குடும்பத்தினர் பெயரில் சொத்துக்களை குவித்த தங்கமணி

politics

முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது நண்பர்கள், பினாமிகள், தொழில் பார்ட்னர்கள் ஆகியோரது வீடு அலுவலகங்களில் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி வருகின்றனர்.

கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் மின்சாரம் மற்றும் கலால் வரித் துறை அமைச்சராக இருந்தவர் பி. தங்கமணி. தற்போது குமாரப்பாளையம் எம்.எல்.ஏ.வாக உள்ளார். இவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி, வருமானத்துக்கு அதிகமாக தனது பெயரிலும், தனது மனைவி சாந்தி மற்றும் மகன் தரணிதரன் பெயரிலும் சொத்து சேர்த்ததாக நாமக்கல் லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.

லஞ்ச ஒழிப்பு தடுப்புச் சட்டம் 1988 மற்றும் ஐபிசி பிரிவு 13(2) r/w 13(1)(2)ன் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 23.05.2016 முதல் 06.05.2021 வரை முறைகேடுகளில் ஈடுபட்டு சொத்து சேர்த்துள்ளார் என்று லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்துள்ளது.

2016ஆம் ஆண்டு தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்யும்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி மற்றும் அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் பெயரில் ரூ.1,01,86,017 மதிப்பிலான சொத்துகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், 2021ஆம் ஆண்டு தேர்தல் வேட்புமனுத் தாக்கலில் இணைத்து காட்டப்பட்ட சொத்துக்களின் மதிப்பு 8,47,66,318 ரூபாயாக உள்ளது. இதில் தங்கமணி, மனைவி சாந்தி, மகன் தரணிதரன் ஆகிய மூவரும் சட்டபூர்வமாக சம்பாதித்த தொகை ரூ. 5,24,86,617ஆக உள்ளது.

2016 – 2020ஆம் ஆண்டு வரை செலவு உள்ளிட்டவற்றை கணக்கிட்டு பார்க்கும் போது 2,64,28,335 ரூபாய் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயத்தில் 23.05.2016 முதல் 31.03.2020 வரையிலான காலக்கட்டத்தில் தங்கமணி, அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோரது பெயரில் மொத்தமாக ரூ.7,45,80,301 மதிப்பிலான சொத்துகள் வாங்கப்பட்டுள்ளன. இதே, காலக்கட்டத்தில் அவர்களது சேமிப்பு பணத்தை மதிப்பிடுகையில் 2,60,08,282 ரூபாய் தான் உள்ளது. அதன்படி, சேமிப்புகள், செலவுகள் வைத்து பார்க்கும் போது 4,85,72,019 ரூபாய் மதிப்பிலான சொத்துகள் குவித்திருப்பது தெரியவருகிறது என்று எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தங்கமணியின் மருமகன் எஸ்.தினேஷ் குமார், MANTARO நெட்வொர்க் பிரைவேட் லிமிடெட்டின் இயக்குநர்களில் ஒருவராகவும் (நியூஸ் ஜே சேனல்), மெட்ராஸ் ரோட் லைன் நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவராகவும், ஜெயஸ்ரீ செராமிக்ஸ், ஸ்ரீப்ளை அண்ட் வெனீர்ஸ், ஏஜிஎஸ் டிரான்ஸ்மோவர், ஸ்மார்ட் டிரேட் லிங்க்ஸ், ஸ்மார்ட் டெக், ஸ்ரீ ப்ளைவுட்ஸ் மற்றும் இன்ஃப்ரா ப்ளூ மெட்டல் நிறுவனங்களின் பார்ட்னராகவும் உள்ளார்.

தினேஷ் குமார் தந்தை சுப்பிரமணியம், எம்.ஆர்.எல் லாஜிஸ்டிக்ஸ் என்ற பெயரில் நூற்றுக்கணக்கான லாரிகள் வைத்துள்ளார். தினேஷ் குமார் மனைவி லதாஸ்ரீ(தங்கமணி மகள்), ஜெய ஸ்ரீ நிறுவனத்தின் உரிமையாளராகவும், ஜெயஸ்ரீ பில்ட் புரோ நிறுவனத்தின் பாட்னராகவும் உள்ளார்.

தங்கமணி மகன் தரணிதரன் பெயரில் முருகன் எர்த் மூவர்ஸ் என்ற நிறுவனம் இயங்கி வருவதாக கணக்கு காட்டியிருந்த நிலையில், காகித அளவில் மட்டுமே அப்படி ஒரு நிறுவனம் உள்ளது. அப்படி ஒரு நிறுவனம் இயங்கி வருவதாக கணக்கு காட்டி , முறைகேடாக வருமானத்தை மறைத்துள்ளனர். கிரிப்டோகரன்சியில் தங்கமணி பெருமளவில் முதலீடு செய்துள்ளார் என்றும் எப்.ஐ.ஆரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தங்கமணிக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் மட்டும் 14 இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் கோவிந்தம்பாளையத்தில் உள்ள தங்கமணி வீட்டில், 18 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

இதனால் 100க்கும் மேற்பட்ட அதிமுகவினர், தங்கமணி வீட்டின் முன்பு குவிந்து திமுக மற்றும் போலீசாரை கண்டித்து கோஷம் எழுப்பி வருகின்றனர். மேலும்,சேலம், ஈரோடு, கரூர் என அவருக்குச் சொந்தமாக 69 இடங்களில் சோதனை நடந்து வருகிறது.

**-பிரியா**

�,”

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *