போரைத் தொடங்கியது ரஷ்யா: அச்சத்தில் உக்ரைன் மக்கள்!

politics

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கத் தொடங்கிவிட்டது. ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் உக்ரைனில் ராணுவ நடவடிக்கையை அறிவித்துள்ளார். இதனால் உக்ரைனில் ரஷ்ய ராணுவம் பல்வேறு எல்லைகளிலிருந்தும் குண்டு மழையை பொழியத் தொடங்கிவிட்டது.

1991ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்து உக்ரைன் தனி நாடாக உருவானது. 2014ஆம் ஆண்டு உக்ரைனில் ஆட்சிக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்தது. அப்போது ரஷ்யாவுக்கு ஆதரவாக இருந்த உக்ரைன் அதிபர் விக்டர் யுனுகோவிச் பதவியிலிருந்து நீக்கப்பட்டார். அதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், உக்ரைனின் தெற்கு பகுதியில் உள்ள கிரீமிய தீபகற்பத்தைக் கைப்பற்றியது ரஷ்யா. அதோடு, கிழக்கு உக்ரைனில் கணிசமான பகுதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் பிரிவினைவாதிகளுக்கு ஆதரவளித்தது ரஷ்யா.

இந்தசூழலில் உக்ரைனை தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள ரஷ்யா முயன்று வருகிறது. ஆனால், உக்ரைன் தன்னை ஐரோப்பிய நாடாகவே காட்டிக்கொள்ள விரும்புகிறது. அதோடு அமெரிக்கா தலைமையிலான ஆர்மீனியா, ஆஸ்திரியா, அஜர்பைஜான், பெலாரஸ், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, பின்லாந்து, ஜார்ஜியா, அயர்லாந்து போன்ற நாடுகள் அடங்கிய நேட்டோவுடன் இணைய முயன்று வருகிறது உக்ரைன்.

இந்நிலையில் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ரஷ்யா தனது படைகளை உக்ரைன் எல்லையில் குவித்து வந்தது. கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக 1 லட்சத்துக்கும் அதிகமான ரஷ்ய ராணுவப் படைகள் உக்ரைன் எல்லையில் குவிக்கப்பட்டிருந்தன. உக்ரைன் மீது போர் தொடுக்கும் முடிவை ரஷ்யா கைவிட வேண்டும் என ஐ.நா. அமைப்பு தெரிவித்து இருந்தது.

எப்போது வேண்டுமானாலும் உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தலாம் என தினம்தோறும் உலக நாடுகள் மத்தியில் பதற்றம் நிலவிக் கொண்டிருக்கும் நிலையில், ரஷ்ய அதிபர் ராணுவ நடவடிக்கையை (Military Operation) தொடங்குமாறு அறிவித்துள்ளார்.

ரஷ்ய அரசு தொலைக்காட்சியில் தோன்றி பேசிய புதின், “உக்ரைனை “ஆக்கிரமிக்கும் திட்டங்கள் எதுவும் இல்லை. ரஷ்யாவை யாராவது ஆக்கிரமிக்க முயன்றால், மாஸ்கோ அதற்கு உடனடியாக பதிலளிக்கும். தனது நாட்டின் நடவடிக்கைகள், தற்காப்பு சார்ந்தது. இதில் மற்ற நாடுகள் தலையிட்டால் வரலாறு கண்டிராத விளைவுகளைச் சந்தித்த நேரிடும்” என்று எச்சரித்துள்ளார்.

புதினின் உத்தரவைத் தொடர்ந்து ரஷ்ய துருப்புகள் உக்ரைன் மீது குண்டு மழையைப் பொழிய தொடங்கிவிட்டது. ரஷ்ய படைகள், உக்ரைன் தலைநகர் கீவ்-வில் தனது தாக்குதலைத் தொடங்கி உள்ளது என்றும் கீவ்-வில் ஐந்து முதல் ஆறு குண்டுவெடிப்புகள் நடந்திருப்பதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கீவ்வில் சிஎன்என் ஊடக நிருபர் நேரலையில் பேசிக்கொண்டிருக்கும் போது அங்கு குண்டு வெடிப்பு சத்தம் கேட்டதால் பரபரப்பு நிலவியது.

உக்ரைனின் 2ஆவது பெரிய நகரமான கார்கியூ மற்றும் கிராமட்டஸ் ஆகிய பகுதிகளிலும் தாக்குதல் தொடங்கிவிட்டது.

இந்நிலையில், ரஷ்யாவுக்குப் பதிலடி தாக்குதலாக லுஹன்ஸ்க் பகுதியில் ரஷ்யாவின் 5 போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்தியாக உக்ரைன் ராணுவம் தகவல் தெரிவித்துள்ளது. மேலும், ரஷ்ய ஹெலிகாப்டர் ஒன்று வீழ்த்தப்பட்டுள்ளதாகவும் அதேநேரத்தில் நூற்றுக்கணக்கில் ராணுவ வீரர்கள் ரஷ்ய படையினரால் கொல்லப்பட்டுள்ளதாகவும் உக்ரைன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா -உக்ரைன் தாக்குதலால் அச்சமடைந்துள்ள கீவி மக்கள் அங்குள்ள அண்டர்கிரவுண்டு மெட்ரோ நிலையங்களுக்குச் சென்று அங்கு தஞ்சமடைவதாகவும் தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன.

உக்ரைனில் தற்போதைய சூழல் நிச்சயமற்றதாக உள்ளதால் அங்குள்ள இந்தியர்கள் அந்தந்த பகுதியிலேயே பாதுகாப்பாக இருக்குமாறும் கீவி விமான நிலையத்துக்குச் செல்ல வேண்டாம் என்றும் இந்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதுபோன்று இந்தியர்களை அழைக்க உக்ரைனுக்குச் சென்று ஏர் இந்தியா விமானம் வான் வழி தாக்குதல் நடத்தப்படலாம் என்ற அச்சத்தில் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இதனால் உக்ரைனில் இருக்கும் இந்தியர்களை மீட்கும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ரஷ்யாவின் நடவடிக்கைகளுக்குக் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “உக்ரைனில் ஏற்படும் மரணங்களுக்கும், அழிவுக்கும் ரஷ்யா தான் பொறுப்பு” என்று கூறியுள்ளார்.

**-பிரியா**

+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *