?இன்று உலக தவளைகள் தினம்

public

வளை – வளமான இயற்கைச்சூழலின் குறியீடு

இப்பூவுலகில் வாழும் எல்லா உயிரினங்களும் வலைப்பின்னல் போல, ஏதோ ஒருவகையில் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றன. இதுவே இயற்கைச் சூழலமைப்பு. கடல், கடற்கரை, சதுப்புநிலம், ஆறு, குளம், ஏரி, வனம், மலை, பள்ளத்தாக்கு, சமவெளி, பாலைவனம் போன்ற இயற்கை வாழ்விடங்கள் அனைத்தும் அதற்கென ஒரு தனித்தன்மை வாய்ந்த சூழலமைப்பைக் கொண்டிருக்கின்றன. ஒவ்வொரு வாழ்விடத்தின் சூழலமைப்பையும் அங்கிருக்கும் தாவரங்கள், பூச்சிகள், இருவாழ்விகள் ( Amphibians ), ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள் என எண்ணற்ற உயிரினங்கள் ஆரோக்கியமான நிலையில் வைத்திருக்க உதவுகின்றன.

இயற்கைச் சூழலமைப்பு சமநிலையில் இருந்தால்தான் எல்லா உயிர்களும் எந்த பாதிப்புமின்றி வாழ முடியும். ஒவ்வொரு வாழ்விடத்தின் நிலையையும் அங்கு வாழும் சில உயிரினங்களின் மூலம் தெரிந்துகொள்ள முடியும். மீன், தவளை, நண்டு போன்ற சில உயிரினங்கள் அவை வாழும் இடத்தைப் பற்றிய உண்மை நிலையை நமக்கு வெளிக்காட்டுகின்றன.

யானை, புலி, சிறுத்தை போன்ற பெரிய பாலூட்டிகள், இயற்கையாக காடுகளில் ஏற்படும் வறட்சி, காட்டுத் தீ போன்ற நிகழ்வுகளாலும், மனித செயல்களால் ஏற்படும் காடழிப்பு போன்றவற்றாலும், தான் வாழும் இடங்களிலிருந்து மனித நடமாட்டமில்லாத பாதுகாப்பான வேறு இடங்களுக்கு இடம்பெயர்ந்து விடுகின்றன. அப்படி இடம்பெயர முடியாமல் வழிதவறி ஊருக்குள் வந்துவிட்டால் மனித – வனவிலங்கு மோதல் நிலை ஏற்பட்டுவிடுகிறது. மற்ற சில சிறிய உயிரினங்கள் அப்படி இடம்பெயர முடியாமலும், அங்கு உயிர்வாழ முடியாமலும் அழிந்துவிடுகின்றன. உதாரணத்துக்கு, மிகச்சிறிய உயிரினங்களான நத்தை, அட்டை, தவளை, நண்டு, மீன் போன்றவற்றால் இடம்பெயர்ந்து செல்வது சாத்தியமற்றது. மனித செயல்களால் இயற்கையான வாழ்விடங்கள் அழிக்கப்படும்போது இதுபோன்ற சிறிய உயிரினங்களும் அழிந்துவிடும்.

ஓர் இடத்தில் இயற்கையாகவோ அல்லது மனித செயல்களாலோ ஏற்படும் மாற்றங்களால் முதலில் பாதிக்கப்படும் சில உயிரினங்கள், மாறிவரும் அந்த வாழ்விடத்தின் நிலையை சில அறிகுறிகளின் மூலம் வெளிக்காட்டும். அத்தகைய உயிரினங்கள் ” சூழலியல் வெளிக்காட்டிகள் ” ( Ecological Indicators) என்றழைக்கப்படுகின்றன.

அவற்றில் தவளைகள் மிக முக்கியமானவை. உலகிலுள்ள ஏழு கண்டங்களில், அண்டார்டிகா தவிர மீதமுள்ள ஆறு கண்டங்களிலும் தவளைகள் வாழ்கின்றன.

தவளைகள் நீரிலும் நிலத்திலும் வாழும் இருவாழ்விகள் (Amphibians). அவை பெரும்பாலும் வாழ்விடம், உணவு, இனப்பெருக்கம் போன்றவற்றுக்கு நீர்நிலைகளையே பெரிதும் நம்பியுள்ளன. நீர்நிலைகளற்ற வறண்ட பாலைவனப் பகுதிகளிலும், பனிப்பிரதேசங்களிலும்கூட சில தவளையினங்கள் உயிர் வாழ்கின்றன. பூமத்திய ரேகையை ( Equator ) ஒட்டியுள்ள வெப்பமண்டலப் பகுதிகளான ( Tropical regions ) தெற்காசியா, தென்கிழக்கு ஆசியா, ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்கா போன்ற பகுதிகளில்தான் உலகின் 80% தவளையினங்கள் வாழ்கின்றன. மீதமுள்ளவை வட அமெரிக்கா, ஐரோப்பா, வட மற்றும் மத்திய ஆசியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற மிதமண்டலப் பகுதிகளில் ( Temperate regions ) வாழ்கின்றன.

நீர்நிலைகளில், ஈரப்பதமிக்க இடங்களில், மண்ணுக்கடியில், தாவர இலைகளில், மரப்பட்டைகளில், மரப்பொந்துகளில், பாறைகளில், பாலைவனத்தில், பனிமலைகளில் என்று எண்ணற்ற வாழ்விடங்களில் தவளைகள் வாழ்கின்றன. யானை, புலி போல தவளைகளுக்கு பரந்துவிரிந்த பெரிய வாழ்விடங்கள் தேவையில்லை. தவளைகள் மிகச்சிறிய வாழ்விடங்களில் வாழ்பவை. ஒரேயொரு பாறையிலோ, ஒரு மரத்திலோ, ஒரு பொந்திலோ, ஒரு கிணற்றிலோ கூட ஒரு தவளை தன் மொத்த வாழ்நாளையும் வாழ்ந்து முடித்துவிடும். உலகிலுள்ள பெரும்பாலான தவளைகளின் வாழ்விடங்கள் மிகச்சிறிய இடங்களே.

இப்படியான மிகச்சிறிய வாழ்விடங்களில் வாழ்ந்து, இனப்பெருக்கம் செய்து, முட்டையிட்டு, தலைப்பிரட்டைகள் வெளிவந்து, வளர்ந்து, மீண்டும் அதே வாழ்விடத்தில் வாழும் மிகவும் வித்தியாசமான வாழ்க்கை முறையைக் கொண்டவை தவளைகள். தவளைகளின் இனப்பெருக்க முறையும் மிக வித்தியாசமானது. பாலூட்டிகளின் இனப்பெருக்கம் உள்கருவுறுதல் ( Internal Fertilisation ) மூலம் நடைபெறுகிறது. ஆனால் தவளைகளின் இனப்பெருக்கம் வெளிக்கருவுறுதல் ( External Fertilisation ) மூலம் நடக்கிறது.

தவளைகளில் ஆணைவிட பெண்ணே அளவில் பெரியதாக இருக்கும். பெண் தவளையின் உடலில் முட்டைகள் முழு வளர்ச்சியடைந்ததும், அது முட்டையிடுவதற்கான ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேர்வு செய்யும். பிறகு, அந்த இடத்தில் இருந்துகொண்டு இனச்சேர்க்கைக்காக ஆண் தவளையை அழைக்கும். தவளைகளின் இனப்பெருக்கம் பெரும்பாலும் மழைக்காலங்களில்தான் நடைபெறும். அப்பொழுதுதான் முட்டைகளிலிருந்து வெளிவரும் தலைப்பிரட்டைகளுக்கு போதிய உணவும், வாழ்விடமும் கிடைக்கும். மழைக்காலங்களில் நாம் கேட்கும் தவளைகளின் சத்தம் பெரும்பாலும் இனச்சேர்க்கைக்காக அவை எழுப்பும் ஓசைகளே.

பெண் தவளையின் ஓசையால் கவரப்பட்ட ஆண் தவளை, அந்தப் பெண் இருக்கும் இடத்துக்கு வந்து, அதன் மீது ஏறி ஒட்டிக்கொள்ளும். இந்த நிகழ்வுக்குப்பின் பெண் தவளை நூற்றுக்கணக்கான முட்டைகளை இடும். முட்டைகள் வெளிவந்ததும், பெண்ணின் மீது ஒட்டியிருக்கும் ஆண் தவளை அந்த முட்டைகளின்மேல் தன் விந்தணுக்களை வெளிவிடும். இதன்மூலம் வெளிக்கருவுறுதல் நடைபெறும். அதற்குப்பின் இனப்பெருக்கத்துக்கான விந்தணுக்களுடன் இருக்கும் ஆண், வேறு பெண்ணை தேடிச் சென்றுவிடும். சில தவளையினங்களில் பெண் தவளை முட்டைகளுக்குப் பாதுகாப்பாக அதன் அருகிலேயே இருக்கும். கருவுற்ற முட்டைகளிலிருந்து வளர்ந்து, வெளிவரும் தலைப்பிரட்டைகள் அருகிலுள்ள நீர்நிலைகளைச் சென்றடையும். நீர்நிலைகளில் இருக்கும் நுண்ணுயிர்களையும், நுண்தாவரங்களையும், கொசுவின் முட்டைப்புழுக்களையும் ( Mosquito Larvae ) உண்டு வளரும் தலைப்பிரட்டைகள், முழுத் தவளையாக உருமாற்றம் பெற்றதும் நீர்நிலையை விட்டு வெளிவரும்.

உலகிலுள்ள பெரும்பாலான தவளைகளின் வாழ்வு முறை இதுதான். எல்லா தவளையினங்களும் முட்டையிடுபவையே. பெரும்பாலும் முட்டைகளிலிருந்து தலைப்பிரட்டைகள் வெளிவந்தாலும், சில தவளையினங்களில் கால்கள் வளர்ந்த நிலையில், முழுத் தவளைகள் வெளிவருகின்றன. எல்லா தவளையினங்களும் நீர்நிலைகளில் முட்டையிடுவதில்லை. ஈரப்பதமிக்க பாறைகளில், மண்ணுக்கடியில், இலைதழைகளுக்கடியில், தாவரங்களில் என ஒவ்வொரு தவளையினமும் தன் வாழ்விடத்துக்கு ஏற்றார்போல் முட்டையிடும் இடங்களைத் தேர்வு செய்து கொள்கின்றன.

அடர்ந்த மழைக்காடுகளில் இருக்கும் பெருமரங்களில் வாழும் சில தவளையினங்கள் மிகவும் வித்தியாசமான முட்டையிடும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றன. மரப்பட்டைகளிலும், காட்டின் தரைப்பகுதியிலும் முட்டையிடும் அந்தத் தவளைகள், தலைப்பிரட்டைகள் வெளிவந்தவுடன், அவற்றை தன் முதுகில் சுமந்துகொண்டு மரங்களின் உச்சிக்குச் செல்லும். மர உச்சியில் இருக்கும் பெரிய இலைகளிலும், மரக்கிளைகளில் இருக்கும் ஓட்டைகளிலும் தேங்கியிருக்கும் மழை நீரில் அவை அந்தத் தலைப்பிரட்டைகளை விட்டுவிடும். தலைப்பிரட்டைகளின் உணவுத் தேவையை சரிகட்டும்விதமாக தாய் தவளை, தன் வயிற்றில் மீதமிருக்கும் சில நூறு முட்டைகளை அந்தத் தண்ணீரில் விட்டுவிடும். இப்படி தாயின் உதவியுடன் வளரும் தலைப்பிரட்டைகள், பறவைகள், பாம்புகள் போன்றவற்றின் தாக்குதலிலிருந்து தப்பித்து பாதுகாப்பாக வளரும் வாய்ப்புகள் மிக அதிகம்.

தவளைகளின் மற்றுமொரு தனிச்சிறப்பு அவற்றின் சுவாசமுறை. நான்கு வகையான சுவாசமுறைகளைக் கொண்டிருக்கின்றன தவளைகள். நீரில் வாழும் தலைப்பிரட்டைகள், மீன்களைப் போல் செவுள்கள் ( Gills ) மூலம் சுவாசிக்கின்றன. முழு வளர்ச்சியடைந்தவை தோல்களின் மூலமும், மூக்கு மற்றும் வாய் மூலமும் சுவாசிக்கின்றன. தோல்களின் மூலம் சுவாசிப்பதே தவளைகளின் பிரதான சுவாசமுறை. நீரிலும், காற்றிலும் இருக்கும் பிராணவாயுவை ( Oxygen ) தோல்களின் மூலம் உறிஞ்சி உள்ளிழுத்துக் கொள்கின்றன. தோல் வழுவழுப்பாய் இருப்பவை Frogs எனவும் சொரசொரப்பாய் இருப்பவை Toads எனவும் அழைக்கப்படுகின்றன.

இயற்கைச் சூழலமைப்பில் தவளைகள் மிக முக்கிய இடத்தில் இருக்கின்றன. தவளைகள் பெரும்பாலும் பூச்சிகளை உணவாகக் உட்கொள்பவை. பூச்சிகளின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதில் தவளைகளின் பங்கு மிக முக்கியமானது. தவளைகளின் உணவில் கொசுக்கள் ஏராளம். கொசுக்களின் பெருக்கத்தையும் அவை கட்டுப்பாட்டில் வைத்திருக்கின்றன. மேலும் கொசு முட்டைகளையும், முட்டைப்புழுக்களையும் தலைப்பிரட்டைகள் உட்கொள்வதால், கொசுக்களின் பெருக்கம் ஆரம்பத்திலேயே கட்டுப்படுத்தப்படுகிறது.

உணவுச்சங்கிலியில் தவளைகளையும், அவற்றின் தலைப்பிரட்டைகளையும் உண்ணும் எண்ணற்ற உயிரினங்கள் இருக்கின்றன. நீரில் வாழும் தலைப்பிரட்டைகளை மீன்குஞ்சுகளும், மீன்களும் உணவாக உட்கொள்கின்றன. கொக்கு, நாரை, வாத்து, மீன்கொத்தி போன்ற நீர்ப்பறவைகளுக்கும், கழுகு, பருந்து, ஆந்தை போன்ற வேட்டையாடி உண்ணும் ஊனுண்ணிப் பறவைகளுக்கும், பாம்பு, எலி, வவ்வால் போன்ற ஊர்வன மற்றும் பாலூட்டி விலங்குகளுக்கும் தவளைகள் உணவாகின்றன. இப்படி பூச்சியினங்களின் எண்ணிக்கையை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதுடன், பல உயிரினங்களுக்கு உணவாகவும் இருக்கின்றன தவளைகள். இப்படி இயற்கைச் சூழலமைப்பின் மிக முக்கிய இடத்தில் இருக்கும் தவளைகள் அழிந்தால், அது ஒட்டிமொத்த உணவுச் சங்கிலியையும் பாதிக்கும்.

ஒரு நீர்நிலையிலோ, வனத்திலோ, நம் வீட்டுத் தோட்டத்திலோ தவளைகள் இருந்தால் அது ஒரு ஆரோக்கியமான இயற்கைச்சூழலின் வெளிப்பாடு. அப்படி அவை அங்கிருந்து அழிந்துபோனால், இயற்கைச் சூழலமைப்பை பாதிக்கும் ஏதோ ஒன்று அங்கு நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்று பொருள். தவளைகள் இருந்தால் அந்த இடத்தில் கொசுக்கள் பெருகிவிடாமல் கட்டுப்பாட்டில் இருக்கும்.

தவளைகளின் அழிவு கொசுக்களின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்க வழிவகுத்துவிடும். இப்பொழுது புரிகிறதா? கொசுக்களின் எண்ணிக்கை ஏன் இப்படி கட்டுக்கடங்காமல் சென்று கொண்டிருக்கிறது என்று?

தவளைகள் நம் கண்முன்னே அழிந்துகொண்டிருக்கும் உயிரினம். அவற்றுக்கு அப்படி என்னதான் பிரச்னை?

தவளைகள் உயிர்வாழ நீர்நிலைகளையே பெரிதும் நம்பியிருக்கின்றன. ஆனால் மனிதர்களாகிய நாமோ வளர்ச்சி என்ற பெயரில் முதலில் சூறையாடுவது அந்த நீர்நிலைகளைத்தான். அவற்றின் வாழ்விடங்கள் அழிக்கப்பட்டு மூடப்படுவதால், அவையும் அங்கிருந்து அழிந்துவிடுகின்றன. மற்றொரு பெரிய பிரச்னை, அன்றாடம் நீர்நிலைகளில் கலக்கும் தொழிற்சாலைக் கழிவுகள். இப்படி நம்மூரிலுள்ள ஓடைகள், ஆறுகள், கண்மாய்கள், ஏரிகள், குளங்கள், குட்டைகள் என அனைத்தையும் பாழாக்கிவிட்டோம். நீர்நிலைகளின் இயற்கைச்சூழல் கெட்டு, மிகவும் ஆரோக்கியமற்ற நிலையில் அவை இருப்பதற்கான ஓர் வெளிப்பாடுதான் தவளைகளின் அழிவு.

தவளைகள் தோலின் வழியாக சுவாசிப்பவை. அவற்றின் தோல் மிகவும் மென்மையானதாகவும், சுற்றுப்புறத்தில் ஏற்படும் மாற்றங்களை தாங்கும் திறனற்றவையாகவும் இருக்கும். தான் வாழும் பகுதியில் இருக்கும் காற்றிலும், நீரிலும், நிலத்திலும் மனித செயல்களால் ஏற்படும் வேதியியல் மாற்றங்களை அவற்றால் தாங்கிக்கொள்ள முடிவதில்லை. நீர்நிலைகளில் கலக்கும் தொழிற்சாலைக் கழிவுகளின் நச்சுத்தன்மை, தவளைகளின் தோல் வழியாக உடலுக்குள் சென்று அவற்றின் சுவாச மண்டலத்தைப் பாதிப்பதால் அவை செத்துவிடுகின்றன. மிகச்சிறிய வாழ்விடங்களில் வாழ்வதால் அவற்றால் வேறு இடத்திற்கும் இடம்பெயர முடியாது. அதனால் அவை அங்கிருந்து அழிவது சாத்தியமாகிவிடுகிறது. தவளைகளின் அழிவுக்கு முதன்மையான காரணம் மனித செயல்பாடுகள்தான்.

உதாரணமாக, நமது மேற்குத் தொடர்ச்சி மலைகளின் உச்சியில் புல்வெளிகளுக்கு நடுவே பலகோடி ஆண்டுகளாக பல குட்டி சோலைக்காடுகள் ( Shola Forest Pockets ) இருக்கின்றன. அச்சோலைக் காடுகள் இயற்கையாகவே ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிந்து காணப்படுகின்றன. இப்படி அமைந்திருக்கும் சோலைக்காடுகளில் நூற்றுக்கணக்கான தவளையினங்கள் வாழ்கின்றன. உலகில் வேறெங்கும் காணமுடியாத பல ஓரிடவாழ் தவளையினங்கள் ( Endemic Frogs ) மேற்குத்தொடர்ச்சி மலைகளில் வாழ்கின்றன. இம்மலைகளில் காணப்படும் தவளையினங்களில் கிட்டத்தட்ட 87% ஓரிடவாழ்விகள் ( Endemics ).

புதிதாக மலைகளில் சாலை அமைத்தல், நீர்த்தேக்கங்கள் கட்டுதல், தேயிலை மற்றும் காபி தோட்டங்கள் உருவாக்குதல் போன்ற செயல்களால் அந்தப் பழமையான சோலைக்காடுகள் அழியும் நிலை ஏற்பட்டால், அதில் வாழும் பல ஓரிடவாழ் தவளையினங்களும் அழிவது சாத்தியமாகிவிடும்.

அதுசரி, தவளைகள் அழிந்தால் நமக்கென்ன?

தவளைகள் உணவுச்சங்கிலியில் மிக முக்கிய இடத்தில் இருப்பதால், அவை ஒரு இடத்திலிருந்து முற்றிலும் அழிந்துபோனால் ஒட்டுமொத்த இயற்கைச் சூழலமைப்பும் பாதிப்புக்குள்ளாகும். அது மனிதர்களையும் பாதிக்கும். மேலும் மேற்குத்தொடர்ச்சி மலைகளின் சோலைக்காடுகளில் இதுவரை கண்டுபிடிக்கப்படாத பல தவளையினங்கள் இருக்கலாம். உலகம் முழுவதையும் அச்சுறுத்தும் எய்ட்ஸ், புற்றுநோய், சிகா வைரஸ், காலரா, மலேரியா போன்ற உயிர்க்கொல்லி நோய்களுக்கான மருந்து அங்கிருக்கும் இன்னும் கண்டுபிடிக்கப்படாத சில தவளைகளில் இருக்கலாம். அப்படிப்பட்ட தவளைகள் அழிந்துவிட்டால் இழப்பு யாருக்கு ? நமக்குத்தான்.

சமீபத்தில், இந்தியாவில் நடைபெற்ற ஒரு அறிவியல் ஆய்வில், கேரளக் காடுகளில் காணப்படும் சில தவளைகளிடம் வைரஸ் கிருமியால் உண்டாகும் காய்ச்சலை ( flu ) முற்றிலும் குணமாக்கும் மருந்து இருப்பதாகக் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. அந்தத் தவளைகளின் மேல்தோலில் சுரக்கும் ஒருவகை திரவத்தில் வைரஸ், பாக்டீரியா போன்ற கிருமிகளால் ஏற்படும் காய்ச்சல்களை குணப்படுத்தும் ஆற்றல் இருப்பதாக கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். இது தொடர்பான மேலும் பல ஆராய்ச்சிகள் நடந்துகொண்டிருக்கின்றன.

அதேபோல், மத்திய அமெரிக்க மழைக்காடுகளிலும், தென் அமெரிக்க அமேசான் காடுகளிலும் காணப்படும் பல ஓரிடவாழ் தவளைகளில், பல உயிர்க்கொல்லி நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் இருப்பதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள் ஆய்வாளர்கள். அக்காடுகளில் வாழும் பிரகாசமான நிறத்தில் ( bright coloured ) இருக்கும் தவளைகளில் தான் பல நோய்களை அழிக்கும் மருத்துவ குணங்கள் இருப்பதாக சொல்கின்றனர் ஆய்வாளர்கள். இப்படி பிரகாசமான நிறத்தில் இருக்கும் தவளைகள் மேல்தோலில் கொடிய விஷத்தைக் கொண்டிருக்கின்றன. அங்கு வாழும் பழங்குடியினர் இந்தத் தவளைகளின் தோலிலுள்ள விஷத்தை ஈட்டியிலும், அம்பிலும் தடவி வேட்டையாடுகிறார்கள். அத்தகைய விஷத்திலிருந்துதான் பல உயிர்க்கொல்லி நோய்களுக்கான மருந்துகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.

இப்படிப்பட்ட பல மருத்துவக் குணங்கள் இருக்கும் தவளைகள் அழிந்தால் அது வெறும் தவளைகளின் அழிவு மட்டுமல்ல.

தவளைகளின் அழிவு நமது அழிவின் ஆரம்பம்.

1970 இலிருந்து இன்றுவரை, உலகம் முழுவதும் கிட்டத்தட்ட 200 தவளையினங்கள் முற்றிலும் அழிந்துவிட்டன என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதே நிலை தொடர்ந்தால் இந்த நூற்றாண்டு முடிவதற்குள் இன்னும் 100 தவளையினங்கள் அழிந்துவிடும் என்னும் அதிர்ச்சியான தகவலை சொல்கின்றனர் அறிஞர்கள். மனித செயல்களையும் தாண்டி பல காரணங்களால் தவளைகள் அழிந்துகொண்டிருக்கின்றன. உலக வெப்பமயமாதல், காலநிலை மாற்றம், வாழ்விட அழிப்பு, பூஞ்சைகளின் தாக்குதல், இரசாயன பூச்சிக்கொல்லிகளின் அளவற்ற பயன்பாடு, மண்ணுக்கு அன்னியமான மீன்களை ஆறுகளிலும், குளங்களிலும் வளர்க்கும் முறை, மனித செயல்களால் தவளைகளை உண்ணும் மண்ணுக்கு அன்னியமான பாம்புகள், கீரிப்பிள்ளைகள், எலிகள், பறவைகள், பூனைகள் போன்ற வேட்டை விலங்குகளின் பரவல் என பல்வேறுபட்ட காரணங்களால் தவளைகள் மிக வேகமாக அழிந்துகொண்டிருக்கின்றன. இன்று உலகிலேயே மிக வேகமாக அழியும் உயிரினங்களாக தவளைகள் இருக்கின்றன என்கின்றனர் ஆய்வாளர்கள்.

இந்தப் பேரழிவை எப்படித் தடுப்பது என்று புரியாமல், இனி இந்த அழிவைத் தடுத்து நிறுத்துவது மிகவும் கடினம் என்கிறார்கள் விஞ்ஞானிகள். உலகளவில் தவளைகளின் பேரழிவு irreparable என்று சொல்லப்படும் இனி சரிசெய்வது மிகமிகக் கடினம் எனும் நிலைக்குச் சென்றுவிட்டதாகக் கூறுகின்றனர் விஞ்ஞானிகள்.

வளர்ச்சி எனும் பெயரில் எந்தத் தொலைநோக்குப் பார்வையுமின்றி இயற்கை வாழ்விடங்களையும், நீர்நிலைகளையும் அழிப்பது ஒரு தற்கொலை முயற்சிதான். இயற்கையைப் பாதுகாப்பதென்பது அதன் நன்மைக்காக அல்ல. இயற்கைச்சூழலமைப்பு ஆரோக்கியமான நிலையில் இருந்தால் நன்மைகள் நமக்குத்தான்.

இயற்கையின் சிறப்பை உணர்ந்திருந்த திருவள்ளுவர், இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன்பே இயற்கைதான் நம்மை அரண்போல் காத்து நிற்கிறது என்று தன் திருக்குறள் மூலம் சொல்லியிருக்கிறார்.

‘மணிநீரும் மண்ணும் மலையும் அணிநிழற்

காடும் உடைய தரண்’

-சக்தி

புகைப்படங்கள் : நன்றி திரு.கல்யாண் வர்மா, திரு.சந்தீப் தாஸ் மற்றும் கூகுள் இமேஜ்.

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *