சிறப்புக் கட்டுரை: அரசால் நலிவுறும் தோல் தொழில்!

public

பூர்வா சிட்னிஸ்

முகமது ஷரீஃபின் தோல் பதனிடும் தொழில் வெற்றிகரமாக இயங்கி நீண்ட காலம் ஆகவில்லை. சிறிது காலம் முன்பு வரை நன்றாகத் தான் இயங்கி வந்தது. பசு பாதுகாவலர்கள், சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கைகள், பண மதிப்பழிப்பு மற்றும் ஜி.எஸ்.டி. வரி நடைமுறை போன்றவைதான் இவருடைய தொழிலை மிக மோசமாக்கியது.

35 வயதான ஷரீஃப் கூறுகிறார், “எல்லாம் மாறிவிட்டது. கான்பூரின் புறநகரில் உள்ள ஜஜ்மு பைலேன்சில் 1,500 சதுர அடியில் கடை வைத்துள்ளேன். இங்கு 20 பணியாளர்கள் வரை பணி செய்கின்றனர். தோல் தொழில் மையமாக உத்தரப்பிரதேசம் விளங்குகிறது. தற்போது பாதிக்கும் மேல் சரிந்து விட்டது. முன்பெல்லாம் தோல்கள் எளிதாகக் கிடைத்தது. போட்டி பெரிதாக இல்லை. தோல் விநியோகம் குறைந்தவுடன் விலை உயர்ந்துவிட்டது. சிறிது தோல் வாங்கவே, எனக்குள்ள மூல வியாதியுடன் நான் வெகுதூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது” என்கிறார்.

உலகின் இரண்டாவது பெரிய தோல் பொருள் ஏற்றுமதி நாடாக இந்தியா விளங்குகிறது. 17 பில்லியன் டாலர் மதிப்பிலான இத்துறையை ஜி.எஸ்.டி மிகவும் பாதிப்பதாக உள்ளது. குறிப்பாகச் சிறு நிறுவனங்களைத் தான் அதிகம் பாதிக்கிறது. ஓராண்டுக்கு முன்பு (நவம்பர் 8, 2016) அமல்படுத்தப்பட்ட பணமதிப்பழிப்பு அறிவிப்பால் கையில் ரொக்கப் பணம் இல்லாமல், பணியாளர்களுக்கு ஊதியம் கொடுக்க முடியாமலும், மூலப் பொருள்கள் வாங்க முடியாமலும் பலர் தொழிலை விட்டு வெளியேறினர்.

இந்த நிதியாண்டில் (2017-18) இந்தியாவிலிருந்து தோல் பொருள் ஏற்றுமதி 10 சதவிகிதத்துக்கும் மேல் குறைந்துள்ளது என்று தோல் பொருள் ஏற்றுமதி கவுன்சில் தலைவர் முக்தருல் அமின் கூறுகிறார். மேலும், “தோல் பொருள் நிறுவனங்களில் பதிவு செய்த நிறுவனங்களில் பாதிக்கும் அதிகமான நிறுவனங்கள், அதாவது 402 நிறுவனங்கள் கான்பூரில் தான் இயங்குகின்றன. இந்தியாவின் தோல்பொருள் ஏற்றுமதியில் மூன்றில் ஒரு பங்கு அங்குதான் தயாராகிறது. தற்போது பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன” என்கிறார்.

சதாக்கத் அலியின் பெல்ட் தயாரிப்பு நிறுவனம் மிகவும் வெற்றிகரமாக இயங்கி வந்தது. தற்போது ஆர்டர்களே இல்லாமல் கவலையுற்று இருக்கிறார். தற்போது 90 சதவிகித ஆர்டர்கள் குறைந்து ஒரு நாளைக்கு 50 பெல்ட்டுகள் வரை மட்டுமே தயாரிக்கப்படுகிறது. பணியாளர்களின் எண்ணிக்கையும் 10இல் இருந்து 3ஆகக் குறைந்துவிட்டது. தோல் விலையோ 75 சதவிகிதம் உயர்ந்துவிட்டது. தற்போது ஒரு சதுரஅடி தோல் ரூ.1,400 ஆக உள்ளது. “இதனால் பணியாளர்களுக்கு 20 சதவிகித ஊதியத்தைக் குறைத்து ஒரு நாளைக்கு ரூ.200 மட்டுமே வழங்குகிறேன்” என்றும் சதாக்கத் அலி கூறுகிறார்.

தோல் துறையில் மறைமுகமாகவும், நேரடியாகவும் 30 லட்சம் பேர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இவ்வாறு வேலைவாய்ப்பு பெற்றவர்களில் பெரும்பாலானோர் ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகத்தினரே ஆவர். ஏற்றுமதி கவுன்சில் தகவல்களின்படி, 3,500க்கும் மேற்பட்டோர் தோல் தொழில் தயாரிப்புகள் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். அதில் 20 சதவிகிதம் பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

கான்பூரைச் சேர்ந்த உள்ளூர் தோல்பொருள் தயாரிப்பு நிறுவனங்கள் நலச்சங்கத்தின் உறுப்பினரான கஷி நயெர் கூறுகையில், “ஒட்டுமொத்த வேலையிழப்புகள் மிக அதிகமாகும். கான்பூரில் மட்டும் நேரடி மற்றும் மறைமுக ஊழியர்கள் 5 லட்சம் பேர் இத்துறை சார்ந்துள்ளனர். இதில் கடந்த இரண்டாண்டுகளில் 2 லட்சம் பேர் வரை வேலையிழந்துள்ளனர்” என்றார். மேலும், இவர்களில் பெரும்பாலானோர் வேலைக்காக இங்கு குடியேறியவர்கள் என்கிறார் உத்தரப்பிரதேச தோல் பொருள் கூட்டமைப்பின் துணை தலைவர் தாஜ் அலாம். அமின் கூறுகையில், தனது ஷூ தயாரிப்பு நிறுவனத்தில் 400 பேர் பணிக்கு உள்ளனர். தற்போது ஆர்டர்கள் 30 சதவிகிதம் குறைந்துவிட்டது. அடுத்த சீசனிலும் ஆர்டர்கள் 30 சதவிகிதம் குறையும் வாய்ப்புள்ளது. மிகவும் சிரமத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

உத்தரப்பிரதேச பாஜக அரசு இறைச்சி விறலபனைக்கு கட்டுப்பாடு விதித்துள்ளதால், அங்கீகாரம் இல்லாத கசாப்புக் கடைகள் மூடப்பட்டுள்ளன. அதேபோல மத்திய அரசும் இந்த ஆண்டு தொடக்கத்தில் இறைச்சிக்கான கால்நடைகளை சந்தையில் விற்கத் தடை விதித்தது. (தற்போது இந்தத் தடையை மத்திய அரசு திரும்பப் பெற்றுள்ளது). இருப்பினும் இது மட்டுமே வர்த்தகர்களின் கவலைக்குக் காரணமல்ல. பசு பாதுகாவலர்களின் அச்சுறுத்தலும் இந்த வர்த்தகத்தைப் பாதித்துள்ளது. இதை சில வர்த்தகர்கள் உறுதியாக கூறும்போதிலும் தங்களின் பாதுகாப்பு கருதி தங்களை யார் என்று அடையாளப்படுத்திக் கொள்ள மறுக்கின்றனர். எருமைகளை விற்கக்கூட மக்கள் மிகவும் பயப்படுகின்றனர் என்று தோல் துறையினர் கூறுகின்றனர். பசு பாதுகாவலர்களின் வன்முறைகள் 2014ஆம் ஆண்டிலிருந்து தான் அதிகரித்திருக்கிறது. இதை இந்தியா ஸ்பென்ட் ஆய்வறிக்கை உறுதிப்படுத்துகிறது. பசு பாதுகாப்பு என்ற பெயரில் மனிதர்கள் கொல்லப்படுவதை ஏற்க முடியாது என்று பிரதமர் மோடி அறிவித்த பிறகும் பசு பாதுகாவலர்களின் வன்முறைகள் குறையவில்லை.

தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் இதில் முக்கிய பங்காற்றுகிறது. கடந்த ஆண்டு, கங்கா நதியில் தோல் ஆலைக் கழிவுகள் கலப்பதை பசுமைத் தீர்ப்பாயம் தடை செய்தது. மேலும், அம்மாநில அரசும் அனைத்துத் தோல் ஆலைகளையும் நதிக்கரையில் இருந்து மாற்றத் திட்டமிட்டது. “இதுபோன்ற கடுமையான நடவடிக்கைகள் மிகவும் பாதிப்படையச் செய்தன” என்கிறார் அலாம்.

மத்திய அரசு ஜூலை 1ஆம் தேதி ஜி.எஸ்.டியை அமல்படுத்தியது. இதுவும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக வர்த்தகர்கள் கூறுகின்றனர். இதுபற்றி அலாம் கூறுகையில், “ஜி.எஸ்.டி விதிகளின்படி ஆண்டுக்கு 36 முறை ரிட்டன் தாக்கல் செய்ய வேண்டும் என்ற நடைமுறை உள்ளது. இது ஏற்றுமதியை மிக மோசமாகப் பாதித்தது. கான்பூரில் உள்ள பல நிறுவனங்கள் டிஜிட்டல் மயமாக்கலை ஏற்றுக்கொள்வது கடினமான ஒன்றாகும். அதுமட்டுமல்ல, ரீஃபன்ட் மற்றும் டேக்ஸ் கிரெடிட் போன்றவையும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன. ஜி.எஸ்.டிக்குப் பிறகு ரீஃபன்ட் தொகை அளிக்கத் தாமதமாகிறது. இது சிறு நிறுவனங்களுக்கு பணத் தட்டுப்பாட்டை ஏற்படுத்தியுள்ளது. அதேபோல ஏற்றுமதிக்கான டிராபேக் தொகையும் 7.5 சதவிகிதத்திலிருந்து 2 சதவிகிதமாக குறைக்கப்பட்டது. இது நிறுவனங்களின் லாபத்தைக் குறைத்துள்ளது” என்கிறார். இதையடுத்து அரசு சில தோல் பொருள்களின் ஜி.எஸ்.டி வரியைக் குறைத்தது. ஆனால் தற்போதும் சிறு ஷூ தயாரிப்பு நிறுவனங்கள் தடுமாறி வருகின்றன. வாடிக்கையாளர்கள் இல்லாமல் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. “ஜி.எஸ்.டி மற்றும் பணமதிப்பழிப்பு ஆகிய இரண்டும் இந்த வர்த்தகத்தை முற்றிலும் பாதித்துள்ளது. கடந்த பத்து மணி நேரமாக ஒருவர் கூட ஷூ வாங்க வரவில்லை” என்கிறார் ராஜீவ் குரில்.

2016-17ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையில், தோல் தொழில்துறை அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளது என்று கூறப்பட்டுள்ளது. இந்தியாவின் மூத்த பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் ஆடைகள் மற்றும் காலணிகள் ஏற்றுமதி அதிகரித்து வளர்ச்சி காணப்பட்டுள்ளது என்று எழுதியுள்ளார். இந்தியா மார்ச் வரையில் 12 பில்லியன் டாலர் மதிப்பிலான தோல் பொருட்களை நுகர்ந்துள்ளது. 5.8 பில்லியன் டாலர் மதிப்பிலான தோல் பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. 2020ஆம் ஆண்டில் இந்தியாவின் உள்நாட்டுத் தேவையினால், இதன் மதிப்பு 18 பில்லியன் டாலர்களாக உயரும் என்றும் அரசு கருதுகிறது. ஆனால் ஷஃரீப், “எவ்வளவு நாள் இந்த தொழிலை வைத்து வாழ முடியும் என்று தெரியவில்லை, நாங்கள் நிச்சயமாக எங்கள் பிள்ளைகளை இந்த வியாபாரத்துக்குக் கொண்டு வர மாட்டோம்” என்றார்.

நன்றி: [ப்ளூம்பெர்க் குயின்ட்](https://www.bloombergquint.com/business/2017/12/05/why-kanpurs-tanneries-are-at-the-centre-of-a-fight-to-save-the-ganga)

தமிழில்: [பிரகாசு](https://www.facebook.com/prakash.dvk.1)

மின்னஞ்சல் முகவரி: prakash@minnambalam.com�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *