எழும்பூர் ரயில் நிலையத்தில் அவசர சிகிச்சை மையம்!

public

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் வயதானவர்களுக்கு 10 ரூபாயில் பேட்டரி கார் வசதியும், பயணிகளுக்கு உதவும் வகையில் அவசர சிகிச்சை உதவி மையமும் தொடங்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.

சென்னை எழும்பூரில் உள்ள ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள் மேம்படுத்தப்பட்டுவருகின்றன. பொதுமக்களுக்கு சுத்தமான குடிநீர், பயணிகள் இருக்கைகள், வை-பை மற்றும் நகரும் படிக்கட்டு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மேலும் வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் நடைமேடைக்குச் செல்ல வசதியாக பேட்டரி கார் வசதியும் உள்ளது.

ஏற்கனவே இந்த ரயில் நிலையத்தில் 2 பேட்டரி கார்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்ட நிலையில், மேலும் 5 பேட்டரி கார்கள் வழங்கப்பட்டுள்ளன. இதன் அடிப்படையில் ஒவ்வொரு நடைமேடைக்கும் ஒரு பேட்டரி கார் வீதம் பயன்படுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பேட்டரி காரைப் பயன்படுத்த விரும்புபவர்கள் அதற்கான கட்டணம் ரூ.10 செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும்.

இதேபோல பயணிகளுக்கு உதவும் வகையில் அவசர சிகிச்சை உதவி மையம் ஒன்றும் இந்த ரயில் நிலையத்தில் திறக்கப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் செயல்படும் இந்த மையம் அப்பல்லோ மருத்துவமனை சார்பில் தொடங்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில், ரயில் பயணத்தின்போது உடல்நலக்குறைவு ஏற்படுதல் மற்றும் விபத்து உள்ளிட்ட பல்வேறு அவசர சிகிச்சைக்கான மருத்துவ உதவிகள் அளிக்கப்படும்.

மேலும் 4ஆவது நடைமேடையில் அமைந்துள்ள சிகிச்சை மையத்தில் மருத்துவர், செவிலியர் ஆகியோர் தயார் நிலையில் இருப்பதோடு, அவசர சிகிச்சைக்கான உபகரணங்களும் தயார் நிலையில் இருக்கும். சென்ட்ரல் ரயில் நிலையத்தில், 24 மணிநேர மருத்துவ சிகிச்சை மையம் இருப்பது போல தற்போது எழும்பூர் நிலையத்திலும் தொடங்கப்பட்டுள்ளது.

எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளின் எண்ணிக்கையும், ரயில் சேவையும் அதிகரித்துள்ளதால் மருத்துவ வசதி அவசியமாகக் கருதப்பட்டு, இந்தச் சிகிச்சை மையம் செயல்பாட்டிற்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.�,

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *