இ-பாஸ் நடைமுறையை ரத்துசெய்ய வேண்டுமென உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக இளைஞரணி அலுவலகமான அன்பகத்தில் இன்று (ஆகஸ்ட் 26) நடைபெற்ற நிகழ்ச்சியில் புதிய உறுப்பினர்களுக்கு இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உறுப்பினர் அட்டையை வழங்கினார்.
அப்போது, திராவிட இயக்கத் தலைவர்களாக அண்ணா, கலைஞர் போன்றோரின் சாதனைகளைச் சொல்லத் தவறிவிட்டோமோ என்ற குறை இருப்பதாக தெரிவித்த உதயநிதி, அந்தக் குறையை நிவர்த்தி செய்ய நிர்வாகிகள் பாடுபட வேண்டும் என வலியுறுத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி, “இளைஞரணியில் புதிதாக சேர்ந்தவர்களுக்கு உறுப்பினர் அட்டை வழங்கும் பணியினை மீண்டும் துவங்கியுள்ளோம். சென்னை தெற்கு மாவட்ட திமுக 1.20 லட்சம் உறுப்பினர்களை இளைஞரணியில் இணைத்துள்ளது. உறுப்பினர் சேர்ப்பு பணி தொடர்ந்து நடைபெறும்” எனத் தெரிவித்தார்.
தேர்தல் பணிகளை துவங்கிவிட்டீர்களா என்ற கேள்விக்கு, “திமுக தேர்தல் பணிகளை தொடங்கக் கூடாது என்பதற்காகத்தான் இ-பாஸ் முறையை நீடித்து வருகிறார். இதனால் மக்களை எங்களால் சந்திக்க முடியவில்லை. ஆகவேதான், இ-பாஸ் முறையை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கிறோம். இன்னும் 3 நாட்களில் அறிவிப்பார்கள் என நம்புகிறோம்” என்று உதயநிதி பதிலளித்தார்.
மேலும், “நீட் தேர்வை ஆரம்பத்தில் இருந்தே திமுக எதிர்த்து வருகிறது. கொரோனா காரணமாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டிய நிலை உள்ளது. இதற்கு சட்டமன்றத்தைக் கூட்டி அவசரத் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்.” என்று அவர் தெரிவித்தார்.
**எழில்**�,