`காலத்தால் அழியாத காவியன் – ‘கக்கன்’!

public

வாய்ப்பற்ற சூழலில் நேர்மையாக இருப்பது பெரிதல்ல; வாய்ப்புள்ள இடங்களிலும் நேர்மையோடு இருக்கமுடியுமா? முடியும்! என்று நிரூபித்தவர் முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான கக்கன். முதுபெரும் தலைவரான காமராஜரின் காங்கிரஸில் தூணாக இருந்தவர் கக்கன். அமைச்சராக உயர்ந்து, முதலமைச்சர் காமராஜரோடு நெருக்கமானவராக வலம்வந்தும் அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி, எள்ளளவும் தன்னை வளர்த்துக் கொள்ளாதவர் கக்கன். அவரின் பிறந்தநாள் இன்று. அதிகாரம், அதைக்கொண்டு மக்களைச் சுரண்டுவது, தம்மை வளர்த்துக்கொண்டு, வாக்களித்த மக்களின் நம்பிக்கைமீது கரி பூசுவதுமான இன்றைய கால அரசியல் சூழலில், இதற்கெல்லாம் எதிரான குறியீடான கக்கனை நாம் நினைத்துப்பார்ப்பது அவசியமானதாகும்.

ஜுன் 18, 1907ஆம் ஆண்டு, மதுரை மேலூரில் பிறந்த கக்கனைப்பற்றி நம்மிடம் பகிர்கிறார் எழுத்தாளர் முருகு தீட்சண்யா. ‘ஊரை அடித்து, தன் ஏழு பரம்பரைக்கு சொத்து சேர்க்கும் மந்திரிகள் இருக்கும் நம் தமிழகத்தில், சொத்தே இல்லாமல் நாட்டுக்கே சொத்தாகிப்போன தலைவர் கக்கன். தமிழக அரசியல் வரலாற்றில் கக்கன் போன்ற நேர்மை, நாணயம் என்பதற்கு உதாரணமான அமைச்சரைப் பார்ப்பது கடினம். கக்கன் அமைச்சராகப் பொறுப்பிலிருந்த காலகட்டத்தில் மேட்டூர், வைகை அணைகள் கட்டப்பட்டன. மதுரை வேளாண்மைக் கல்லூரியை கொண்டுவந்தார். விவசாயிகளுக்கு தேவைக்கேற்ப உரம் கிடைக்க வழிவகை செய்தது, கூட்டுறவு விற்பனைக் கூடங்களைத் தொடங்கி வைத்தது, தாழ்த்தப்பட்டோர் நலத்துறையின்கீழ் ஆயிரக்கணக்கான பள்ளிகளைத் திறந்தது, தாழ்த்தப்பட்டோருக்கென வீட்டு வசதி வாரியம் அமைத்துச் செயல்படுத்தியது, காவல்துறையில் காவலர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்தியது, லஞ்ச ஒழிப்புத் துறையைத் தொடங்கியது என ஏராளமான புதிய அரசுத் துறைகள் ஆரம்பிக்கப்பட்டன.

கக்கன், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோதும் தன் மனைவி சொர்ணம், தொடக்கப்பள்ளி ஆசிரியையாகத் தொடர்ந்து பணியாற்றுவதையே விரும்பினார். வலிமைமிக்க அமைச்சராக அவர் வலம் வந்தபோது, தன் மகள் கஸ்தூரிபாயை மாநகராட்சிப் பள்ளியில்தான் படிக்கச் செய்தார். தன் தம்பி விஸ்வநாதனுக்கு, தாழ்த்தப்பட்டோர் நலத்துறை இயக்குநர் லயோலா கல்லூரிக்கு அருகில் ஒரு கிரவுண்ட் மனையை ஒதுக்கீடு செய்து அரசாணையை அளித்த செய்தியறிந்த கக்கன் அந்த ஆணையை வாங்கிக் கிழித்தெறிந்தார்.

இவ்வளவு சிறப்புகளுக்குரிய கக்கன் 1962ஆம் ஆண்டு தேர்தலில், தனது சொந்தத் தொகுதியான மேலூரில் திமுக வேட்பாளரிடம் தோற்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன்பிறகு, தீவிர அரசியலிலிருந்து ஓய்வுபெற்றார். விடுதலைப்போரில் ஈடுபட்டதற்காக தனியாமங்கலத்தில் அவருக்குத் தரப்பட்ட நிலத்தை வினோபாவின் பூமிதான இயக்கத்துக்குத் தந்துவிட்ட அவர், வாடகை வீட்டில்தான் குடியிருந்தார். சாமானிய மக்களுடன் அவர்களில் ஒருவராக பேருந்தில் பயணித்தார்.

மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சாதாரண வகுப்பில் அவர் சிகிச்சை பெற்றபோது, மதுரை முத்துவை நலம் விசாரிக்கவந்த முதல்வர் எம்.ஜி.ஆர், காளிமுத்துவின் மூலம் செய்தியறிந்து கக்கனை போய்ப்பார்த்தவர் அதிர்ந்துபோனார். உடம்பில் ஒரு துண்டை மட்டும் போர்த்திக்கொண்டு, முக்கால் நிர்வாணநிலையில் இருந்த கக்கனைக் கண்டு கலங்கி நின்ற எம்.ஜி.ஆர். சிறப்பு வார்டுக்கு மாற்ற உத்தரவிட்டபோது, ‘வேண்டாம்’ என்று மறுத்துவிட்டார். ‘உங்களுக்கு நான் என்ன உதவி செய்யவேண்டும்’ என்று கேட்ட எம்.ஜி.ஆரிடம், ‘நீங்கள் பார்க்க வந்ததே மகிழ்ச்சி’ என்று கைகூப்பினார் கக்கன். நினைவு திரும்பாமல், யாருமே கண்டுகொள்ள ஆளில்லாமல் 23, டிசம்பர், 1981 அன்று மரணமடைந்தார்.

கல்லை வெட்டி, மணலைக் கடத்தி, நிலத்தை வளைத்து, மக்கள் பணத்தைச் சுரண்டிவாழ்கிற எத்தனையோ ஊழல் தலைவர்களின் பெயர்கள் குற்றப்பத்திரிகைகளில் இருக்க… ‘குறை சொல்லமுடியாத மனிதர்’ என்று தமிழக அரசியல் வரலாற்றின் கல்வெட்டில், காலத்துக்கும் அழியாதபடி பொறிக்கப்பட்டிருக்கிறது கக்கனின் பெயர்!’ என்று கண்கள் பனிக்க பகிர்ந்துகொண்டார்.

– தொகுப்பு: சே.த.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *