாள் வேலை என உத்தரவிடுவீர்கள் (ஏதோ வேலைகள் அனைத்துமே சிறுசிறு பகுதிகளாகப் பிரித்து ஒதுக்கப்படக்கூடியவை என்ற தவறான கருத்துப்படி), மண்வெட்டிகளுக்குப் பதிலாக தேக்கரண்டியைத் தொழிலாளர்கள் கைகளில் கொடுப்பீர்கள் (உற்பத்தித் திறன் நாசமாய் போகட்டும்).

ஆனால், இந்தியாவிற்கு ஊதிய விதங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை உள்ளது என்று நீங்கள் நினைப்பீர்களாயின் முறைசாராத் தொழில்களை முறைசார் தொழில்களாக்குவது, நகர்ப்புறமயமாதல், நிதிமயமாதல், தொழில்மயமாதல் மனித மூலதனம் ஆகியவற்றில் கவனம் செலுத்துவீர்கள். இந்தியாவின் அதிகாரபூர்வமான வேலையின்மை விகிதம் 5% என்பது பொய்க்கணக்கு அல்ல என நான் வாதிட விரும்புகிறேன். ஏனெனில் வேலைபார்க்க விரும்பும் ஒவ்வொருவருக்கும் ஒரு வேலை இருக்கிறது. அவர்கள் விரும்புகின்ற அல்லது அவர்களுக்குத் தேவைப்படுகின்ற ஊதியம்தான் இல்லை.

**காலம் தப்பிய யுத்தம்**

கடந்த காலத்தில் நடத்த வேண்டிய போரை தற்போது நடத்தும் தளபதிகள் போல ஏராளமான அரசியல்வாதிகள் இன்றைய ஊதியக் கோரிக்கைகள் என்ன என்று கவனமாகக் கேட்பதற்குப் பதிலாக வேலைவாய்ப்பு பற்றிய நேற்றைய ஆரவாரத்திலேயே மாட்டிக்கொண்டுள்ளனர். இந்த விவாதத்திற்கு ஐந்து விஷயங்களைப் பற்றி சிந்திக்க வேண்டிய அவசியமுள்ளது: நமது தொழிற்சாலைகள், நமது உற்பத்தித்திறன், நமது ஊதிய விகிதம், நமது புள்ளிவிவரங்கள் மற்றும் சாத்தியமான பொருளாதார முழுமைக்கான வரைவு ஆகியன.

இவை ஒவ்வொன்றையும் பற்றி விவரமாகப் பார்ப்போம்.

எந்த ஒரு நாட்டிலும் கம்பெனிகளைப் பற்றி எண்ணுவது சிக்கலான விஷயம். ஆனால் தொழில்முனைவோர் அடிப்படையில் இரு வெவ்வேறு வகையான கம்பெனிகளை உருவாக்குகின்றனர். ஒன்றோ குழந்தைக் கம்பெனிகள், மற்றொரு வகை குள்ளக் கம்பெனிகள். இரண்டுமே சிறியவை; ஆனால் குழந்தைக் கம்பெனிகள் வளரும், குள்ளக் கம்பெனிகளோ சிறியவையாகவே இருக்கும்.

இந்தியா குள்ளக் கம்பெனிகளின் தேசம். நம் நாட்டில் 6.3 கோடி நிறுவனங்கள் உள்ளன. இவற்றுள் 1.2 கோடிக்கு முகவரிகூட இல்லை. இவை வீடுகளிலிருந்தே இயங்குகின்றன, 64 லட்சம் நிறுவனங்கள் ஜிஎஸ்டி அறிமுகமாகும் வரை மறைமுக வரிகளைச் செலுத்தின.12 லட்சம் நிறுவனங்களே தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்புக்கான கட்டணத்தைச் செலுத்தின. வெறும் 18,500 கம்பெனிகள் மட்டுமே ரூ.10 கோடிக்கு மேல் துவக்க முதலீட்டைக் கொண்டுள்ளன.

**உற்பத்தித் திறன் என்னும் சவால்**

நிறுவனத்தின் முறைசார் தன்மையும் அளவும் உற்பத்தித் திறனைப் பெருமளவுக்குத் தீர்மானிக்கின்றன. நீங்கள் பொருளுற்பத்தி செய்யும் நிறுவனங்களை அளவு வாரியாக வரிசைப்படுத்துவீர்களேயானால் முதல் 10 விழுக்காடுகள் இடத்திலுள்ள நிறுவனங்களுக்கும் 90ஆவது விழுக்காடு இடத்திலுள்ள நிறுவனங்களுக்குமிடையே உற்பத்தித் திறனில் 22 மடங்கு வேறுபாடு உள்ளது. உற்பத்தித் திறனில் 22 மடங்கு வேறுபாடு இருந்தால் நீங்கள் ஊக்கத் தொகையுடன் கூடிய கூடுதலான ஊதியத்தை (wage premium) வழங்க மாட்டீர்கள், ஊக்கத் தொகையுடன் கூடிய கூடுதலான ஊதியத்தை வழங்கவில்லையென்றால் உங்கள் உற்பத்தித் திறனும் அதிகமாக இருக்காது.

120 கோடி இந்தியர்களின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.6 கோடி பிரிட்டிஷாரின் மொத்த உள்நாட்டு உற்பத்தியையும் மிஞ்ச 71 ஆண்டுகள் ஆனது. நமது தாழ்ந்த தேசிய உற்பத்தித் திறன் காங்கிரசின் 1955 ஆவடி தீர்மானத்திற்குப் பிறந்த குழந்தையாகும். இத்தீர்மானமே லைசென்ஸ் ராஜ் எனப்படும் அரசுக் கட்டுப்பாட்டு ஆட்சிமுறையைக் கட்டவிழ்த்துவிட்டது. கம்பெனிகள் வாடிக்கையாளர்களை அல்லாது பிணையக் கைதிகளைக் கொண்டிருக்குமாறு இத்தீர்மானம்தான் உத்தரவாதம் செய்தது.

2017இல் ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்டது ஒரு முக்கிய நடவடிக்கையாகும். கடந்த ஒரு ஆண்டிலேயே 47 லட்சம் புதிய நிறுவனங்கள் அதிகரித்தன. இதில் ஒவ்வொரு நிறுவனமும் பெரிய எண்ணிக்கையில் தொழிலாளர்களை வேலைக்கமர்த்தும் முதலாளியாக முடியாது. ஆனால் இந்த அளவுக்குப் பெரும் எண்ணிக்கையில் நிறுவனங்கள் அதிகரித்திருப்பது முறைசார் வேலைவாய்ப்புகளைக் கணிசமாக அதிகரிக்கும். அதேநேரம் அது இந்தியா அதிக ‘குழந்தை நிறுவனகளை’ உருவாக்குவதற்கும் வழிவகுக்கும்.

உற்பத்தித் திறனைப் பற்றிச் சிந்திக்க வேண்டுமானால் நாம் வேளாண் பொருளாதாரத்திற்குள்ளும் சுயவேலைவாய்ப்புக்குள்ளும் ஆழமாகச் செல்ல வேண்டியுள்ளது. நமது உழைப்பு சக்தியில் (வேளாண் துறையிலுள்ள) 50% நமது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13%ஐயே உற்பத்தி செய்கிறது (ஒப்பீட்டளவில் பார்த்தால் நமது உழைப்பாளர் சக்தியில் 0.7% மட்டுமே விளங்கும் ஐடி துறையின் அதிக உற்பத்தித்திறன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8% ஐ உற்பத்தி செய்கிறது). நாம் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் விவசாயிகளைக் கொண்டிருக்கிறோம். விவசாயிகளின் வறுமையைக் குறைக்க வேண்டுமானால் பொருளாதார வல்லுநர் அசோக் குலாட்டி கூறுவது போல நமக்கு 4 ‘I; கள் தேவைப்படுகின்றன—incentives (ஊக்கத் தொகைகள்), investments (முதலீடுகள்), institutions (நிறுவனங்கள்) மற்றும் innovation (புதுமைகள்). ஆனால் நீடித்த தீர்வு, குறைந்த எண்ணிக்கையிலான விவசாயிகளைக் கொண்டிருப்பது மட்டுமே.

நமது உற்பத்தித் திறனை அழித்தொழிக்கும் மற்றொரு விஷயம் 50% ஆக உள்ள சுயவேலைவாய்ப்பாகும். ஏழைகள் வேலைவாய்ப்பு இல்லாதவர்களாக இருக்க முடியாது. எல்லோருமே தொழில்முனைவோராக ஆகவும் முடியாது. இந்தியாவின் 6.3 கோடி நிறுவனங்களில் பல ரஷ்ய பொருளாதார வல்லுநர் சேய்னோவ் சுயவேலைவாய்ப்பு என்று அழைத்த அந்நிலைமையில்தான் தாக்குப்பிடிக்க முடியும் (நீங்கள் உங்களுக்கோ அல்லது உங்களுடைய குடும்பத்தாருக்கோ சந்தையில் நிலவும் மட்டத்திலான ஊதியத்தை வழங்கிக்கொள்ள வேண்டிய அவசியமில்லை). ஆனால் நோபல் பரிசுபெற்ற பால் குரூக்மென் கூறுவது போல உற்பத்தித் திறன்தான் எல்லாமே என்பதும் கிடையாது; ஆனால் நீண்டகால அடிப்படையில் கிட்டத்தட்ட அதுதான் அனைத்துமே.

தாக்குப்பிடித்து நீடிக்கக்கூடிய உயர்ந்த ஊதிய விகிதங்கள் யதார்த்தத்துக்குப் பொருந்தாத குறைந்தபட்சக் கூலியை நெறிப்படுத்தும் ஆணைகளால் நிர்ணயிப்பது நடைமுறைக்கு சரிப்பட்டுவராது. LIBOR ரேட்டுகளைப் போல (குறுகியகால கடன்களுக்கு வங்கிகள் வசூலிக்கும் அதிக வட்டி விகிதங்களைப் போல) NREGS ஊதியங்களும் உள்நோக்கத்துடன் கையாளப்பட்டன. தாக்குப்பிடித்து நீடிக்கக்கூடிய உயர்ந்த ஊதிய விகிதங்கள் அதிக மனித மூலதனமாக விளங்கும் மற்றும் நகர்ப்புற தொழிலாளர்களால் மேற்கொள்ளப்படும் வேளாண்சாரா முறைசார் வேலைவாய்ப்புகளின் அதிக உற்பத்தித் திறனிலிருந்துதான் வரும்.

உழைப்பாளர் சந்தை புள்ளிவிவரங்ககளைப்பற்றி எண்ணும்போது வேலைவாய்ப்பு புள்ளிவிவரங்களுக்கான நான்கு ஆதாரங்களுக்குள்ளும் ஆழமாக செல்லவேண்டியுள்ளது. அவையாவன; குடும்பவாரியான ஆய்வுகள், நிறுவனவாரியான ஆய்வுகள், நிர்வாகத்திடமிருந்து கிடைக்கும் புள்ளிவிவரங்கள் மற்றும் அரசுத் திட்டங்களிலிருந்து கிடைக்கும் புள்ளிவிவரங்கள். ஆனால் ஆய்வுகளிலிருந்து கிடைக்கும் புள்ளிவிவரங்களே இதர ஆதாரங்களிலிருந்து கிடைக்கும் புள்ளிவிவரங்களைவிட மேலானது என்ற கருத்து நியாயமல்ல (குடும்ப வாரியான ஆய்வுகளில் 29% இந்தியர்கள் தாங்கள் 9க்கும் அதிகமான தொழிலாளர்களைக் கொண்ட நிறுவனங்களில் பணிபுரிவதாகக் கூறுகின்றனர். ஆனால் நமது நிறுவனங்கள் வாரியான ஆய்வில் 1.5% நிறுவனங்கள் மட்டுமே தாங்கள் 9க்கும் மேற்பட்ட தொழிலாளர்களைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கின்றன.

நிர்வாகத்திடம் கிடைக்கும் புள்ளிவிவரங்கள் பெரும்பாலும் நம்பத்தாகாதவையாக இருக்கும். ஆனால் கடந்த சில ஆண்டுகளுக்கான புதிய பிராவிடண்ட் ஃபண்ட் செலுத்துபவர்கள் விவரம் ஊதியத்திலிருந்து வரையறுக்கப்பட்ட தொகையைப் பிடித்தம் செய்யப்படுகின்ற மற்றும் ஆதாரோடு இணைக்கப்பட்டதொரு திட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதால் இந்த விவரங்களைத் தில்லுமுல்லு செய்து மாற்றிக்காட்ட முடியாது. இந்த புள்ளிவிவரம் முக்கியமானது. ஏனெனில் இது ஆராய்ச்சியாளர்களுக்கும் கொள்கை உருவாக்குபவர்களுக்கும் வேலைக்கு அமர்த்துபவர்களுக்கும் காலஅளவுகள் வாரியாகவும், வயதுப் பிரிவினர் வாரியாகவும் மற்றும் பிராந்தியங்கள் வாரியாகவும் புள்ளிவிவரங்களை அளிக்கிறது. அதுவும் அது எந்த ஆதாரத்திலிருந்து கிடைத்தது — ஜிஎஸ்டி வாயிலாகவா, ரொக்க மதிப்பழிப்பு வாயிலாகவா, சிறந்த அமலாக்கத்தின் வாயிலாகவா, வரி கட்டாதவர்களுக்கு அளிக்கப்பட பொது மன்னிப்பு வாயிலாகவா அல்லது புதிதாகப் பிறந்த நேர்மையினால் அதிகரித்த வரி கட்டுபவர்கள் எண்ணிக்கை வாயிலாகவா — என்பது முக்கியமின்றிக் கிடைத்த புள்ளிவிவரங்கள்.

பூனை எலியைப் பிடிக்கும் என்றால் அது கருப்பா வெள்ளையா என்பது முக்கியமில்லை. உழைப்பாளர் சந்தை மற்றும் போர்த் தந்திரத்தில் ஆரம்பத் தவறு அர்ஜுன் சென்குப்தா அறிக்கையின் காரணமாக நிகழ்ந்தது. அந்த அறிக்கை முறைசாரா வேலைவாய்ப்பு விவரங்களை முறைசாரா நிறுவனங்களோடு போட்டுக் குழப்பியது மட்டுமன்றி முறைசாராத் தன்மையை அது மாற்றப்பட முடியாத அளவுக்கு சாசுவதமானதாகக் கருதியது.

**ஊதியம் என்பது வெறும் எண் அல்ல**

ஊதிய மாற்றங்களைப் பற்றி சிந்திக்க வேண்டுமானால் வேறுபடுத்திக் காட்டும் மூன்று கோடுகளை அங்கீகரித்தாக வேண்டும்: மொத்த எண்ணிக்கை vs நிகர எண்ணிக்கை, பெயரளவிலானது vs அசலானது மற்றும் அரசாங்கம் சார்ந்தது vs சந்தை சார்ந்தது.

மொத்த எண்ணிக்கைக்கும் நிகர எண்ணிக்கைக்கும் உள்ள 40% வேறுபாடானது வேலை தேடுபவர்கள் “கையில் கிடைக்கும் ஊதியமா அல்லது காகிதத்தில் காட்டப்படும் ஊதியமா” என்று கேட்கும் கேள்வியிலிருந்து தெளிவாகத் தெரிகிறது. மொத்த எண்ணிக்கை நிகர எண்ணிக்கைக்குச் சமமாக இருக்க வேண்டும் என்பது நம் வாதமல்ல. ஆனால் செலவிடப்படும் பணத்திற்குச் சொற்ப அளவே பலன்தரும் திட்டங்களுக்காக பறிமுதல் செய்யப்படும் நிதியின் தற்போதைய அளவுகள் முறைசாரத் தன்மையைத் தோற்றுவிக்கின்றன.

பெயரளவிலானது vs அசலானது என்னும் வேறுபாடு குவாலியரில் ஒரு இளைஞர் என்னிடம் சொன்ன விஷயத்தில் தொகுத்தளிக்கப்படுகிறது. “குவாலியராக இருந்தால் எனக்கு ரூ.4000 கொடுங்கள், குர்காவோனாக இருந்தால் ரூ.6000 கொடுங்கள், டெல்லியாக இருந்தால் ரூ.9000 கொடுங்கள், மும்பையாக இருந்தால் ரூ.18,000 கொடுங்கள்; எனது பயணப் பைகள் பேக்கிங் செய்யப்பட்டு நான் தயாராக உள்ளேன். நான் எங்கு செல்ல வேண்டுமெனக் கூறுங்கள்”.

வேலைக்கு அமர்த்துபவர்கள் பெயரளவிலான ஊதியத்தையும் வேலை செய்பவர்கள் அசல் ஊதியத்தையும் பற்றிக் கவலைப்படுவதால், இந்த வேறுபாடு நமது அரைகுறையான நகர்ப்புறமயமாதலின் விளைவு. இது புலம் பெயர்தலுக்கு முடிவு காட்டுகிறது. 10 லட்சம் பேர் மக்கள் தொகைக்கு அதிகமான நகரங்கள் நம் நாட்டில் 52 இருந்தால் சீனத்தில் 375 உள்ளன. அரசாங்கம் சார்ந்தது vs. தனியார் சார்ந்தது வேற்றுமைக்கோடு அரசாங்கம் கீழுள்ளதற்கு அதிகமாகவும் மேலுள்ளதற்கு குறைவாகவும் கவனம் செலுத்துவதிலிருந்து வருகிறது. ஆரம்பநிலை அரசு வேலைகளுக்கு அதிக தகுதிச்சான்றுகளை உடையவர்கள் பெரும் எண்ணிக்கையில் விண்ணப்பிப்பதை வேலையின்மையின் பிரதிபலிப்பாக எடுத்துக்கொள்ளாதீர்கள். இவர்களில் பலருக்கு வேலை இருக்கிறது. ஆனால் ஊதியத்திற்கு கிடைக்கும் கூடுதல் ஊக்கத்தொகை, வேலைப்பாதுகாப்பு மற்றும் மிகக் குறைந்த கணக்குகாட்டவேண்டிய பொறுப்பு ஆகிய மூன்றும் மிஞ்சமுடியாதபடி சாதகமாக இருப்பதால் அவர்கள் அரசு வேலைகளை நாடுகிறார்கள்.

ஒட்டுமொத்த பொருளாதாரத்துக்கான எந்தவொரு வரைவும் பூர்த்திபெறாததாகவும் தாற்காலிகத்தன்மை கொண்டதாகவும் இருக்கும். சீனத்தின் ஏற்றுமதி சார்ந்த பொருளுற்பத்தி வெற்றிக்கு காரணம் டெங் ஜியாவோபிங் திறனாற்றல்களை மேம்படுத்தினார். அவருக்கு அதிர்ஷ்டமும் இருந்தது. அவர் உலக அளவிலான வளர்ச்சி, உலக அளவிலான திறந்த வர்க்கம், பொருளுற்பத்திக்கான சப்ளை சங்கிலித்தொடர்களை உலக அளவில் கட்டுடைத்து ஆகியவற்றுடன் கூடிய முப்பது ஆண்டுகால சூப்பர் வணிகச் சுற்றுக்கு வழிகோலினார்.

நீடித்து தக்கவைக்கக்கூடிய பொருளாதார வெற்றிக்கு கட்டியங்கூறுவது பொருளாதாரரீதியில் சிக்கல் நிறைந்த தன்மையே என்று ஹார்வார்ட் பொருளாதார வல்லுநர் ரிக்கார்டோ ஹாஸ்மான் கூறினார். இந்தியாவோ மிகவும் சிக்கலானது. நாம் எல்லாவற்றையும் தயாரிக்கிறோம், எல்லாவற்றையும் செய்கிறோம். ஆனால் அதை நாம் நல்ல முறையிலோ தக்க பொருளாதார அளவிற்கேற்பவோ செய்வதில்லை. ‘இந்தியாவில் தயார் செய்யுங்கள்’ என்பதை ‘இந்தியாவுக்காக தயார் செய்யுங்கள்’ என்று ஆகக்கூடும். கடந்த ஆண்டில் நாம் பெற்ற $64 பில்லியன் வெளிநாட்டு நேரடி மூலதனம் (FDI) உள்நாட்டு சந்தைகளும் வேண்டிய அளவுக்கு நெருக்கமாக விரிவடையும் துறைகளிலேயே ஒருமுகப்பட்டிருந்தது. நமது தொழிலாளர் சக்தியில் பொருளுற்பத்தித் துறையின் பங்கு 11%இலிருந்து 20% ஆக அதிகரிக்கலாம். ஆனால் பொருளாதாரத்தில் மிக வேகமாக அதிகரிக்கும் வேலைகள் தொடர்ந்து விற்பனை, வாடிக்கையாளருக்கு வழங்கப்படும் சேவைகள் மற்றும் பொருள் போக்குவரத்து ஏற்றி இறக்குதல் ஆகிய துறைகளில் இருக்கும்.

நமது போர்கள் இப்போதே துவங்குகின்றன. நமக்கு இன்னும் சிறந்த நகரங்கள் அதிக எண்ணிக்கையில் தேவை. நமக்கு இன்னும் அதிக முறைசார் நிறுவனங்கள் தேவை. நமக்கு இன்னும் அதிக வேளாண் சாரா வேலைவாய்ப்புகள் தேவை. இன்னும் சிறந்த மனிதவள மூலதனம் தேவை. வணிகம் செய்வதை எளிதாக்கும் தலையீடுகள் உடனடியாகத் தேவைப்படுகின்றன.

(ரொக்கமற்ற) ‘இண்டியா ஸ்டேக்கை’ (India stack) தொழிலாளர் சட்டங்களுக்கு அறிமுகப்படுத்துங்கள், EPFO மற்றும் ESIC போன்ற கோணல் நிறைந்த அமைப்புகளுக்கு போட்டி அமைப்புகளை உருவாக்குங்கள், 25 வயதைக் கடந்தவர்கள் எண்ணிக்கைகளின் இடத்தில் பிரத்யேக நிறுவன எண்களை பதிலீடு செய்யுங்கள், ஒரே தொழிலாளர் சட்டத் தொகுப்பை (labour code) நோக்கிச் செல்லுங்கள்.

“மிகப் பெரும் இலட்சியங்களை எட்ட விடாமல் நம்மைத் தடுப்பது தடங்கல்கள் அல்ல. மாறாக அதற்கும் குறைவான லட்சியங்களை நோக்கிய தடங்கலற்ற பாதைகள்” என்று பகவத் கீதை கூறுகிறது. ஊதிய விகிதங்களைவிட வேலைகளை உருவாக்கும் பிரச்சினையைத் தீர்ப்பது எளிது. ஆனால், அது குறைவான லட்சியமேயாகும்.

*(கட்டுரையாசிரியர் டீம்லீஸ் சர்வீஸஸில் பணிபுரிகிறார்)*

**நன்றி: [இந்துஸ்தான் டைம்ஸ்](https://www.hindustantimes.com/analysis/india-s-job-problem-is-easier-to-solve-than-its-battle-for-wages/story-EPMgyzwjZwc7S7aY4biZgN.html)**

**தமிழில்: பா.சிவராமன்**

(தொடரின் அடுத்த பகுதி உழைப்பாளர் சக்தியில் பெண்களின் நிலை குறித்து அலசும்.)

[வாசகர்களுக்கு ஒரு வேண்டுகோள்!](https://minnambalam.com/k/2018/10/02/92)

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *