சிறப்புக் கட்டுரை: நவீன காலத்தில் கள்ள நோட்டுகள்!

public

அனு குமார்

பண்டைக் காலம் மற்றும் இடைக்காலத்தில் பணம், நாணயம் மற்றும் பணமதிப்பழிப்பு பற்றி இதற்கு முந்தைய [கட்டுரையில்](https://minnambalam.com/k/2017/11/17/1510857013) பார்த்தோம். இக்கட்டுரையில் நவீன காலத்தில் கள்ள நோட்டுகளின் புழக்கம் பற்றிப் பார்க்கலாம்.

**நவீன காலம்**

17ஆம் நூற்றாண்டில் லண்டனில் அரசின் நாணய நிர்வாகத்தின் தலைவராக பிரபல விஞ்ஞானியான ஐசக் நியூட்டன் நியமிக்கப்பட்டார். அக்காலத்தில் வில்லியன் சலோனெர் என்ற போலி நாணய உற்பத்தியாளர் மிகவும் பெயர் பெற்றவர். அவரைப் பின் தொடரவும், பிடிக்கவும் பல உளவாளிகளையும், ரகசிய ஏஜெண்டுகளையும் ஐசக் நியூட்டன் தன் கைவசம் வைத்திருந்தார். போலி நாணய வடிவமைப்பில் வில்லியம் சலோனெர் உன்னத அனுபவம் பெற்றவர் என்று தாமஸ் லீவன்சன் தன்னுடைய புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். போலி நாணய வடிவமைப்பை பிர்மிங்கம் நகரில் வில்லியம் திறம்படக் கற்றார். பல போலி நாணய உற்பத்தியாளர்களுக்கு பிர்மிங்கம் நகரம் பேர்போன நகரம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கில மற்றும் பிரஞ்சு நாணயங்களை மிக எளிதாக நகலாக்கிய வில்லியம், அவற்றை லாட்டரி சீட்டுகள், மருந்துகள், ஆடம்பரப் பொருள்கள் போன்றவையாக மாற்றினார். வில்லியம் மீது சில ஊழல் குற்றச்சாட்டுகளும் இருந்தன. இறுதியாக ஐசக் நியூட்டன் கையில் வில்லியம் பிடிபட்டார். 1699ஆம் ஆண்டில் வில்லியம் தூக்கிலிடப்பட்டார்.

போர்களிலும்கூட போலி நாணயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. 1773 முதல் 1775 வரை நடந்த அமெரிக்கப் புரட்சிப் போரில் பல சதிகாரர்களும், போராட்டக்காரர்களும் போலி நாணயங்களைப் பயன்படுத்தியுள்ளனர். சில நியமிக்கப்பட்ட வங்கிகளுக்கு நாணயம் அச்சிட்டு வெளியிட அதிகாரம் இருந்தது. ஆனால், நாணயங்களைக் கட்டுப்படுத்த ஏதும் வழிவகைகள் இல்லை. இதனால் நாணயங்களின் எண்ணிக்கை கட்டுக்கடங்காமல் அதிகரித்துவிட்டது. இதனால் ஏற்பட்ட சீர்குலைவு எதிரிகளுக்குச் சாதகமாகிவிட்டது. அமெரிக்கப் புரட்சிப் போருக்குப் பிறகு நிலைமை சீரடையச் சில ஆண்டுகள் தேவைப்பட்டது.

இருந்தாலும் போலிகளைத் தயாரிப்போர் அடங்கவில்லை. 1790 முதல் 1831 வரை சில போலி நாணய உற்பத்தியாளர்களாக அறியப்பட்ட ஒரு சட்டவிரோத கும்பல் ஒஹியோ நதிப் பள்ளத்தாக்குக்கு அருகில் இருக்கும் குகைகளில் பதுங்கியிருந்தனர். அரசின் படைகளுடன் நடத்தப்பட்ட நீண்ட துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு அக்கும்பல் அங்கிருந்து துரத்தியடிக்கப்பட்டது. அதில் உயிர் தப்பிய சிலர் தெற்குப் பக்கமாக மிசூரிக்குச் சென்றுவிட்டனர்.

1886ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபரைப் பாதுகாக்க இரு ரகசியப் படையை அந்நாட்டு அரசு அமைத்திருந்தது. ஆனால், மிக ரகசியமாக அப்படை மூலம் போலி நாணய உற்பத்தியாளர்கள் கண்காணிக்கப்பட்டனர். 1870களில் அவர்களைப் பிடிக்க மிகப்பெரிய தேடுதல் வேட்டை நடத்தப்பட்டது. எம்மானுவேல் நிங்கெர் என்ற கலைஞர் பெயிண்ட் மற்றும் பிரஷ் பயன்படுத்தி போலி நாணயங்களைத் தயாரித்தார். அவரைப் பிடிக்க முடியாமல் பல நாள்களாக ரகசிய அதிகாரிகள் சிரமப்பட்டு வந்தனர். எம்மானுவேல் நவீன கால ராபின் ஹூட் என்று அழைக்கப்பட்டார். ஏனெனில் உயர்மதிப்பிலான நாணயங்களையே எம்மானுவேல் பயன்படுத்தி வந்தார். ஒரு மதுபானக் கடையில் எம்மானுவேல் தனது அலட்சியத்தால் பிடிபட்டார். மேஜையில் தனது போலி நோட்டைக் கவனக்குறைவால் தவறவிட்டார் எம்மானுவேல். சந்தேகப்பட்ட கடை உரிமையாளர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தார். எம்மானுவேலும் காவல் துறையினர் கையில் பிடிபட்டார்.

20ஆம் நூற்றாண்டிலிருந்து போலி நோட்டுகள் தயாரிப்புக்கான தண்டனைகள் கடுமையாக்கப்பட்டன. இக்காலம் முதல் இந்திய தண்டனைச் சட்டத்தில் போலி நோட்டுகள் தயாரிப்புக்கு ஏழு ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கப்பட்டது. பிரிட்டிஷ் இந்தியாவில் ரயில் சேவை வளர வளர, போலி ரூபாய் நோட்டுகளைத் தயாரிப்பவர்களும் அதன்மூலம் தப்பித்து வந்தனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் காவல் துறையினரும் அவர்களைத் தேடித் திரிந்தனர்.

பிரிட்டிஷ் ஆட்சியில் 1871ஆம் ஆண்டில் சர்ச்சைக்குரிய ஒரு சட்டம் போடப்பட்டது. இதன்படி சில சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ‘பழங்குடிக் குற்றவாளிகள்’ என்றழைக்கப்பட்டனர். இச்சட்டத்தை 1952ஆம் ஆண்டில் இந்திய அரசு ரத்து செய்தது. பிரிட்டிஷ் இந்தியாவில் சப்பர்பந்த்கள் என்ற குழுக்கள் குற்றவாளிகளாக அழைக்கப்பட்டனர். இவர்கள் பிஜப்பூர் பகுதியில் வசித்து வந்தனர். அவர்கள் பயணிக்கும்போது வயதானோர், நோயுற்றோர், சிறுவர் தவிர மற்ற அனைவரும் கிளம்பிவிடுவர். பக்கிரிகளைப் போல் வேடமணிந்து குழுக்களாகத் தங்களது நாணய அச்சுகள், களிமண் பானைகள் உள்ளிட்ட கருவிகளுடன் பயணிப்பர். சந்தேகம் வராமல் இருப்பதற்காக மற்ற குழுக்களை விட்டுத் தள்ளியே இருப்பர். பயணம் வெற்றிகரமாக முடிந்தபிறகு தங்கள் கோயில்களில் மகிழ்ச்சியாகக் கொண்டாடுவர்.

இன்றளவில், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்க நினைப்பவர்களும், பொருளாதாரத்தைச் சீர்குலைக்க நினைப்பவர்களும் கள்ள நோட்டுகளை அச்சிட விருப்பம் காட்டுகின்றனர். அவர்களின் வழிமுறைகள் மாறிவிட்டதே தவிர அவர்களின் நோக்கம் மாறவில்லை.

நன்றி: [Economic & Political Weekly](http://www.epw.in/journal/2017/44/postscript/monkey-business.html)

தமிழில்: அ.விக்னேஷ்�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *